திங்கள், 31 அக்டோபர், 2022

”இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது” – கனிமொழி எம்.பி

 30 10 2022

பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்தது தான் இந்தியா. இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிரான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ’நவீனக் கல்வி
கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன’ என்ற நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. இந்த நூலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் விழா மேடையில் பேசிய அவர், “புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சுய மரியாதையை, நமது கல்வியை கெடுத்தது மெக்காலேதான் என்று தவறான பொய்யுரைகளை ஒரு சிலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். இங்கே உயர்பதவியில் இருப்பவர்கள் கூட, எந்த நாடும் ஒரு மதத்தை சாராமல் இருக்க முடியாது என்று சொல்கின்றனர். ஆனால் உலகில் நிறைய நாடுகள் மதச்சார்பற்ற நாடாக தான் உள்ளது.

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்று மெக்காலே கூறியதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர் கருத்தை இவர்கள் ஏற்பதில்லை. ஒரு காலத்தில் கிளர்க் வேலை கிடைக்க கூட நமக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்த வேலைக்கும் அவர்கள் தான் போய் கொண்டு இருந்தார்கள்.

நான் உட்கார்ந்து இருக்கிற இடத்தின் பக்கத்தில் நீ வந்து உட்காருகிறாய் அல்லவா.
அந்த இடத்திற்கு உன்னை கொண்டு வந்த கல்விக் கொள்கையை நாங்கள் நிச்சயமாக
ஏற்றுக் கொள்ள மாட்டோம். இருபதாயிரம், முப்பதாயிரம் புத்தகங்களை படித்தவர்களுக்கு கூட இந்த புத்தகத்தை அனுப்பி வைக்கலாம்.

இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் அறிவியல் குறித்து எத்தனை புத்தகங்கள் உள்ளது. இது எல்லாம் இவர்களுக்கு கிடைக்க கூடாது என்று நினைத்ததை, திராவிட இயக்கம் உடைத்து மக்களுக்கு சேர்த்தது. நமது கல்வி கொள்கை, ஒரே ஒரு மாணவன் இருந்தாலும், அவர்களுக்கும் கல்வி தர வேண்டும் என்பதே. பாட புத்தகத்தில் சரித்திரத்தை மாற்றி எழுதி வருகிறார்கள் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மெக்காலே கல்விக் கொள்கையை பற்றி தொடர்ந்து பொய் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிரான ஒன்று. மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது திணிக்கப்படும் பொழுது கண்டிப்பாக அதற்கு எதிர்வினை உண்டு. இந்தியா என்பது மக்களால் உருவாக்கப்பட்டது. பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்தது தான் இந்தியா. இதை சிதைக்க வேண்டும் என நினைப்பது மிகப்பெரிய தவறு” என்றார்.



source https://news7tamil.live/imposition-of-hindi-is-against-the-unity-of-this-country-mp-kanimozhi.html

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை” – ராஜீவ் காந்தி

 

அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை, ஒரு இக்கட்டான வழக்கில் தினந்தோறும் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்துவது போல் உள்ளது.

தனது வாக்கு வங்கியாக வைத்து கொள்ள கோவையை எப்போதும் பதற்றத்துடன் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். கோவை கார் வெடிப்பு குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை என நாங்கள் கேட்டால் அது எவ்வளவு முதிர்ச்சியற்றதாக இருக்கும். பால்வாடித் தனமான அரசியலை அண்ணாமலை செய்து வருகிறார்.

மத்திய உளவுத்துறை முபினை கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் அவரது பெயர் அந்த அறிக்கையில் இல்லை. ஐஎஸ்ஐஎஸ்- ஐ கண்காணிக்கும் பொறுப்பு என்ஐஏக்கு தான் உள்ளது. அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை.

கோவை மாநகரில் உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்பட்டாமல் இருப்பதாக கூறும் விவகாரத்தில் அண்ணாமலை பொய் சொல்கிறார். அடிப்படை ஆதாரமில்லாமல் பேசுகிறார். கோவை கார் வெடிப்பில் தமிழக காவல்துறையின் நடவடிக்கையால் தான் மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறையிடம் இருந்து எந்த அறிக்கையும் தமிழக அரசுக்கு வரவில்லை. கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், கண்ணுக்கு தெரியாத சட்டம் ஒழுங்கு பிரச்னையை அண்ணாமலை கையிலெடுத்துள்ளார்.

source https://news7tamil.live/annamalais-allegations-have-no-basis-rajiv-gandhi.html

உத்தரகாண்ட்-ஐ தொடர்ந்து குஜராத்: பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

 

31 10 2022

உத்தரகாண்ட்-ஐ தொடர்ந்து குஜராத்: பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
இந்தியாவில், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற அனைத்து மதச் சமூகங்களுக்கும் பொருந்தும்.

