கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனை கொலை செய்து அவரது தலையை கொண்டுவந்தால் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசாக தருவதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பின் செய்தி தொடர்பாளர் சந்தர்வாத் என்பவர் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜின் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய சந்தர்வாத் கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக அம்மாநில அரசு செயல்படுவதாகவும் கூறினார். இதனால் கேரள மாநில அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அம்மாநில முதலமைச்சரான பினராயி விஜயனின் தலையை துண்டிக்க வேண்டும் எனவும் கூறினார். அவ்வாறு அவரது தலையை துண்டிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு தருவதாகவும் அவர் அப்போது அறிவித்தார்.
1 கோடி ரூபாய் பரிசு தருவதற்கு தன்னிடம் தேவையான சொத்துக்கள் உள்ளதாகவும் சந்தர்வாத் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இந்த அறிவிப்பை வெளியிடும்போது பாஜக எம்பி சித்தமணி மால்வியா மற்றும் எம்.எல்.ஏ. மோகன் யாதவ் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்கள் குறித்து ஆங்கில செய்தி நிறுவனமான Times Now செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தர்வாத்திடம் கேட்டபோது, பினராயி விஜயன் தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு தொகையாக அறிவித்தது உண்மைதான் என்றும், அவ்வாறு அறிவித்தது குறித்து கவலைபடவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும், பினராயி விஜயனை தான் கொல்லவில்லை எனவும் அவரது தலை கொண்டுவருபவருக்கு பரிசு தொகை மட்டுமே அறிவித்ததாகவும் அவர் கூறினார். இதனால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது என குறிப்பிட்டார்.
இவருடைய இந்த சர்ச்சை அறிவிப்புக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவருவதாகவும், நாட்டு மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
http://ns7.tv/ta/tamil-news/india/2/3/2017/rss-spokesperson-announces-rs-1crore-bounty-kerala-cm-pinarayi-vijayans