செவ்வாய், 1 மார்ச், 2022

மதத்துடன் தொடர்புடையதா ரஷ்ய – உக்ரைன் போர்?

 28 2 2022 

How is Russia-Ukraine war linked to religion : ரஷ்யாவுடனான உக்ரைன் அரசியல் வரலாற்றில் நிலவும் சிக்கல்கள் இருநாட்டின் மத சூழலிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றன. கீவை தளமாக கொண்டு செயல்படும் சுதந்திரமான எண்ணம் கொண்ட குழுவும், மாஸ்கோவின் தலைமை திருச்சபையின் கீழ் செயல்படும் மற்றொரு குழுவுமாக உக்ரைனின் பெரும்பானாலன ஆர்த்தோடோக்ஸ் கிறித்துவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் மத தேசிய வாதம் இருப்பது போன்று தோன்றினாலும், உக்ரைனின் வாழ்வா-சாவா என்ற போராட்டத்தில் அரசியல் விசுவாசம் மத விசுவாசத்தை பிரதிபலிக்கவில்லை.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் செயல்பட்டு வரும் மாஸ்கோ-சார்ந்த ஆர்த்தடாக்ஸ் திருச்சபைகளை பாதுகாப்பதற்காக தனது படையெடுப்பை நியாயப்படுத்திய போதிலும், உக்ரைனில் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறித்துவ பிரிவு தலைவர்கள் ரஷ்ய படையெடுப்பைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.

”எங்களுக்காகவும், எங்களின் அண்டை நாட்டினருக்காகவும் கடவுள் மீது கொண்ட பற்றுடன் எங்கள் உதடுகள் ஜெபத்தை கூறுகின்றன. நாங்கள் தீமையை எதிர்த்து போராடுகிறோம் அதில் வெற்றி காண்போம்” என்று கீவை தளமாக கொண்டு செயல்படும் ஆர்த்தோடக்ஸ் திருச்சபை மெட்ரோபோலிட்டன் எஃபானி கூறியுள்ளது.

பரஸ்பர சண்டைகளையும், தவறான புரிதல்களையும் மறந்து அன்பின் பெயரால் நம் தாய் நாட்டின் பெயரால் ஒன்றிணைவோம் என்று உக்ரைனில், மாஸ்கோ தலைமை திருச்சபையின் கீழ் செயல்படும் மெட்ரோபாலிட்டன் ஒனுஃப்ரை கூறியுள்ளது. மாஸ்கோ திருச்சபையின் கீழ் இயங்கினாலும் சுயதீனமாக முடிவெடுக்கு அதிகாரத்தை இந்த திருச்சபை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படையாக ஒற்றுமையாக இருப்பதாக தோன்றினாலும் கூட இந்த திருச்சபைகள் மிகவும் சிக்கலானவை. வியாழனன்று இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளில் திருச்சபையின் வலைத்தளத்தில் தங்களின் தேவாலயங்கள் மற்றும் மக்கள் தாக்கப்படுவதாகக் கூறி அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது. போட்டி திருச்சபைகள் இத்தகைய தாக்குதலை நடத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் இது முன் வைத்தது.

உக்ரைனின் ஆர்த்தடாக்ஸ் அமைப்புகளுக்கிடையேயான பிரிவு சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் எதிரொலித்தது, ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதில் திணறுகின்றன. சில அமெரிக்க திருச்சபைகள் இத்தகைய பிரச்சனைகளை புறந்தள்ளி அனைவரும் ஒற்றுமையாக இருந்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றன. அதே சமயத்தில் இந்த போர் இந்த பிரிவை மேலும் அதிகப்படுத்தும் என்று கூறுகின்றன.