ஒரே மாதிரியான சிவில் நீதிமன்றத்தை கொண்டு வருவது குறித்து பார்க்கலாம்.
குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சனிக்கிழமை (அக். 29) மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த ஒரு குழுவை உருவாக்குவதாக அறிவித்தார்.
முன்னதாக நடப்பாண்டு மே மாதம், இதேபோன்ற செயலை மேற்கொள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான குழுவை உத்தரகாண்ட் அறிவித்தது.
ஏற்கனவே, பாரதிய ஜனதா ஆளும் அஸ்ஸாம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசமும் ஒரே குடிமைச் சட்ட யோசனையை ஆதரித்துள்ளன.

அரசியலமைப்பு UCC ஐ மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் பட்டியலிடுகிறது, பல தசாப்தங்களாக, குறிப்பாக பிஜேபி UCC க்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
மேலும் உச்ச நீதிமன்றமும் ஒரு சில சந்தர்ப்பங்களில் இதற்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒரே மாதிரியான சிவில் கோட் என்றால் என்ன?

திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு போன்ற அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து மதச் சமூகங்களுக்கும் பொருந்தும், முழு நாட்டிற்கும் ஒரு சட்டத்தை UCC வழங்கும்.
மேலும் இது அரசமைப்புச் சட்டத்தின் நான்காம் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் பிரிவு 44 ஒன்றாகும்.
பிரிவு 37 இன் படி, “இந்தப் பகுதியில் உள்ள விதிகள் எந்த நீதிமன்றத்தாலும் செயல்படுத்தப்படாது, ஆனால் அதில் வகுக்கப்பட்ட கொள்கைகள் நாட்டின் நிர்வாகத்தில் அடிப்படையானவை, மேலும் இந்த கொள்கைகளை உருவாக்குவது அரசின் கடமையாகும். சட்டங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி IV (கட்டுரைகள் 36-51) (UCC தவிர), குடிமக்களுக்கு சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி (கட்டுரை 39A), தொழில் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பு (கலை 43A) உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை உள்ளடக்கியது.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பின் அமைப்பு (கட்டுரை 48), சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் (கட்டுரை 48A), சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் (கலை 51) போன்றவையும் இதில் அடங்குகிறது.

அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகளுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன?

மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை (பகுதி III) பின்பற்றுகின்றன.
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மையத்தில் உள்ளன, மேலும் அவை நியாயமானவை – அதாவது அவை நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், மினெர்வா மில்ஸ் (Minerva Mills) தீர்ப்பில் (1980), உச்ச நீதிமன்றம் கூறியது: “இந்திய அரசியலமைப்பு பகுதிகள் III (அடிப்படை உரிமைகள்) மற்றும் IV (ஆணைக் கோட்பாடுகள்) ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையின் அடித்தளத்தில் நிறுவப்பட்டது. ஒருவருக்கு மற்றொன்றுக்கு முழுமையான முன்னுரிமை அளிப்பது என்பது அரசியலமைப்பின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகும்.

மேலும், சட்டப்பிரிவு 31C, வழிகாட்டுதல் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைச் செயல்படுத்த சட்டம் இயற்றப்பட்டால், பிரிவு 14 மற்றும் 19ன் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி அதை சவால் செய்ய முடியாது எனக் கூறுகிறது.

எனவே தற்போது, தனிநபர் சட்டத்தில் ‘ஒற்றுமை’ இல்லையா?

பெரும்பாலான சிவில் விஷயங்களில் இந்தியச் சட்டங்கள் ஏற்கனவே ஒரே மாதிரியாக உள்ளன – எடுத்துக்காட்டாக, இந்திய ஒப்பந்தச் சட்டம், சிவில் நடைமுறைக் குறியீடு, சரக்கு விற்பனைச் சட்டம், சொத்து பரிமாற்றச் சட்டம், கூட்டாண்மைச் சட்டம், சாட்சியச் சட்டம் போன்றவை ஆகும்.
இருப்பினும், மாநிலங்கள் ஏராளமான திருத்தங்களைச் செய்துள்ளன. , அதனால், மதச்சார்பற்ற சிவில் சட்டங்களில் கூட சில அம்சங்களில் பன்முகத்தன்மை உள்ளது.

மதங்களின் தனிப்பட்ட சட்டங்கள் தங்களுக்குள் வேறுபட்டவை. எனவே, நாட்டின் அனைத்து இந்துக்களும் ஒரே சட்டத்தால் ஆளப்படுவதில்லை.
பிரிட்டிஷ் சட்ட மரபுகள் மட்டுமல்ல, போர்த்துகீசியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் சட்ட மரபுகள் கூட சில பகுதிகளில் செயல்படுகின்றன.

