வெள்ளி, 17 மார்ச், 2017

ஹேக்கிங்கிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் வழிகள்

இன்றைய டெக் உலகில் சராசரியாக தினமும் 4 மணி நேரம் அளவுக்கு ஒவ்வொருவரும் ஸ்மார்ட்போன்களுடம் நேரம் செலவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அன்றாட வாழ்வில் அவசியத் தேவையாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்களை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்.
லாக்:
உங்கள் ஸ்மார்ட்போன்களை லாக் செய்து வைத்திருப்பது பாதுகாப்பில் அடிப்படை அம்சமாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்துபோனாலோ, அதிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க இது உதவும். இதுதவிர கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப் லாக், டாகுமெண்ட் லாக்கர் உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தலாம்.
தெரியாத வைஃபை இணைப்புகளைத் தவிர்த்தல்:
இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பெரும்பாலான பொது இடங்களில் இலவச வைஃபை வசதி கிடைக்கிறது. நம்பகத்தன்மை இல்லாத வைஃபை இணைப்புகளை நீங்கள் பயன்படுத்தும் போது, அதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருக்கிறது. பொதுஇடங்களில் வைஃபையைத் தவிர்த்து விட்டு டேட்டா ரீசார்ஜ் செய்துகொள்வது நலம் பயக்கும். தவிர்க்க முடியாத சூழலில் பொது இடங்களில் உள்ள வைஃபையில் இணைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் வங்கி பண பரிவர்த்தனை உள்ளிட்டவைகளை மேற்கொள்ளாமல் தவிர்த்தல் பாதுகாப்பு.
செயலிகள் கூடுதல் கவனம் அவசியம்:
கூகுள் பிளே ஸ்டோரில் பெரும்பாலான செயலிகள் இலவசமாகக் கிடைக்கும் நிலையில், தரவிறக்கம் செய்யும் முன்பாக அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், செயலிகள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்க எளிதில் திருட முடியும்.
ஆன்டி வைரஸ்:
மால்வேர் தாக்குதல்களில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க நம்பகமான ஆன்டி வைரஸ்களைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் இணையத்தில் உலவும் மால்வேர்களில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சாப்ட்வேர் அப்டேட்:
ஸ்மார்ட்போன் மென்பொருளில் ஏற்படும் குறைகளை சரிசெய்து இயங்குதள அளவிலான அப்டேட்டுகளை அந்தந்த நிறுவனங்கள் வழங்குவதுண்டு. உங்கள் ஸ்மார்ட்போனின் சாப்ட்வேரினை உரிய நேரத்தில் அப்டேட் செய்துகொள்வதன்மூலம் பெரும்பாலான மால்வேர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.