உக்ரைனில் இருக்கும் மதங்கள் பற்றிய ஒரு பார்வை

உக்ரைன் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்கள். அதே சமயத்தில் கத்தோலிக்க சிறுபான்மையினரும் இங்கே உள்ளனர். இவர்கள் ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்களைப் போன்றே பைசைண்டின் வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலும் போப்பிற்கு விசுவாசமாக உள்ளனர். மக்கள்தொகையில் புராட்டஸ்டன்ட்டுகள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களும் சிறிய அளவில் உள்ளனர். உக்ரைனும் ரஷ்யாவும் மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொதுவான வரலாற்றால் பிரிக்கப்பட்டுள்ளன.

கீவான் ரஸ் என்ற இடைக்கால (Medieval) பேரரசு காலத்தை நோக்கி தங்களின் வம்சாவளி தேடலை நிறுவுகின்றனர் இம்மக்கள். அங்கே 10ம் நூற்றாண்டின் போது இளவரசர் வ்ளாடிமிர் இயற்கை வழிபாட்டை (Paganism) நிராகரித்து க்ரிமியாவில் ஞானஸ்தானம் பெற்று ஆர்த்தோடக்ஸ் கிறித்துவத்தை பின் தொடர்ந்தார்.

2014ம் ஆண்டு புடின் இந்த வரலாற்றை கூறி க்ரிமியாவை ஆக்கிரமித்ததை நியாயப்படுத்தினார். மேலும் இந்த நிலத்தை ரஷ்யாவின் புனித தளம் என்றும் வரையறுத்தார்.

ரஸ்ஸின் உண்மையான வாரிசு ரஷ்யா என்று புடின் கூறும்போது, உக்ரேனியர்கள் தங்கள் நவீன நாட்டிற்கு ஒரு தனித்துவமான பாரம்பரியம் உள்ளது என்றும், மாஸ்கோ சில நூற்றாண்டுங்களுக்கு முன்பு வரை ஒரு அதிகாரம் மிக்க சக்தியாக இல்லை என்றும் கூறி வருகிறது.

தேசிய தேவைகள், ஆர்வங்களின் அடிப்படையில் ஆர்த்தோடக்ஸ் திருச்சபைகள் செயல்பட்டன என்பது வரலாறு. பிராந்தியங்களில் சுயாட்சியைக் கொண்டிருந்தாலும் ஒரு பொதுவான நம்பிக்கையால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். இந்த ஆர்த்தோடாக்ஸ் கிறித்துவர்கள், கான்ஸ்டான்டினோப்பிளின் எக்குமெனிகல் பாட்ரியார்க் என்ற அமைப்பே தலைமை அமைப்பாக கருதினாலும் போப்பை போன்று உலக அளவில் அதிகார வரம்புகளை இவர்கள் பெற்றிருக்கவில்லை.

உக்ரைனில் அமைந்திருக்கும் ஆர்த்தோடக்ஸ் தேவாலயங்களை யார் நிர்வகிக்கின்றனர்?

300 ஆண்டுகளாக நடைபெற்ற நிகழ்வுகளை எப்படி புரிந்து கொள்கிறோமோ அதன் அடிப்படையில் தான் இதற்கு பதில் கிடைக்கும்.

ரஷ்யா வளர்ச்சி அடைந்து வந்த போது கான்ஸ்டாண்டினோபிள் திருச்சபை, ஒட்டோமான் ஆட்சியின் கீழ் பலவீனம் அடைந்தது. 1686 இல் எக்குமெனிகல் பேட்ரியார்ச் மாஸ்கோவின் தலைமை அருட்தந்தைக்கு கீவின் தலைமை ஆயரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கினார்.

ரஷ்யா இதனை நிரந்தர அதிகார மாற்றம் என்று கூறுகிறது. ஆனால் எக்குமெனிகல் தலைமை இது தற்காலிகமானது என்று கூறுகிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக சுதந்திரமாக செயல்படும் உக்ரைனின் ஆர்த்தோடெக்ஸ் தனித்தனியாக தேவாலயங்களை உருவாக்கின. அவைகளுக்கு 2019ம் ஆண்டு வரை முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தற்போதைய எக்குமெனிகல் பேட்ரியார்ச் பார்தோலோமேவ் உக்ரைனின் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தை மாஸ்கோவின் பிடியில் இருந்து முழுமையாக நீக்கி சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக அறிவித்தார். உக்ரைனின் நிலைமை மோசமாக இருந்தது.