வடகிழக்கில், 200 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் தங்களுடைய பல்வேறு பழக்கவழக்க சட்டங்களைக் கொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டமே நாகாலாந்தின் உள்ளூர் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கிறது.
இதே போன்ற பாதுகாப்புகளை மேகாலயா மற்றும் மிசோரம் அனுபவிக்கின்றன. சீர்திருத்தப்பட்ட இந்து சட்டம் கூட, குறியீட்டு முறை இருந்தபோதிலும், வழக்கமான நடைமுறைகளைப் பாதுகாக்கிறது.



source https://tamil.indianexpress.com/explained/after-uttarakhand-gujarat-seeks-to-bring-uniform-civil-code-what-is-it-533520/

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

 

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, “கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை குற்றத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்ததுடன், 75 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றியது. இந்த வழக்கில் சர்வதேச தொடர்புகள் இருக்கலாம் என்ற நோக்கில் இவ்வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சம்பவத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் விதமாக வெளிப்படையான முயற்சிகளை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. காவல்துறை விசாரணைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கத்திலிருந்தே ஊடகங்களில் பேசி வந்தார். காவல்துறையின் உளவு பிரிவில் உள்ளோரை மத அடிப்படையில் பிரித்து, குதர்க்கமாக பேசி, குறுகிய அரசியல் நோக்கத்துடனான அவரின் பேச்சுக்கள் எல்லை மீறின. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரில், பந்த் போராட்டம் நடத்துவோம் என்றும் பாஜக அறிவித்தது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பந்த் நடத்துவதற்கு ஆதரவாக ஊடகங்களில் பேசினார். 

ஆனால், பாஜகவின் பந்த் அறிவிப்பிற்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே, தாங்கள் பந்த் அறிவிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து அந்தர் பல்ட்டி அடித்தது பாஜக.

இப்போது, அடுத்தகட்ட சதிராட்டமாக, ஆளுநர் ரவியை களமிறக்கிவிட்டுள்ளார்கள். கோவையில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காவல்துறையின் துரிதமான செயல்பாட்டை பாராட்டிவிட்டு, என்.ஐ.ஏ விசாரணை தாமதப்படுத்தப்பட்டதாகவும், அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளது என்றும் கற்பனைச் சரடுகளை அள்ளி விட்டுள்ளார். மாநில அரசாங்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வரம்பில் உள்ளவர்களே. எனவே, முன்கூட்டியே இப்படியொரு அசம்பாவிதத்தை கணித்து தடுக்க தவறியது என்.ஐ.ஏ தான். ஒருவேளை காவல்துறையோடு இணைந்து தானும் விசாரணையை நடத்த வேண்டும் என என்.ஐ.ஏ விரும்பினால் அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு உள்ளது. உண்மை இப்படியிருக்க ஆளுநர் விமர்சிப்பதாக இருந்தால் என்.ஐ.ஏ மீதுதான் தன் விமர்சனத்தை திருப்பியிருக்க வேண்டும். ஒருவேளை ஆளுநர் கதைவிட்டது போல வழக்கின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தால் அதில் ஒன்றிய அரசாங்கம் தான் குற்றவாளியாக இருக்க முடியும். 

இந்திய அரசாங்கம் என்பதே மாநிலங்களையும் உள்ளடக்கிய கூட்டாட்சிதான். எல்லை பாதுகாப்பு தவிர அனைத்து பணிகளிலும் ஒன்றிய – மாநில அரசுகள் இணைந்து செயல்படும் விதமாகவே அரசமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசமைப்பினை உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் ஒற்றை ஆட்சி நிலைப்பாட்டில் நின்றுகொண்டு, பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியவை.அதற்கு உடந்தையாக ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வற்புறுத்துகிறோம்.

கோவை மக்களின் பாதுகாப்பையும், சமூக அமைதியையும் நிலைநாட்டுவதே தற்போதைய தலையாய கடமையாகும். தீவிரவாத, பிளவுவாத சக்திகளை முறியடித்திட வேண்டும். கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றம் இழைத்தோரை தண்டிக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.”

