வியாழன், 16 மார்ச், 2017

கல்குவாரியில் வேலை செய்ய சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்!

கல்குவாரியில் வேலை செய்ய சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்!


கல்குவாரியில் வேலை செய்வதற்காக சென்றவர்கள் மீது செம்மரம் வெட்ட வந்ததாக கூறி ஆந்திரப்பிரதேச அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திஃபேன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி ஆந்திர மாநிலம் கடப்பாவில், தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 177 பேரை கடந்த 9 ஆம் தேதி கைது செய்தது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்டவர்களை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாதது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த கைது சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், கல் குவாரி வேலைக்கு சென்றவர்களை, சட்டவிரோதமாக கைது செய்து ஆந்திர அதிரடிப்படையினர் சித்ரவதை செய்துள்ளதாக குறிப்பிட்டார். 

அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை பிணையில் விடுவிக்க, தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும் எனவும் ஹென்றி திபேன் கேட்டுக்கொண்டார். 

அரசின் நலத்திட்டங்கள் சென்றடையாத காரணத்தால் தான் மாநிலம் தாண்டி இதுபோன்ற வேலைக்கு தமிழக தொழிலாளர்கள் செல்வதாகவும், குறிப்பிட்ட கால வரையறைக்குள் அரசின் நலத்திட்டங்கள் உரிய மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹென்றி திஃபேன் வலியுறுத்தியுள்ளார்.