1 3 2022
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளதாக’ ஐ.நா.வின் 11வது அவசர சிறப்பு கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி அறிவித்துள்ளார்.
உக்ரைனின் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் “முன்நிபந்தனைகள் எதுவும் இல்லாமல்” பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு விலாடிமிர் ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிகாரிகள் பங்கேற்க தயார் என்றும் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் பிரிப்யத் நதி அருகே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
ஐ.நா. அவசரக் கூட்டம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று (பிப்.28) அவசரக் கூட்டம் நடத்தவுள்ளது. முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் 352 பேர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 116 குழந்தைகள் உள்பட 1,500-க்கும் அதிகமானாேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவ வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவலை உக்ரைன் மற்றும் ரஷ்யா வெளியிடவில்லை.
ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: அமெரிக்கா நடவடிக்கை
ரஷ்யாவின் அணு ஆயுதப் படைப் பிரிவினரை அந்நாட்டு அதிபர் புதின் உஷார் படுத்தியுள்ளதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன. இதையடுத்து, ரஷ்ய எரிசக்தி துறைக்கு புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அணு ஆயுதப் படைகளை ரஷ்யா உஷார் படுத்தியிருப்பது மூன்றாம் உலகப் போருக்கு கொண்டு சென்றுவிடக் கூடும் என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா பதிலடி
ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வரும் நிலையில், தங்கள் நாட்டின் பங்களிப்புடன் விண்வெளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கீழே விழச் செய்துவிடுவோம் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோஜின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
420 டன் எடை கொண்ட விண்வெளி ஆய்வு நிலையத்தை ஒருவேளை கீழே விழச் செய்தால் அது அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிலோ, இந்தியா அல்லது சீனாவிலோ விழக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/ukraine-russia-warputin-zelenskyy-kyiv-invasion-live-updates417912/