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/tamil-nadu-governor-r-n-ravi-speech-about-kovai-blast-left-parties-objects.html

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் நூலகம்

 

29 10 2022


திருச்சியில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா, நூலகங்களில் wi-fi வசதி, மாணவர்களின் உடல்நலன் காக்க சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து நூலகங்களில் மெய்நிகர் நூலகம் (Virtual Reality Library) அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகங்கள், அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் பலரும் இந்த மெய்நிகர் நூலகத்தை பயன்படுத்தி மகிழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், “தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மெய்நிகர் நூலகம், திருச்சி மாவட்டம் லால்குடியில் தொடங்கப்பட்டுள்ளது லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு பெருமை சேர்த்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் துறையூர் முசிறி ஆகிய தொகுதிகளில் உள்ள நூலகங்களுக்கும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. குழந்தைகள் மாணவர்கள் எளிதில் கண்டுணர இயலாத வானிலைஅறிவியல், ஆழ்கடல், அடர்ந்த காடுகள் அறிவியல், பரிசோதனைகள், உயிரியல், உடல் உறுப்பு செயல்பாடுகள், விலங்குகளின் அறிவியல், தொல்லியல் போன்ற பல பாடங்களை எளிதில் கண்டு கேட்டு உணர்ந்து முழுமையாக அறிந்து கொள்ள இயலும். இதனை பயன்படுத்தி லால்குடி தொகுதியில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 150 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

source https://news7tamil.live/virtual-library-with-modern-technology-inaugurated-by-minister-anbil-mahesh.html

கர்நாடக பத்திரிக்கையாளர்களுக்கு அரசு ரொக்கப் பரிசு வழங்கியதாக புகார்;

 29 10 2022

கர்நாடக பத்திரிக்கையாளர்களுக்கு பா.ஜ.க அரசு தீபாவளி ரொக்கப் பரிசு வழங்கியதாக புகார்; விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீபாவளியன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளை அனுப்பியதன் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ஊழல் வழக்குப் பதிவுசெய்ய வலியுறுத்தியதுடன், முதல்வரை ராஜினாமா செய்யக் கோரியது.

கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, “முதலமைச்சர் அலுவலகம் (CMO) பத்திரிகையாளர்களுக்கு ‘ஸ்வீட் பாக்ஸ் லஞ்சம்’ என்று கூறப்படுவது குறித்து நீதி விசாரணை கோரியது.

பத்திரிக்கையாளர்களுக்கு “பணம்” கொடுக்கப்பட்டது தனக்குத் தெரியாது என்று பசவராஜ் பொம்மை கூறியதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, “பசவராஜ் பொம்மை அரசின் லஞ்சம் இப்போது அப்பட்டமாக வெளிவந்துள்ளது, இந்த முறை பொறுப்பு முதல்வரின் வீட்டு வாசலில் உள்ளது” என்று கூறினார். மேலும், “இந்த முறை, திரு பசவராஜ் பொம்மை, கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் 1 லட்சம் ரொக்கத்தை அனுப்புவதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சகோதரத்துவத்திற்கும் லஞ்சம் கொடுக்க ரகசியமாகவும், வெளிப்படையாகவும், சதித்திட்டமாகவும் முயன்றார். லஞ்சத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்திய எங்கள் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்” என்று மாநிலத்தில் கட்சியின் விவகாரங்களைக் கவனித்து வரும் சுர்ஜேவாலா கூறினார்.

40 சதவீத ஊழல் நிறைந்த பசவராஜ் பொம்மை அரசு இப்படிச் செய்ய முயற்சிப்பது இது முதல் முறையல்ல என்று சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

கர்நாடக மக்கள் தொடங்கியுள்ள “PayCM” பிரச்சாரத்தால் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க அரசு பிரபலமடைந்துள்ளது என்று சுர்ஜேவாலா கூறினார்.

மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில், ஆட்சேர்ப்பு, பணியிடங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் லஞ்சம் நடந்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

“ஊழல்களில் சமீபத்திய நிகழ்வு, முதல்வர் பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது. பணம் எங்கிருந்து வந்தது? இந்த ரூ.1 லட்சம் பணம் தீபாவளியன்று பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக பொதுக் கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டதா அல்லது உங்கள் சொந்த நிதியில் இருந்து வந்ததா” என்று சுர்ஜேவாலா கேட்டார்.

முதல்வர் லஞ்சத்தில் ஈடுபட்டால், மாநிலத்தை யார் காப்பார்கள் என சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.

“பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை. லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பசவராஜ் பொம்மை உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று சுர்ஜேவாலா கூறினார்.

முன்னதாக, சுர்ஜேவாலா ஒரு ட்வீட்டில், “40 சதவீத ஊழல் சர்க்கார் பத்திரிகையாளர்களுக்கு 1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயல்கிறது!

திரு.பசவராஜ் பொம்மை பதிலளிப்பாரா- 1. முதல்வர் வழங்குவது “லஞ்சம்” இல்லையா?

2. 1,00,000 எங்கிருந்து வந்தது? பொது கருவூலத்தில் இருந்து வந்ததா அல்லது முதல்வரிடமிருந்தா?

