பச்சைப் பட்டாணி... உலகின் ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில் பிரதானமான இடத்தில் இருக்கும் ஒன்று. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவும் இதுதான். அவசரத்துக்குப் பிள்ளைகளுக்கு பிரிஞ்சி சாதம் செய்து கொடுக்க வாங்குவோமே... கடைகளில் பாக்கெட்டுகளில் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்குமே... அதே பச்சைப் பட்டாணிதான். நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள்... என எத்தனையோ அபரிமிதமான சத்துக்களைக்கொண்டிருப்பது இது. நோய் எதிர்ப்புச் சக்தி தரும்; உடல் எடையைக் குறைக்க உதவும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்; கர்ப்பிணிகளுக்கு நல்லது... என இதன் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த பலே பச்சைப் பட்டாணி, தற்போது நம்மைக் கொஞ்சம் கலங்கவும் வைத்திருக்கிறது. `பச்சைப் பசேல்’ என்று தெரிவதற்காக இதில் கலக்கப்படும் ஒரு ரசாயனம் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது... கொஞ்ச நஞ்சமல்ல... மிக மோசமாக!
உலக அளவில், பச்சை, மஞ்சள்... இந்த இரு நிறங்களிலும் பட்டாணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. இன்றைக்கு, சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில் சில நாடுகள் பச்சைப் பட்டாணியை விளைவிப்பதில் முன்னணியில் நிற்கின்றன. கி.மு. 9750-ம் ஆண்டிலேயே மனிதர்கள் பச்சைப் பட்டாணியை சாப்பிட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. பர்மா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் `ஸ்பிரிட் குகை’ (Spirit Cave) என்ற இடத்தில் அந்த ஆதாரத்தைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வடமேற்கு ஈராக்கில் உள்ள ஜார்மோ (Jarmo) என்ற இடத்தில் கி.மு. 7000-க்கும் 6000-க்கும் இடைப்பட்ட காலத்தில் விளைவிக்கப்பட்ட பட்டாணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆக, இது மிக தொன்மையான தானிய வகை என்பதில் சந்தேகம் இல்லை. ஆரம்பத்தில் ஆதிவாசிகளால் உற்பத்தி செய்யப்பட்டு, யாத்ரீகர்கள் மூலமாக இது மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கும், பிற இடங்களுக்கும் பரவியிருக்கிறது.
பச்சைப் பட்டாணி குறித்தத் தகவல்கள் சொல்லச் சொல்லத் தீராதவை. முதலில் இதற்கு ஆங்கிலத்தில் `பீஸ்’ (Pease) என்றுதான் பெயர் இருந்தது. லத்தீனில் `பிஸம்’ (Pisum) என அழைக்கப்படும் இந்த வார்த்தை, பழைய கிரேக்கச் சொல்லான `பிஸோஸ்’, (Pisos), `பிஸன்’ (Pison) ஆகியவற்றிலிருந்து வந்தது என அடித்துச் சொல்கிறார்கள் வரலாற்றியலாளர்கள். ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி அகராதிப்படி, 1600-ம் ஆண்டு, `பீஸ்’ என்பது பன்மையைக் குறிக்கும் வார்த்தை என்பதால், 'se' என்ற கடைசி இரு சொற்களை எடுத்துவிட்டு, 'Pea' என அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 13-ம் நூற்றாண்டில் பாரீஸில், தெரு வியாபாரிகள் கூவிக் கூவி பச்சைப் பட்டாணி விற்ற தகவல்கள் எல்லாம் வரலாற்றில் கிடைக்கின்றன. 1800-ம் ஆண்டு, ஃப்ரான்ஸில் வெளியிடப்பட்ட, `தி வெஜிட்டபுள் கார்டன்’ (The Vegetable Garden) என்ற என்சைக்ளோபீடியாவில் பச்சைப் பட்டாணி, அதன் வகைகள் குறித்து விளக்குவதற்காக ஒதுக்கப்பட்ட பக்கங்கள் மட்டும் ஐம்பது! `கிரிகர் மெண்டல்’ (Gregor Mendel) என்ற ஆஸ்திரிய பாதிரியார் தொடங்கி எத்தனையோ பேர் பச்சைப் பட்டாணி குறித்த பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்; ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்றைக்கும் நம் இந்தியாவில் உள்ள பல சைவ ரெஸ்டாரன்ட்களில் நாண், ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள `பனீர் பட்டர் மசாலா’, `கோபி மசாலா’ என கேட்கிறவர்களுக்கு இணையாக, `கிரீன் பீஸ் மசாலா’ கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். சைவம், அசைவம் எந்த வகை பிரியாணியாக இருந்தாலும், இதைக் கொஞ்சம் போட்டால் அதன் மணம், சுவையே தனி. இதை சுண்டல், குருமா, கூட்டு, அவியல், பொரியல், குழம்பு... என பலவிதமான உணவுகளுக்குப் பயன்படுத்தலாம். நா அதிரும் சுவைக்கு உத்தரவாதம். பச்சைப் பட்டாணி மிக நல்லது; ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது என்பதை நம் முன்னோர்கள் முதல், இன்றைய மருத்துவர்கள் வரை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதில் ஏன் கலப்படம்?
முக்கியக் காரணம், பச்சைப் பசேல் எனத் தெரிந்தால்தான் பார்ப்பவர்களுக்குப் பிடிக்கும். நாவில் சுவை நரம்புகளைச் சுழல வைக்கும். அதற்காக இதில் கலப்படக்காரர்கள் கலப்பது `மாலாசைட் கிரீன்’ (Malachite Green) எனும் ரசாயனம். உலர்ந்த பட்டாணியை நீரில் ஊறவைத்துவிடுகிறார்கள். அதில், மாலாசைட் கிரீனைக் கலந்து நிறமேற்றுகிறார்கள். உலர்ந்த பட்டாணி மட்டுமல்ல, உலராத வகையிலும்கூட இந்தக் கலப்படம் நடக்கிறது. பச்சை மிளகாய், கோவைக்காய் போன்றவற்றிலும் இதே ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்தக் கலப்பட உணவுகளைச் சாப்பிடுவதால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
சரி... மாலாசைட் கிரீன் என்பது என்ன தெரியுமா? கிராமங்களில் சாணம் தெளித்து வாசலில் கோலமிடுவார்கள். சாணம் கிடைக்காததால், இதை கலர் பொடியாக (சாண பவுடர்) எடுத்து தண்ணீரில் கலந்து, வாசலில் தெளிப்பர். சில நாடுகளில், விஷக் காளான்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ரசாயனம் இது. ஆனால், 1900-ம் ஆண்டே இந்த ரசாயனம், உலக அளவில் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், இதைத்தான் இன்றைக்கு பட்டாணிக்குப் பளிச் பச்சை தர, நிறமேற்றியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக நமக்கு புற்றுநோய் வரக்கூடிய அபாயம் உண்டு; மரபணுக்களில் மாற்றங்கள் நிகழலாம்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.