சமுதாய மக்களைப் பெரிதும் கொந்தளிக்க வைத்தது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி.
விரும்பித் திருமணம் செய்துகொண்ட கணவனின் கொடுமைகள் தொடர்கதையாகி, ஒருநாள் அப்பெண்ணே துரத்தப்பட்டு விடுகிறார். அந்தப் பெண் ஒரு முஸ்லிம் பெண்.
கணவன் அவரை ‘தலாக்’ செய்துவிட்டதாகத் தகவல் அனுப்பிவிட்டு மறு திருமணத்திற்கு தயாராகிறார். இச்செய்திக்குப் பிறகு தொலைக்காட்சி நிறுவனம் அவரது கண்ணீர்க் கதையை வெளிப்படுத்துகிறது. நிகழ்ச்சியினிடையே அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு வழக்குரைஞரைத் தொடர்பு கொண்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு கேட்கிறார். அவர் கூறும் பதில் அப்பெண்ணை மேலும் கொந்தளிப்பிலும், குழப்பத்திலும் ஆழ்த்துகிறது.
அவர் அழுதுகொண்டே ‘இந்த சட்டத்தை தயவுசெஞ்சு எடுத்துடுங்க, என்னை மாதிரி எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை இது பாதிக்குது’ என்று மன்றாடும் காட்சி தொலைக்காட்சியில் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் விஷமாய்ப் பரவியது.
ஷரீஅத் சட்டத்தை ஒழித்து, பொதுசிவில் சட்டம் கொண்டுவரத் துடிக்கும் பாஜக பக்தர்கள் இந்தக் காணொளியைப் பரப்ப, சமுதாயமும் மார்க்கச் சட்டங்களும் அவமதிக்கப்பட்டதாய் உணர்ந்த சினம்கொண்ட உள்ளங்கள் பதிலடிகளைத் தொடங்க, சில பதிவுகள் அறிவுப்பூர்வமாகவும், சில பதிவுகள் அறியாமையோடும், சில பதிவுகள் அருவறுப்பாகவும் சமூக ஊடகங்களை ஆக்ரமித்தன.
இப்பிரச்சினை பற்றிக் கொண்ட நேரத்தில், பஹ்ரைன் நாட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த ம.ம.க தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, , ஜீ தமிழ் தொலைக்காட்சியிடம் விவரம் கேட்குமாறு மாநிலச் செயலாளர் பேரா.ஹாஜாகனியிடமும், அப்பெண்ணின் முழுமையான விவரங்களையும், நடந்த சம்பவங்களையும் நடுநிலையோடு விசாரித்துத் தகவல் அளிக்குமாறு கோவை மாவட்ட தமுமுக நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்துடன் பேசி விவரங்கள் கேட்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் வீட்டிற்கே சென்று கோவை மாவட்ட ம.ம.க.பொருளாளர் ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட சகோதரர்கள் சந்தித்து அவரது அனுமதியோடு காணொளியாகவும் பதிவு செய்தனர். தந்தை இல்லாத அப்பெண்ணுக்கு தாயும், ஒரு தம்பியும், ஒரு குழந்தையும் உள்ளனர். மிகவும் வறுமையான குடும்பம். காதலித்துத் திருமணம் செய்த கணவன், திருமணத்திற்குப் பிறகு மிகுந்த கொடுமைகளை அப்பெண்ணுக்கு இழைத்துள்ளான்.
பேசியதற்கு வருந்துகிறேன்
கோவையில் என்.எச்.சாலை நாகமுகல்லா ஜமாஅத் செயலாளராக இருந்த அக்பர் கவனத்திற்கு இப்பிரச்சனை வர, அவர், அப்பெண்ணின் கணவனை அழைத்து அவ்வப்போது கண்டித்துள்ளார். அக்பர் இறந்த பிறகு, இப்பெண்ணிற்கு தீர்வு கிடைக்கவில்லை. சேலத்தில் இப்பிரச்சினையை விசாரித்த ஒரு ஜமாஅத், பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அந்த ஜமாஅத்தைச் சேர்ந்த கொடுமைக்கார கணவனுக்கு ஆதரவாகப் பேச, இப்பெண் விரக்தியடைந்து தொலைக்காட்சி நிறுவனத்திற்குப் போயுள்ளார். பிறகு நடந்தவையே முன்னாள் சொன்னவை.
அப்பெண்ணை அவரது தாயார் முன்னிலையில் விசாரித்த கோவை மமக நிர்வாகி ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட சகோதரர்கள், அனுப்பிய தகவல்கள் மூலம்
- அப்பெண்ணின் வீட்டாரும் ஆதரவற்ற நிலை...
- கணவனும் அவர் வீட்டாரும் இழைத்த கொடுமைகள்...
- மார்க்கம் குறித்த அப்பெண்ணின் அறியாமை...
- தீர்வு தரவேண்டிய ஜமாஅத்களின் பொறுப்பின்மை... ஆகிய கூறுகளை அறிய முடிந்தது.