3. அமலாக்கத்துறை/ வருமான வரித்துறை கவனிக்குமா?” லஞ்சமாக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பெறப்பட்டது, எவ்வளவு திருப்பிக் கொடுக்கப்பட்டது என்பதை மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/cong-demands-judicial-probe-into-cash-gifts-to-journalists-on-diwali-in-karnataka-532953/

வெளிநாடு செல்பவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்

 29 10 2022

பணிப்பெண் வேலைக்கு செல்ல கூடாதா? வெளிநாடு செல்பவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்

பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இருந்து இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும் நிலையை மேற்கொள்கின்றனர். இதில் படித்தவர்கள் தங்கள் படிப்புக்கேற்ற வேலையையும், படிக்காதவர்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகளையே வெளிநாட்டில் செய்வதற்காக செல்கின்றனர்.

இதில் படித்தவர்கள் தங்களுக்கு பிடித்தமான வேலையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஏற்கனவே வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன்னுடன் படித்த நண்பர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்கின்றனர். அதே சமயம் 3 மாதங்கள் சுற்றுலா விசா வாங்கிக்கொண்டு வெளிநாடு போய் தங்களது வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

ஆனால் படிக்காதவர்கள் தங்களது வெளிநாட்டு வேலைக்காக ஏஜெண்டுகளை நம்பியே வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு நல்ல வேலை அமைந்தாலும் பலரும் வெளிநாடு அழைத்துச்செல்லப்பட்டு ஏமாற்றப்படுகிறார். இங்கு ஒரு வேலைக்காக பணம் கட்டி விசா பெற்றுக்கொண்டு வெளிநாடு சென்றவுடன் அங்கு வேறு வேலையும், சம்பளம் குறைவாகவோ, சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஏஜெண்ட் மூலமாக ஏஜெண்ட்கள் மூலமாக குவைத் சென்ற 35 தமிழர்கள் அங்கு வேலை இல்லாமல் உணவிற்காக கஷ்டப்படும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் நாடு திரும்புவதற்கு கூட அவர்களிடம் பணம் இல்லாமல் பரிதவிப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை பார்த்த மறுநிமிடமே அவர்களை சந்தித்து அவர்களுக்கு உணவு கொடுத்து 19-பேரை இந்தியாவுக்கு திரும்பு உதவி செய்துள்ளது வெளிநாடு வாழ் தமிழர்கள நல அறக்கட்டளை நலச்சங்கம். இது தொடர்பாக இந்த சஙகத்தின் தலைவர் உஸ்மான் கான் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம்.

வெளிநாடு வாழ் தமிழர்கள நல அறக்கட்டளை நலச்சங்கம் தொடங்கிய தருணம் :

இந்தியாவில் இருந்து குறிப்பாக தமழகத்தில் இருந்து ஏறத்தாழ 120 நாடுகளுக்கு கல்விக்காகவும், பிழைப்புக்காக வேலைக்காவும் செல்கின்றனர். படித்தவர்கள் தங்கள படிப்பு சார்ந்த வேலைக்காக செல்கின்றனர். அதே சமயம் வாழ்வாதாரம் இழந்தவர்கள் குறிப்பாக விவசாய தொழில் நலிந்ததால் பல விவசாயிகள் வெளிநாடுகளுக்கு கூலி வேலைகளுக்காக செல்கின்றனர்.

இங்கிருந்து செல்பவர்கள் போகும்போதும் அங்கு வேலை செய்து சம்பளம் வாங்கும்போதும் எந்த பிரச்சினையும் இல்லை. அதே சமயம் அங்கு அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள். சிலர் தொழிலாளர்கள் விசாவில் செல்கின்றனர். இவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் உழைக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. முக்கிய காரணம் இவர்கள் யாரும் முறையான விசாவில் செல்வதில்லை.

இங்கிருந்து பெரும் எதிர்பார்ப்போடு வெளிநாடு வேலைக்கு செல்பவர்களுக்கு அங்கு 12, 14 சில முறை ஒரு நாளைக்கு 16 மணி நேரம்கூட உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அவர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. மற்றொன்று உணவு. நமது நாட்டு உணவுக்கு வெளிநாட்டு உணவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அடுத்து சீதோஷண நிலை மற்றும் மொழி பிரச்சினை. படித்தவர்களாக இருந்தால் ஆங்கிலம் இந்தி மொழியை பேசிக்கொள்வார்கள். ஆனால் பாமர மக்கள் செல்லும்போது அங்கு மொழி தெரியாமல் பெரிய சவாலை எதிர்கொள்கிறனர். இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வர்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் சொல்வது, என்று தெரியவில்லை. இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை.

