இந்தியா முழுவதும் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிபொருள் எடுப்பதற்காக சுமார் 35 இடங்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு. அதில் 15 கிராமங்களை தமிழகத்தில் தேர்ந்தெடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்கு 100க்கும் மேற்பட்ட கிராம மக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் மட்டுமல்லாது ஐ.டி., ஊழியர்களும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போன்று 14வது நாளாக நெடுவாசலில் போராட்டத்தை வீரியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நெடுவாசல் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிண்டி காந்தி மண்டபம், மெரினா, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போராட்டக் களத்திற்கு விரைந்த போலீசார், மாணவர்களை ஒடுக்கும் வகையிலும், போராட்டத்தை தடுக்கவும் அவர்களை கைது செய்தனர்.
ஆனால், நுங்கம்பாக்கம் திருவள்ளுவர் கோட்டம் அருகே சுமார் 20 மாணவர்கள் நடத்திய போராட்டம் சோகத்தில் முடிந்தது. நேற்று காலை திடீரென அறவழியில் மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தை அறிந்த நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது ‘இங்கு அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
அதை தொடர்ந்து மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கியும், தரதரவென ரோட்டில் இழுத்து வந்து கைது செய்தனர்.
இது போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சென்னை முழுவதும் அனுமதியில்லாமல் திடீர் திடீர் என போராட்டம் நடத்தி வரும் சம்பவத்தால் போலீசார் சென்னை முழுவதும் உஷார் நிலையில் கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://kaalaimalar.net/neduvasal-protester/