"ஷரீஅத் சட்டம் பற்றி முழுமையாக அறியாமல், அந்த வழக்குரைஞர் கூறியதையே சட்டம் என்று நினைத்து, ஷரீஅத் சட்டத்தை நீக்கவேண்டும் என்று தவறாகக் கூறிவிட்டேன். இதை எந்தத் தொலைக்காட்சிக்கும் வந்து சொல்ல நான் தயாராக இருக்கிறேன். குலா.. என்ற, பெண்ணுக்கான மணவிலக்குக் கோரும் உரிமை இருப்பதே எனக்குத் தெரியாது. ஷரீஅத் சட்டம் பற்றி அறியாமல், உணர்ச்சி வசப்பட்டு தவறாகப் பேசியதற்கு நான் வருந்துகிறேன்" என்று அதே பெண், காணொளியில் பேசியுள்ளார். சரி, சமுதாயத்திற்கும் ஷரீஅத் சட்டத்திற்கும் நேர்ந்த களங்கத்தை நாங்கள் துடைத்து விட்டோம் என மார்தட்டிக் கொள்ள முடியுமா, முடியாது...
அறியாமையின் காரணமாக, இஸ்லாமிய சட்டம் வேண்டாம் என்று கூறிய அப்பெண்ணுக்கு எதிராகப் பொங்குவதை விட, அந்நிலைக்கு அப்பெண்ணைத் தள்ளிவிட்ட பரிதாபச் சூழலை நாம் பரிவோடு கவனிப்பது கடமை. இஸ்லாம் மார்க்கத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று அது பெண்களுக்கு உருவாக்கித் தந்துள்ள சமூகப் பாதுகாப்பு ஆகும்.
ஒரு பெண்ணின் வாழ்வாதாரப் பிரச்சினை, உள்ளூர் அளவில் சரியாக விசாரிக்கப்பட்டு, நியாயம் கொடுப்பட்டிருந்தால், தொலைக்காட்சி வாசலில் போய் நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்காது.
இதுபோன்ற சம்பவங்களுக்காக இந்தத்துவா கும்பலும், இன்னபிற போலி முற்போக்காளர்களும் ஏங்கித் தவித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிற மதத்தைச் சேர்ந்த எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் தொலைக்காட்சிகளில் தங்களின் பரிதாபக் கதையைப் பாரறிய கூறியபோதும், அம்மதத்தின் சட்டங்களுக்கு எதிராக அவ்விவாதம் திருப்பி விடப்பட்டதில்லை.
ஆனால் பாதிக்கப்பட்டவர் முஸ்லிம் பெண் என்றவுடன் விவாதம் ஷரீஅத் சட்டத்தைக் குறிவைக்கிறது. இப்பெண் சுமந்த இழிவுகளுக்கு இஸ்லாமியச் சட்டமே காரணம் என்பது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கப் படுகிறது.
சுயபரிசோதனை தேவை
அமைப்புகளும் ஜமாஅத்களும் தம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.
அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைக்கு நியாயம் பெற்றுத்தர ஆவன செய்துள்ள அம்மாவட்ட தமுமுக நிர்வாகம், அந்தப் பெண்ணுக்கும் உரிய இஸ்லாமிய சட்ட விளக்கங்களை எடுத்துரைத்திருப்பது பாராட்டுக்குரியது. ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் இது ஒரு இட்டுகட்டப்பட்ட நாடகம் என்பது போலவும், திட்டமிட்ட சதி என்பதுபோலவும் பல சகோதரர்கள் நினைத்து நிலைத் தகவல்கள் பதிவிட்டனர்.
‘மெய்ப்பொருள் கண்பதறிவு’ என்ற பார்வையோடும், எந்த ஒரு செய்தியையும் ஆராயாமல் பரப்பக்கூடாது என்ற நபிவழியிலும், உண்மை நிலையை அறிந்து அறிக்கை தருமாறு தமுமுக தலைமை அறிவுறுத்த, அம்மாவட்ட சகோதரர்கள் சமுதாயப் பொறுப்புணர்வோடு இப்பிரச்சினையைக் கையாண்டுள்ளனர்.
தனிநபரின் அந்தரங்கத்தைத் தனக்கான வியாபார மூலதனமாய்க் கொண்டுள்ள ஊடகங்களிடம், நூறு விழுக்காடு அறத்தையும் நேர்மையையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
‘சொல்வதெல்லாமே உண்மை’ என்று ஏற்கமுடியாத அதேநேரம், சொல்வதில் இருக்கும் உண்மையையும் நாம் பரிசீலிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். இஸ்லாம் மார்க்கத்தின் மீது அவதூறுகளையும் பழிகளையும் சுமத்த, ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடு பாசிசக் கும்பல், பசித்தக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தில், குன்றென உயர்ந்து நிற்கும் கொள்கைக்குரிய சமுதாயம், குறைகளைக் களைந்து கூர்மைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.