இந்த மாதிரியான துன்பங்களை அனுபவிப்பவர்களை மீட்டெடுக்க கேரளா அரசு பல அமைப்புகளை கட்டமைத்துள்ளது. இங்கு பல என்.ஜி.ஒ. இது மாதிரியான பணிகளை ஆக்கப்பூர்வமாக செய்கிறார்கள். டெல்லி வரை அவர்களின் அலுவலகங்கள் இருக்கிறது. ஆனால் தமிழர்கள் பாதிக்கப்படும்போது இவர்களுக்கு உதவ உருப்படியாக எந்த அமைப்பும் இல்லை. இதை சரி செய்யும் நோக்கில் எங்களது தோழர்கள் குவைத் சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் கேரளா அமைப்புகளுடன் இணைந்து செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் தமிழர்களுக்காக நாம் ஏன் இப்படி ஒரு அமைப்பை கட்டமைக்க கூடாது என்று யோசித்து தொடங்கப்பட்டதுதான் இந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை நலச்சங்கம். இதை தமிழகத்தில் பதிவு செய்யும்போது அறக்கட்டளையாக பதிவு செய்து செயல்படுத்தி வருகிறோம். நலச்சங்கம் 7 வருடங்களாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் இயங்கி வருகிறது.   

இந்த அறக்கட்டளை தொடங்கியபோது சந்தித்த சவால்கள் என்ன?

நிறைய இருக்கிறது. வெளிநாட்டு வேலையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் வெளிநாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதே போல் தமிழக அரசில் 2021 வரை வெளிநாடு வாழ் மக்களுக்காக எந்த துறையும் கிடையாது. அரசாங்கமும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

நாங்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தால் அதை அவர்கள் மேலிடத்திற்கு அனுப்புவார்கள் அவர்கள் தூரகத்திற்கு அனுப்புவார்கள். தூதரகத்தில் இருந்து என்ன பதில் வருகிறது என்பது தெரியாது. இதற்காக ஒரு முறையாக கட்டமைப்பு இல்லாமல் இருந்ததே ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதேபோல் குவைத, சவுதி, துபாய் என ஒவ்வொரு நாடுகளுக்கு ஒவ்வொரு சட்டம் இருக்கிறது. இந்த சட்டங்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமமாக இருக்கும். இதனால் ஒரே சீரான முறையில் செயல்பட முடியாத நிலை உள்ளது.

ஒவ்வொரு நாட்டு சட்டங்களை தெரிந்துகொண்டு உள்வாங்கி அதற்கு ஏற்றார்போல்தான் நாம் நடந்துகொள்ள வேண்டும். இதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்களது நிர்வாகிகளுக்கு அதற்கேற்ற பயிற்சியை கொடுத்து அவர்களை தயார் படுத்துவதே தொடக்கத்தில் பெரிய சவாலாக இருந்தது.

வெளிநாடுகளில் பிரச்சினை மற்றும் கஷ்டத்தில் உள்ள தமிழர்களை எவ்வாறு கண்டுபிடிக்கிறீர்கள்?

இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தங்கள் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும்பொது ஆடியோ அல்லது வீடியோ மூலம் கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்க்கும்போது எங்ளுக்கு தெரிந்து அந்த நாட்டில் உள்ள எங்களது நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசுகிறோம். சிலர் நண்பர்கள் மூலமாக எங்களது நிர்வாகிகள் நம்பர் வாங்கி நேரடியாக எங்களை தொடர்புகொள்கிறார்கள். அதேபோல் வெளிநாடுகளில் பிரச்சினைகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் எங்களை தொடர்புகொள்கிறார்கள். இப்போது இணையதளம் மூலமாக எங்களை தொடபுகொள்வதே அதிகமாக உள்ளது.

இங்கிருந்து வெளிநாடு செல்லும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள் என்ன? (குறிப்பாக ஏஜெண்ட்)

முதலில் தங்களுக்கு விசா வழங்கும் ஏஜெண்ட் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவரா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இதில்தான் நாம் முதலில் தவறு செய்கிறோம். முதலில இதை தெரிந்துகொண்டு அதன்பிறகு எந்த நாட்டுக்கு வேலைக்கு செல்கிறாரே அந்த நாட்டின் சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் கொடுக்கும் பணம் சரிதானா என்பது தெரியும்.

தொழிலாளர் சட்டங்களை பற்றி தெரிந்துகொண்டால் தான் விசாவுக்கு எவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பது தெரியும். இதில் எதையும் நீங்கள் புதுசா தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இலலை. இதன் அனைத்து தகவல்களும் இணையத்தில் உள்ளது. படிப்பறிவு இல்லை என்றாலும், இன்டர்நெட சென்டரில் சென்று சொன்னால் அவர்களே அனைத்தையம் சொல்லிவிடுவார்கள்.

