13 10 2022
இந்திய அறிவியல் கழகம் (IISc) சமீபத்திய டைம்ஸ் உயர் கல்வி (THE) தரவரிசையில் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது, இந்த தரவரிசை வெளிப்படைத்தன்மைக் கவலைகள் காரணமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பெரும்பாலான இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களால் (IITs) புறக்கணிக்கப்பட்டுள்ளது. .
இந்திய நிறுவனங்களில் IISc முதலிடத்தில் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக, 251-300 குழுவில் IISc இடம் பெற்றுள்ளது. உலகளவில், 104 நாடுகளைச் சேர்ந்த 1,799 பல்கலைக்கழகங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சிறந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்று டைம்ஸ் உயர் கல்வி (THE) தரவரிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கல்வி நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை, ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேனேஜ்மென்ட் சயின்சஸ் பல்கலைக்கழகம் (ஒட்டுமொத்த தரவரிசையில் 351-400) எடுத்துள்ளது, இந்த நிறுவனம் தரவரிசையில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை தளமாகக் கொண்ட தனியார் பல்கலைக்கழகமான ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேனேஜ்மென்ட் சயின்சஸ், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) 2022 பல்கலைக்கழகங்கள் பிரிவில் 96வது இடத்தைப் பிடித்தது.
இருப்பினும், ஷூலினி பல்கலைக்கழகம், கர்நாடகாவை தளமாகக் கொண்ட மற்றொரு தனியார் பல்கலைக்கழகமான JSS அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் உடன் இந்திய நிறுவனங்களில் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகம், ஒரு அரசு நிறுவனம், இந்தியாவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது (ஒட்டுமொத்த தரவரிசையில் 401-500).
கடந்த ஆண்டு, இந்திய பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஐ.ஐ.டி ரோபார், இந்த ஆண்டு THE பதிப்பில் ஆறாவது இடத்திற்கும், உலகளவில் கடந்த ஆண்டு 351-400 இலிருந்து 501-600 தரவரிசைக்குழுவுக்கும் சரிந்துள்ளது.
தரவரிசையில் பங்கேற்ற மற்ற ஐ.ஐ.டி.,களில், ஐ.ஐ.டி இந்தூர் 601-800 தரவரிசைக்குழுவிலும், ஐ.ஐ.டி பாட்னா மற்றும் ஐ.ஐ.டி காந்திநகர் 801-1000 தரவரிசைக்குழுவிலும் இடம் பெற்றுள்ளன.
மொத்தத்தில், THE இன் இந்த ஆண்டு தரவரிசையில் எட்டு ஐ.ஐ.டி.,கள் இடம்பெற்றுள்ளன என்று அதன் செய்தித் தொடர்பாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
தரவரிசை செயல்முறையில் எத்தனை ஐ.ஐ.டி.,கள் பங்கேற்றன என்பது உடனடியாகத் தெரியவில்லை. முழுமையான பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படும்.
நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அளவுருக்கள்: கற்பித்தல் (30%), ஆராய்ச்சி (30%), மேற்கோள்கள் (30%), சர்வதேசக் கண்ணோட்டம் (7.5%) மற்றும் தொழில்துறை விளைவு (2.5%). கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில், ஒவ்வொன்றும் 15% வெயிட்டேஜ் “நற்பெயர் கணக்கெடுப்பு” அடிப்படையிலானது.
”தரவரிசை அமைப்பு “IIT களுடன் (மற்றும் பிற நிறுவனங்கள்) பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், வேறுபாடுகளை களைவது குறித்து அவர்களுடன் விவாதங்களை தொடர்ந்து வரவேற்றது” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“குறிப்பிட்டபடி, எங்கள் தரவரிசை முறையின் விரிவான விளக்கத்தை நாங்கள் அளித்துள்ளோம், மேலும் அவர்களின் உள்ளீட்டைக் கேட்டோம். அடுத்த ஆண்டு தொடங்கப்படும் தரவரிசையின் அடுத்த பதிப்பில், அவர்களின் சில பரிந்துரைகளை நாங்கள் இணைத்துள்ளோம், ”என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இருப்பினும், ஐ.ஐ.டி பாம்பே மற்றும் ஐ.ஐ.டி டெல்லி ஆகியவை தரவரிசையில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் பாதிக்கப்படுவதாகக் கூறின. ஐ.ஐ.டி பாம்பே இயக்குநர் பேராசிரியர் சுபாசிஸ் சௌத்ரி, “அவர்களின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நேரடியாக ஒரு தரவரிசை நிறுவனத்திற்கு ஒதுக்கப்படுகிறது. செயல்முறை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எதில் பங்கேற்கிறோம் என்பதை அறியாமல் பங்கேற்க எந்த காரணமும் இல்லை,” என்று கூறினார்.
முக்கிய ஐ.ஐ.டி.,கள் கடைசியாக 2019 ஆம் ஆண்டு தரவரிசையில் பங்கேற்றன, அந்த அறிக்கை 2020 பட்டியலில் வெளியிடப்பட்டது. அதில் ஐ.ஐ.டி பாம்பே மற்றும் ஐ.ஐ.டி டெல்லியை 401-500 ஒட்டுமொத்த தரவரிசைக்குழுவில் ஐ.ஐ.டி ரோபார் மற்றும் ஐ.ஐ.டி இந்தூர் வளாகங்களுக்குப் பின்னால் வைக்கப்பட்டது.
source https://tamil.indianexpress.com/education-jobs/the-rankings-iisc-top-spot-indian-institutes-iits-overall-list-524367/