மாஸ்கோவின் தலைமை திருச்சபையின் கீழ் தான் பல தேவாலயங்கள், மடங்கள் மற்றும் திருச்சபைகள் உக்ரைனில் செயல்பட்டு வந்தன. ஹோலி ரஸ்: தி ரீபிர்த் ஆஃப் ஆர்த்தடாக்ஸி இன் தி நியூ ரஷ்யா என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஜான் பர்கெஸ் இது தொடர்பான புள்ளி விபரங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது என்று குறிப்பிட்டார். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்களின் திருச்சபைகள் எந்த ஒழுங்கில் செயல்படுகின்றன என்பதும் கூட தெரியாது என்று கூறுகிறார் அவர்.

இந்த மத ரீதியான பிளவு இரண்டு நாடுகளின் அரசியல் பிளவுகளை பிரதிபலிக்கிறதா?

ஆம். ஆனால் இது சிக்கலானது.

உக்ரைனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, சுதந்திரமான எங்களின் தேவாலய அமைப்புகள் ஐரோப்பாவிற்கு சாதகமான, உக்ரைனின் கொள்கைகளுக்கு சாதகமான அமைப்புகளாகும் என்று 2018-ல் இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையேயான தொடர்பை நிறுவினார்.

ஆனால் யூதரான தற்போதைய அதிபர் விளாடிமிர் ஜெலான்ஸ்கி, மத தேசியவாதத்திற்கு அதே முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை. சனிக்கிழமையன்று, ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள் , உயர்மட்ட கத்தோலிக்க, முஸ்லீம் மற்றும் யூத பிரதிநிதிகளுடன் பேசியதாகக் கூறினார். உக்ரைனுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த ராணுவ வீரர்களின் ஆன்மாக்களுக்காகவும், நமது ஒற்றுமை மற்றும் வெற்றிக்காகவும் அனைத்து தலைவர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் இது மிகவும் முக்கியமானது, ”என்று அவர் கூறினார்.

புடின் இந்த பிரச்சனையை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்தார். பிப்ரவரி 21ம் ஹேதி அன்று பேசிய அவர், உக்ரைன் மீதான உடனடி ஆக்கிரமிப்பை ஒரு சிதைந்த வரலாற்றுக் கதையுடன் நியாயப்படுத்த முற்பட்டார். மாஸ்கோவை தளமாக கொண்டு செயல்படும் “Moscow Patriarchate” திருச்சபையை சீர் குலைக்கும் நோக்கில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது என்று அவர் ஆதாரமற்ற ஒரு கதையை கூறினார்.

ஆனால் மாஸ்கோவின் இந்த திருச்சபையின் கீழ் செயல்பட்டு வரும் மெட்ரோபோலிட்டன் ஒனுஃப்ரை, இந்த போரை, பைபிளில் தன்னுடைய சகோதரனைக் கொண்ட கைனுடன் ஒப்பிட்டு, உக்ரைன் தேசிய அடையாளத்துடன் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தது. ஒப்பிடுகையில் மாஸ்கோவின் தலைமைச் திருச்சபை பேராயர் கிரில் அமைதிக்கு அழைப்பு விடுத்தாரே தவிர இந்த படையெடுப்பு குறித்து குற்றம் சாட்டவில்லை.

மாஸ்கோவின் தலைமை திருச்சபையின் கீழ் செயல்பட்டு வரும் உக்ரைன் ஆர்த்தோடக்ஸ் திருச்சபை அமைப்பு வெகு காலமாக சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் தன்னுடைய இயல்பில் உக்ரைனின் தன்மையையே அதிகம் பிரதிபலிக்கிறது.