அதேபோல் அரசு தரப்பில் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியும் உள்ளது. அங்கு சென்று தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் விசா வழங்கும் டிராவல் ஏஜென்சி வேலைக்கு செல்பவருடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். இந்த ஒப்பந்தம் போடும் அந்த டிராவல் ஏஜென்சி முறையாக அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

இதில் பதிவு செய்யப்பட்ட டிராவல் ஏஜென்சி இல்லாமல் அவர்களுடன் தொடர்பில் உள்ள ஏஜென்சியிடம் ஒப்பந்தம் போடுவார்கள். இதை தொடர்ந்து வெளிநாடு சென்றபின் ஏதாவது பிரச்சினை நடந்தால் அரசு பதிவு செய்யப்பட்ட டிராவல் ஏஜென்சி தங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று சொல்விடுவார்கள் அதையும் கவனமாக பார்க்க வேண்டும்.

நாம் வேலைக்கு செல்லும் நாட்டின் சட்டதிட்டங்கள், நமக்கு வந்திருக்கும் விசா சட்டப்பூர்வமானதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நிறுவனம் அரசாங்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இதை கவனித்துக்கொண்டால் ஓரளவு பிரச்சினை வர வாய்ப்பில்லை. அப்படியே பிரச்சினை வந்தாலும் தீர்ப்பது எளிதாக இருக்கும். வெளிநாடு சென்றவுடன் முதல் வேலையாக அங்குள்ள இந்திய தூதரகத்தில் தகவல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினை வந்தால் அவர்கள் நம்மை தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்.

குவைத்தில் பரிதவித்த தமிழர்களை நாடு திரும்ப என்ன முயற்சி மேற்கொண்டீர்கள்?

தொலைக்காட்சியில் வந்த செய்தியை பார்த்துதான் எனக்கு தகவல் வந்தது. உடனே எங்களது குவைத் நிர்வாகிகளை தொடர்புகொண்டு இந்த வீடியோ பதிவுகளை அனுப்பி வைத்தோம். அங்குள்ள ஒரு நிரூபர் மூலமாக தமிழர் ஒருவரின் நம்பரை வாங்கினோம். அவர்கள் அனைவரும் குவைத் சிட்டியில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஒரு பாலைவனத்தில் மொத்தமாக இருந்தார்கள்.

அவர்களுடன் பேசியபோது எங்களை இங்கு விட்டு சென்றார்கள். ஆனால் இங்குள்ள ஓனர் நான் இந்த வேலைக்கு ஆட்கள் கேட்கவில்லை என்றும், வேறு வேலைக்கு ஆட்களை கேட்டேன். என்னால் இவ்வளவு தான் சம்பளம் கொடுக்க முடியும் என்றும் விருப்பம் இருந்தால் இருங்கள் இல்லை என்றால் கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டதாக கூறினார்கள்.

நாங்கள் இப்போது ஒரு செட் மாதிரியான இடத்தில் உட்கார்ந்திருக்கிறோம். சாப்பிட கூட ஒன்றும் இல்லை என்று சொன்னவுடன் அவர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையாக உணவு பொருட்களை அனுப்பி வைத்தோம். மறுநாள் இந்திய தூதரகத்தன் அபபாயின்மெண்ட் வாங்கி அவர்களை தூதரகத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுக்க வைத்தோம். உடனடியாக தூதரகம் அங்கிருந்து ஏஜெணட் பிரதிநிதிக்கு சம்மன் அனுப்பினார்கள். அவர் பிரச்சினை பெரிய அளவில் சென்றுவிடக்கூடாது என்று கூறி அவர்கள் அனைவருக்கு டிக்கெட் எடுத்து கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இது வழக்கமாக நடக்கும் நடைமுறை இல்லை. ஏஜெண்ட் எனக்கு தெரியாது என்று தப்பித்துக்கொள்ளத்தான் பார்ப்பார்கள். ஆனால் இந்த முறை தூதரகம் துரிதமாக செயல்பட்டதால் அந்த ஏஜெண்ட் உடனடியாக டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளார். இதில் குவைத் சென்ற ஒவ்வொருவரிடமும் 1.5 லட்சம் வாங்கியிரக்கிறார்கள். அங்கு சம்பளம் 30 ஆயிரம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஓனர் 13 ஆயிரம் தான் தருவதாக கூறியுள்ளார்.

13 ஆயிரத்தில் சாப்பிட்டு கடனை அடைப்பது சாத்தியமில்லை என்பதால் அவர்கள் திரும்பி ஊருக்கு வந்துவிடுவதாக கூறியுள்ளனர். இதனால் ஒவ்வொருவருக்கும் 1.5 லட்சத்தை ஏஜெண்ட் திரும்ப கொடுக்க வேண்டும். இப்போது அரசாங்கத்தின் கோபத்தை தனிப்பதற்காக அனைவருக்கும் ஏஜெண்ட் டிக்கெட் எடுத்து கொடுத்துவிட்டார். இதை தொடர்ந்து 19 பேர் கேரளா மாநிலம் கோழிக்கூடு வரை வந்துவிட்டார்கள். இங்கிருந்து தமிழகம் திரும்ப அவர்களிடம் பணம் இல்லை என்பதால் நமது சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.

