திங்கள், 13 மார்ச், 2017

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இதழியல் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்

வரலாற்றுச்  சிறப்பு மிக்க திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் தமிழத்துறை சார்பில் 1.2.2017 அன்று, ‘இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் பணி’ என்ற மையக்கருத்தில், பல்கலைக்கழக  மானியக்குழுவின் (UGC) ஆதரவோடு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. 
கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் ஹாஜா நஜ்முதீன், தலைவர் எம்.ஜே.ஜமால் முகம்மது,  பொருளாளர் கே.ஏ.கலீல்,  துணைச் செயலாளர் எம்.ஜமால் முகமது மற்றும் நிர்வாகக் குழுவினர், வாழ்த்துரையாற்றி துவக்க அமர்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.முஹம்மது சாலிஹ் தலைமை வகித்தார்.
முதல் அமர்வில் எழுத்தாளர் ஜே.எம்.சாலி,  முனைவர் ஜெ.ராஜா முஹம்மது, முனைவர் சேமுமு முகமதலி ஆகியோர் உரையாற்றினர். ஜே.எம்.சாலி, தமிழ் இஸ்லாமிய இதழ்களின் பங்களிப்புகளைச் சிறப்பாகக் குறிப்பிட, தமிழ்நாடு  அரசு,அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள முனைவர் ஜெ.ராஜா முகமது, ‘இஸ்லாமிய இதழ்களில், தமிழக முஸ்லிம்களின் எழுச்சி வரலாறு ’என்ற தலைப்பில், வரலாற்றுத் தகவல்களுடன் கூடிய அரிய உரையை ஆற்றினார். 
ஏறத்தாழ 600 இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் இயங்கி வந்துள்ள தகவலைத் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். ‘இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் பணியையும்,ஆதரவுல்லாததால் அவை சந்திக்கும் நெருக்கடி களையும் பேரா.சேமுமு முகமதலி எடுத்துரைத்தார். பிற்பகல் அமர் வில் உரையாற்றிய சமரசம் இதழின் துணை ஆசிரியர், வி.எஸ்.அமீன் உணர்வுப்பூர்வமாக ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.தி இந்து நாளிதழ் துணைஆசிரியர் சையத்முத்தகர் சகாப், கிப்லா இதழ் ஆசிரியர் அப்துல்சலாம் ஆகியோரும் இஸ்லாமிய இதழியலின் பங்களிப்புகளைத் தமது கோணத்தில் எடுத்துரைத்தனர்.
விழாவின் நிறைவுப் பேருரை ஆற்றிய, தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி தனது உரையில்,‘‘ஊடகம் என்பது உள்ளங்களை ஊடுருவும் சாதனம். தனிமனித விருப்பத்தை சமூக விருப்பமாக மாற்றுகிற ஆயுதம். பெரும்பான்மைக்கே அதிகாரம் என்ற ஜனநாயகக் காலத்தில் ஊடகங்கள் தான் மக்கள் மனங்களை வடிவமைக்கும் முதன்மைக் கருவிகள். தமிழ் இதழியலின் பங்களிப்பு மகத் தானது. போதிய அளவில் அவை பணியாற்ற முடியவில்லை என்றாலும் போதையை ஊட்டி, சமூகத்தை முடக்கும் வேலைகளை இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் செய்ததில்லை.
ஆபாசத்திலிருந்தும், மலிவான உணர்வுகளைத் தூண்டுவதிலிருந்தும் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் தம்மைக் காத்துக் கொண்டன. இஸ்லாத்தின் மீதான அவதூறுகளுக்கும்,பழிகளுக்கும் இஸ்லாமிய இதழ்கள் பதிலடி தந்துள்ளன. அண்மையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒஸாமாபின் லேடன் படம் எடுத்து வரப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதற்கு, இது குறித்து ஓய்வுபெற்ற மக்கள் நீதிபதி அரிபரந்தாமனிடம் நேர்காணல் பெற்று உண்மைகளை உலகறியச் செய்தது மக்கள் உரிமை. சமரசம் இதழ் முஸ்லிமல் லாத மக்களையும் வெகு வாகக் கவர்ந்துள்ளது. எதிர்காலங் களில்,இஸ்லாமிய இதழ்கள் தமது கடமை உணர்ந்து கடும் பணியாற்ற வேண்டியுள்ளது. மக்களின் ஆதரவு அதற்குத் தேவை’’  என்றார்.பேரா.இஸ்மாயில் மற்றும் தமிழ்த் துறையினர் பன்னாட்டுக் கருத்தரங்கை சிறப்பாக ஒருங் கிணைத்திருந்தனர்.