தேவாலயத்தில் இணைந்திருந்தாலும் இல்லையென்றாலும், சுதந்திரமான உக்ரைனில் வளர்ந்த ஏராளமான புதிய மதகுருமார்கள் உங்களிடம் உள்ளனர்” என்று அமெரிக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தேவாலயங்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸி கிரிண்டாட்ச் கூறினார். முன்னாள் சோவியத் யூனியனில் வளர்ந்த கிரிண்டாட்ச் கூறுகையில், “அவர்களின் அரசியல் விருப்பத்தேர்வுகள் அவர்களின் திருச்சபைகளின் முறையான அதிகார வரம்புகளுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிட்டார்.

கத்தோலிக்கர்கள் இதில் எங்கே நிற்கின்றனர்?

உக்ரைனில் உள்ள கத்தோலிக்கர்கள் அதிக அளவில் மேற்கு பகுதியில் இருக்கின்றனர்.

1596ம் ஆண்டு சில ஆர்த்தோடக்ஸ் உக்ரேனியர்கள் கத்தோலிக்கர்கள் அதிகம் இருக்கும் போலாந்து – லிதுவேனியன் ஆட்சியின் போது போப்பின் அதிகாரத்தின் கீழ் தங்களை இணைத்துக் கொண்டனர். பைசைண்டின் வழிமுறை மற்றும் திருமணமான பாதிரியார்கள் என்று சில தனித்துவமான நடைமுறைகளை உடன்படிக்கை ஒன்றின் மூலம் பின்பற்ற துவங்கிய பிறகு கத்தோலிக்கர்களின் பரவல் இங்கே அதிகரித்தது.

கத்தோலிக்க மற்றும் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பு போன்ற ஒப்பந்தங்களை ஆர்த்தோடக்ஸ் தலைவர்கள் வெகுவாக கண்டித்துள்ளனர். உக்ரேனிய கத்தோலிக்கர்கள் ஜார்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் கீழ் துன்புறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளனர்.

“ஒவ்வொரு முறை ரஷ்யா உக்ரைனைக் கைப்பற்றும் போதும், உக்ரேனிய கத்தோலிக்க தேவாலயம் அழிக்கப்படுகிறது” என்று பிலடெல்பியாவின் உக்ரேனிய கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்புத் தலைவர் மரியானா கராபிங்கா கூறினார்.

உக்ரேனிய கத்தோலிக்கர்கள் சோவியத்துகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டனர், பல தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். பல உக்ரேனிய கத்தோலிக்கர்கள் அமைதியாக தொடர்ந்து வழிபாடு செய்தனர். கம்யூனிசம் முடிவுக்கு வந்த பிறகு தேவாலய அமைப்புகள் வலுப்பெற துவங்கின.

இந்த வரலாற்றைக் கொண்ட உக்ரைன் கத்தோலிக்கர்கள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்ப்பதற்கு வலுவான காரணங்களைக் கொண்டுள்ளனர். சோவியத்துகளால் கத்தோலிக்கர்கள் மட்டும் ஒடுக்கப்படவில்லை. பல்வேறு சிறு குழுவினரும் அவர்களால் துன்பங்களை அனுபவித்தனர் என்று கூறினார் மரியானா.

உக்ரேனிய மற்றும் பிற கிழக்கு பகுதியின் கத்தோலிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், சமீபத்திய போப் ஆண்டவர்கள் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையுடனான உறவைக் கரைக்க முயன்றனர்.

ஆனால் ரஷ்ய படையெடுப்பு துவங்கிய நிலையில் போப் ஃபிரான்ஸிஸ் வெள்ளிக்கிழமை ரஷ்ய தூதரகத்திற்கு சென்று தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார். இதற்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததே இல்லை. இது மிகவும் அசாதாரணமான நிகழ்வு என்று வரையறுக்கிறது வாட்டிகன் நகரம்.

source https://tamil.indianexpress.com/explained/how-is-russia-ukraine-war-linked-to-religion-417938/