அதன்பிறகு தமிழ அரசு 2 வேன்களை ஏற்பாடு செய்தது. அதன்பிறகு கோழிக்கூட்டில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்துகொண்டுத்து தமிழகம் திரும்ப வைத்தோம். அதன்பிறகு தமிழகம் வந்து சொந்த ஊர் திரும்ப பணமில்லாத நிலையில், அவர்களிடம் போன் இல்லாததால் நம்மை தொடர்கொள்ளவில்லை. அதன்பிறகு அந்த ஊர்க்காரர்கள் யாரோ உதவி செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பரிதவிக்கும் மக்களுக்காக இந்திய தூதரகத்தின் சப்போர்ட் எந்த அளவுக்கு உள்ளது?

ஒவ்வொரு நாட்டை பொறுத்து இருக்கிறது. குவைத்தில் நன்றாக இருக்கிறது. அதே சமயம் நமது அனுகுமுறையை பொருத்தது. குவைத்தில் சிறப்பாக உள்ளது. பிரச்சினை என்று யார் சொன்னாலும் துரிதமாக செயல்படுகிறார்கள். ஓமன் மாதிரியான நாடுகளில் ரொம்ப கவலைக்கிடமாக உள்ளது. மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லலாம். சவுதி அரேபியா பரவாயில்லை. துபாயில் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒருசில நாடுகளில் பாராமுகமாகத்தான் இருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் பாதிக்கப்பட்டாலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுத்த வேண்டும்.

புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவுரை என்ன?

தமிழக அரசு சார்பில் மேன்பவர் கார்ப்ரேஷன் ஒன்று இருக்கிறது. அதன் மூலமாக வெளிநாடு செல்ல விசா உள்ளிட்ட பல வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். இது முறையாக இருக்கிறது. அவர்கள் சென்று வரும்வரை தமிழக அரசின் நேரடி மேற்பார்வையில் இருப்பதால் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல் ஏஜெண்டுகளை முறையாக தேர்வு செய்ய வேண்டும். தனது ஏஜெண்ட் சரியானவரை என்பதை கண்டறிய தமிழக அரசே ஹெல்பட் லைன் வைத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தொடங்கியதில் இருந்து சிறப்பாக செயல்படுகிறது. அதிகாரிகளும் அமைச்சர்களை எப்போது தொடர்புகொண்டாலும் சரியாக பதில் அளிக்கிறார்கள். இப்போது நாம் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதை விட்டு விட்டு யார் வந்து சொன்னாலும் நம்பி பணத்தை கொடுத்து ஏமார்ந்துவிடக்கூடாது. இவ்வாறு பலர் ஏமார்ந்து கூலி வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். அப்படி செல்பவர்கள் அங்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதில் குறிப்பாக பணிப்பெண் வேலைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அங்கு பெண்களுக்கான முறையான சட்டத்திட்டங்கள் எதுவும் இல்லை. பணிப்பெண்களை முறைப்படுத்த எதுவும் விதிகள் இல்லை என்ற நிலையில, தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து பல பெண்கள் அங்கு பணிக்கு சென்று சொல்ல முடியாத பல கொடுமைகளை அனுபவித்துள்ளனர். பாலியல் ரீதியான சீண்டல்கள், உடல் மற்றும் மன ரீதியான பல பிரச்சினைகளை கடுமையாக சந்தித்திருக்கிறார்கள். இப்படி சென்று துன்ப்படும் பெண்களை அரசு துரித நடவடிக்கை எடுத்துதான் மீட்க வேண்டிய சூழல் உள்ளது. இங்கிருந்து பணிப்பெண்கள் வேலைக்கு சென்றால் அரசின் மேன்பவர் மூலமாகவோ, அல்லது பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலமாகவோதான செல்ல வேண்டும். மற்றபடி ஏஜெண்ட் மூலமாக போகவே கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும், வெளிநாடு செல்பவர்கள் பாதிக்கப்படும்போது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்தந்த நாடுகளில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்களை பிரதிநிகளாக தமிழக அரசு நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை வழக்க தமிழக அரசு இதை செய்ய வேண்டும். அவர்களை அனுகினால் அந்த நாட்டு சட்டத்திட்டங்கள் என்ன என்பதை அவர்கள் சொல்வார்கள். அதேபோல் சிறப்பாக செயல்படக்கூடிய சங்கங்களை கண்டறிந்து அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களின் சேவைகளை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/lifestyle/tamil-most-important-information-that-foreign-job-seekers-should-know-532909/