வேலைக்காக வெளிநாடு செல்வோர் அங்கு வேலை தரும் நிறுவனங்கள் குறித்தும் வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்தும் நன்கு விசாரித்துத் தெரிந்துகொண்ட பிறகே அந்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகமும், தமிழக காவல்துறையும் எச்சரிக்கை விடுத்து வரும் அதே நேரத்தில், வேலை தேடி சொந்த பந்தங்களை விட்டும், வீடு வாசலை அடமானம் வைத்தும் வெளிநாடு சென்றவர்கள் பிணமாகவும், போட்டுக்கொண்ட துணியோடு உயிர் வாழ்ந்தால் போதும் என்று தப்பிப்பிழைத்து சொந்த மண்ணுக்கு திரும்பி வருவது தொடர் கதையாகத் தான் இருக்கின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு 100 மென்பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சென்று சேர்ந்தவுடன் அவர்கள் மியன்மாருக்கு கடத்திச் செல்லப்பட்டதாகவும் இணைய வழிக் குற்றச்செயல்களில் ஈடுபடுமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. மறுத்தவர்களை அடித்து, உதைத்ததுடன் சரியாக உணவு தராமல் கொடுமைப்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து திருச்சி வழியாக அழைத்துச் செல்லப்பட்டு, கம்போடியாவில் இருந்து தப்பி விமான மூலம் திருச்சி வந்த வாலிபர் இப்ராஹீம் தெரிவிக்கையில் : தமிழகத்தில் இருந்து 400 பேர் அங்கே வேலைக்காக விற்கப்பட்டுள்ளனர். ஆயிரம் டாலர் (1000$) ஊதியம் என்று சொல்லி இங்கு உள்ள ஏஜெண்டுகள் சீன நாட்டினரிடம் 4000 டாலருக்கு விற்பனை செய்து விடுவதாக குறிப்பிட்டார்.
அங்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை. முழுவதும் ஏமாற்றுவது, மனசாட்சிக்கு விரோதமாக நடப்பது இதுபோன்ற செயல்களை செய்பவர்களை மட்டும் அடிக்காமல் துன்புறுத்தாமல் தனி அறையில் வைக்காமல் வைத்திருக்கின்றனர். மற்றவர்களை அடித்து துன்புறுத்தி மின்சாரத்தின் மூலம் ஷாக் கொடுத்து என அனைத்து துன்புறுத்தல்களும் தரப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.
அவர்களிடம் துப்பாக்கி வைத்து மிரட்டுவதாகவும், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற ஏஜென்ட்களிடம் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அவர் கூறினார் .
கடந்த ஜூலை மாதம் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து நான் சென்றேன். திருச்சி தில்லைநகரில் உள்ள ஏஜென்ட் ஷாநவாஸ் கேர் கன்சல்டன்ஜி மூலம் தான் அங்கு சென்றேன். இங்கு அவருக்கு உதவியாளராக முபாரக் என்பவரும், நெல்லை முஸ்தாக் என்பவரும் இருக்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை தேடும் வாலிபர்களை கண்டறிந்து அவர்களை இந்த ட்ராவல்ஸ் மூலம் வெளிநாட்டுக்கு விற்று விடுகின்றனர்.
நான் இவர்களிடம் ஏமாந்தது போல் வேறு எவரும் ஏமாந்து விட வேண்டாம். இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவரை திருச்சி எஸ்.டி. பி.ஐ கட்சியினர் மற்றும் தமிழக போலீசாரால் கம்போடியாவிலிருந்து மீட்கப்பட்டு திருச்சிக்கு விமானம் வந்து சேர்ந்ததாக தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-software-engineers-sale-to-4000-dollars-in-foreign-countries-520732/