சனி, 14 மார்ச், 2026

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: மின்சார யூனிட்டுக்கு ரூ.2 மானியம்...

 

சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: மின்சார யூனிட்டுக்கு ரூ.2 மானியம்...

14 3 2026
ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாலும் கத்தார் உள்ளிட்ட எல்.பி.ஜி தயாரிப்பு நாடுகள் உற்பத்தியை நிறுத்தியிருப்பதாலும் இந்தியாவிற்கு எல்.பி.ஜி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதையடுத்து, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திற்கு எவ்வித பிர்சனையும் இருக்காது என்றும் போதிய எல்.பி.ஜி கையிருப்பு இருப்பதாகவும் சமீபத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் உறுதியளித்தது. 

ஆனால், வணிக ரீதியான சிலிண்டர் தட்டுப்பாடு நிலவியதால் பல ஓட்டல்கள் மூடும் சூழல் ஏற்பட்டது. சில ஓட்டல்களில் டீ, காபி, வடை ஆகியவற்றின் விலை உயர்ந்தது. தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் உணவு உற்பத்தி குறைக்கப்பட்டன. எனவே, வணிக ரீதியான சிலிண்டரை பயன்படுத்துவதற்கு மட்டும் மானியம் அறிவிக்க வேண்டும் அல்லது மாற்று வழியில் வணிகர்களுக்கு உதவிட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

இதையடுத்து, பல ஹோட்டல்கள் வணிக சிலிண்டருக்கு மாற்றாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் மின் கட்டணம் உயருமே என்ற அபாயமும் இருந்தது. இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில்தான் தமிழ்நாடு அரசு, மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்கள், டீக்கடைகளுக்கு  மானியம் வழங்க முன்வந்துள்ளது. 

வழக்கத்தை விட கூடுதலாக பயன்படுத்தப்படும் மின்சார நுகர்விற்கு, ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஓட்டல்கள், டீக்கடைகள், கிளவுட் கிட்சன், தங்கும் விடுதிகள் மட்டுமின்றி வீட்டில் இருந்து சமைத்து கடைகளில் விற்பனை செய்பவர்கள் என அனைவருக்கும் இது பொருந்தும். வணிக சிலிண்டருக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும் காலம் வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/gas-cylinder-shortage-govt-announced-rs-2-discount-for-one-unit-11212345