குர்மெஹர் கவுர், பாஜக ஆர்.எஸ்.எஸ். மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி.விற்கு எதிராக கருத்து கூறியதில் இருந்து அவருக்கு சங்பரிவாரத்தினர் பல்வேறு ரீதியில் உளவியல் தாக்குதல் கொடுத்து வருகின்றனர். தனது தந்தையை கார்கில் போரில் இழந்த அப்பெண்ணின் தேசபற்றை குறித்து சில போலி தேசியவாதிகள் கேள்விகளும் எழுப்பினர்.
இந்நிலையில் இந்த சம்பவங்களால் மனதுடைந்த குர்மெஹரின் தாத்தா, தனது பேத்தியின் மீது வீசப்படும் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்துள்ளர். அதில், எனது மகனை கார்கில் யுத்தத்திற்கு இழந்தமைக்காக பாஜக எங்களுக்கு தரும் பரிசுதானா இது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தனது பேத்தி மீது உளவியல் தாக்குதகள் நடத்துபவர்கள் தங்களுக்கு தேசப்பற்று குறித்து பாடம் எடுக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பஞ்சாபிகள் தேசத்திற்காக வாழ்பவர்கள். அவர்கள் எங்களுக்கு தேசப்பற்று கற்றுத் தருகிறார்களா? நாங்கள் எங்கள் மகனை இழந்துள்ளோம். நாங்கள் எதையும் நிரூபிக்க தேவையில்லை.” என்று அவர் கூறியுள்ளார்
குர்மெஹர் மீது நடத்தப்படும் அத்தனை தாக்குதல்களுக்கும் காரணம், தான் ABVP யினரைக் கண்டு அஞ்சவில்லை என்று பலகையுடன் ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்ட படம் ஒன்றே.
இதனை அடுத்து ABVP க்கு ஆதரவாக பாஜக தலைவர்களும் கிரிக்கட் வீரரான ஷேவாக் மற்றும் திரைப்பட நடிகரான ரஞ்சித் ஹூடா ஆகியோரும் சமூகவளைதலங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த கருத்துக்களில் பெரும்பான்மையானவை குர்மெஹரை கேலி செய்வதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து கவுர் தெரிவித்த கருத்தக்களுக்கு கிடைத்த எதிர்வினைகள் அவரது தாயாரையும் குடும்பத்தையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. இதன் காரணமாகவே அவரின் தாத்தா கவுருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
இன்னும் 21 வயதான தன் பேத்தி இதுவரை தன் மீது இத்தகைய தாக்குதலை நடத்தியவர்கள் மீது எந்த கருத்தும் கூறவில்லை என்று கூறியுள்ளார். கார்கில் போரின் போது 26 பாகிஸ்தானிய வீரர்களை கொன்று தனது உயிரையும் கொடுத்த தன் மகன் மந்தீப் சிங்கிற்கு பாஜக அளிக்கும் பரிசு இதுதானா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது மறைவிற்கு பின்னர் அரசாங்கம் அவர்களுக்கு அடையாள அட்டைகளை கூட தரவில்லை என்றும் அவர்களது துயர் துடைக்க அரசு எதுவும் செய்யவில்லை என்றும் தற்போது தனது பேத்திக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு சிறிய கண்டனத்தை கூட இந்த அரசு தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
குர்மெஹர் கவுருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ அது குறித்து நான் கவலை கொள்ளவில்லை. அதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது. நான் என் மகனையே இழந்துவிட்டேன். அதிகபட்சம் அவர்களால் ஒரு உயிரை எடுக்க முடியும். அவ்வளவு தான் அவர்களால் செய்ய முடியும்.” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது டில்லியில் இருந்து ஜலந்தரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற குர்மெஹரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களால் தான் ஒரு போதும் அச்சப்படவில்லை என்றும் ஆனால் அதே சமயம் தான் இந்த பிரச்சனைகளில் தொடர விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.