திங்கள், 13 மார்ச், 2017

ஒற்றைத்தலைவலி முதல் புற்றுநோய் வரை விரட்ட உதவும் ஊதா நிற காய், கனிகள்!

த்திரிக்காய், நாவற்பழம், முட்டைக்கோஸ், திராட்சை, அத்தி, முள்ளங்கி, பீட்ரூட்... அத்தனையும் ஊதா நிறத்தில் (Purple)... ஒரு கூடை நிறைய! கற்பனை செய்து பாருங்கள்! கண்ணைக் கவரும் அந்தக் காட்சியை ஓர் ஓவியமாகத் தீட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்? அதைவிட அழகான, ஆரோக்கியமான விஷயம், ஊதா நிறப் பழங்களையும் காய்கறிகளையும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது! ஏன்? புற்றுநோயைத் தடுப்பதில் தொடங்கி, சிறுநீர்த் தொற்றைத் தடுப்பது வரை ஊதா நிற காய், கனி வகைகளுக்கு அபூர்வமான மருத்துவக் குணம் இருப்பதுதான் காரணம். அவை இங்கே...
ஊதா நிற காய்கள் 
புற்றுநோயைத் தடுக்கும்! 
கத்திரிக்காய், வெங்காயத்தின் மேற் பகுதி ஆகியவை ஊதா நிறத்தில் இருப்பதற்குக் காரணம் அதிலுள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavanoids) என்ற நிறமிகள்தான். இந்த ஃபிளேவனாய்ட்ஸ்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவற்றுக்குப் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு.
நினைவாற்றலை மேம்படுத்தும்! 
ஊதா நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ராடிகல்ஸை (Free Radicals) எதிர்க்கும் தன்மைகொண்டவை. அதனால், இவை நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன. உடலில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றுவதோடு, வயதானவர்களுக்கு ஏற்படும் பல்வேறுவிதமான நோய்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றும். பெர்ரீஸ் மற்றும் அடர்நிற சாக்லேட்டுகளில் இந்தப் பலன்கள் அதிகமாக உள்ளன. எடைக் குறைப்புக்கு உதவும்; பெண்களின் கருத்தரிப்புக்கு தூண்டுதலாக இருக்கும். 
ஒற்றைத்தலைவலியைப் போக்கும்!
பர்பிள் நிறமுள்ள செர்ரியில் இருக்கும் மோனோடெர்பென்ஸ் (Monoterpenes) என்ற பொருளானது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தூக்கமின்மை, பதற்றம், ஒற்றைத்தலைவலி, மன அழுத்தத்தைக் குறைக்கும். லேவண்டரைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயில், பைட்டோ நியூட்ரியன்ட் பெரில்லில் ஆல்கஹால் (Perillyl alcohol) உள்ளது. இது ஆன்டி-செப்டிக் மற்றும்  தொற்றுகளை எதிர்க்கும் தன்மைகொண்டது. உடல்நலத்தைச் சீராக வைத்திருக்க உதவும். ஆரோக்கியம் காக்கும்.
பிளம்ஸ் 
வீக்கம், கட்டிகளைச் சரியாக்கும்!
ஊதா நிறத்தில் உள்ள பிளம்ஸ், அத்தி போன்ற பழங்களில் பாலிபினால் (Polyphenol) நிறைவாக உள்ளன. இவை உடலில் ஏற்படும் கட்டி, வீக்கத்துக்கு எதிராகப் போராடும் ஆற்றல் கொண்டவை. அதோடு, இதயநோய், சர்க்கரை நோய், மூட்டுவாதம் ஆகியவற்றில் இருந்து காக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதைத் தடுக்கும். உடல் வலிமை பெற உதவும். 
அத்தி 
இதயத்தைப் பாதுகாக்கும்!
ஊதா மற்றும் நீலநிறப் பழங்கள், காய்கறிகளில் ரெஸ்வெரட்ரோல் (Resveratrol) என்ற கிருமி நாசினி (Phenol) உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். 
சிறுநீர்ப்பாதை தொற்றைத் தடுக்கும்
ஊதா நிற முட்டைக்கோஸில் அந்தோசயனின் (Anthocyanin) என்ற நிறமி உள்ளது. இது ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) என்ற பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும் தன்மைகொண்டது. வயிற்றுப்புண் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவை இந்த ஹெலிகோபேக்டர் பைலோரி பாக்டீரியாவால்தான் உண்டாகும். 
இன்னும் அல்சரைக் குணப்படுத்தும், கல்லீரலுக்கு வலுவூட்டும் என ஆரோக்கிய நன்மைகள் நீண்டுகொண்டே போகின்றன. அழகான விஷயங்கள் ஆரோக்கியமானவையாகவும் மாறுவது அபூர்வம். அந்த வகையில் ஊதா நிறப் பழங்களின், காய்கறிகளின் அழகை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றை ரசித்துச் சாப்பிடவும் செய்தால் அத்தனை நன்மைகளையும் பெறலாம். நலமாக வாழலாம்.