தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசாணை 115-ஐ பலர் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 18-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தார். அதில், “பணியமர்த்தல் மற்றும் பயிற்சிக்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை இவ்வாண்டு தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார். மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறு மாத கால அளவிற்குள் முன்மொழிவதற்கான மனிதவள சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 18-ம் தேதி மனிதவள மேலாண்மைத் துறையானது அரசாணை எண் 115-ல் மனிதவள சீர்திருத்தக் குழுவினை அமைத்து ஆணையிட்டது. இந்த சட்ட திருத்தத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் இளைஞர்களின் அரசு வேலை பறிபோவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த சட்டம் சமூக நீதிக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 115-ஐ திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் அரசு தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். பலதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அரசாணை 115 என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
அரசாணை 115 ஏன்?
மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒருங்கிணைந்த திட்டம் அக்.18-ம் தேதியிட்ட அரசாணை 115-ன் படி மனிதவள சீர்திருத்த குழு அமைக்கப்பட்டது. இதில், எம்.எப்.பரூக்கி, சந்திரமவுலி, ஜோதி நாகராஜன் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு 6 மாதங்களுக்குள், சீர்திருத்தக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பணியாளர்கள் சேர்ப்பு, பதவி உயர்வு ஆகியவை பன்முக வேலைத்திறனோடு அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு பணிகளை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்பும் முறைகளை மேற்கொள்வது மற்றும் பிரிவு C மற்றும் D பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்ப சாத்தியக்கூறுகளை ஆராய்தல் அரசின் உயர்நிலை பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, வேலைத்திறன் மற்றும் மதிப்பீடுகளை ஆராய்தல் பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்குப் பின் ஆய்வு செய்து அரசு பணிக்குள் கொண்டு வருவது என இந்த சட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மூன்றாவது முகமை அதாவது வெளிமுகமை ஆட்சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனிதவள அரசுப் பணியிடங்களை அவற்றைக் கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது இதில் இடம் பெற்றுள்ளது. அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அப்பணியிடங்களின் வேலைத்திறன் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஆராயப்படுகிறது.
பணியாளர்கள் ஒப்பந்த முறையில் நியமித்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, அதன்பிறகு அவர்களைக் காலமுறை ஊதியத்தில் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதும் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால், அரசு வேலையை நாடும் இளைஞர்களின் கனவு பறிப்போவதாக பலதரப்பிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
source https://news7tamil.live/what-does-ordinance-115-mean-for-youth-employment.html