12 11 2022
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், திமுக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய கட்சியின் சின்ராஜ், மனித மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், நாகை மாலி, சின்னத்துரை, பாட்டாளி மக்கள் கட்சியின் பாலு, வெங்கடேஸ்வரன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக பாஜக இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து அரசியல் தலைவர்கள் பேசினர். அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரான மறுசீராய்பு மனு தாக்கல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், நூற்றாண்டு காலமாக நாம் போற்றி பாதுகாந்து வந்த சமூக நீதிக்கு தற்போது பேராபத்து சூழ்ந்துள்ளது. சாதியின் பெயரால் அடக்கி ஒடுககப்பட்ட மக்களை அதில் இருந்து மீட்டு அவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பையும் கொடுத்து அனைத்திலும் முன்னேற்றுவதற்கு பயன்படும் மாபெரும் தத்துவம் தான் சமூக நீதி கொள்கை.
ஆனால் இடஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என்று சொன்னவர்கள் தற்போது இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. கல்வி ரீதியான இடதுக்கீட்டை வழங்குவதுதான் சரியானது. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு செல்லாது என்று ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் நாங்கள் தடுக்க மாட்டோம்.
முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு உதவுவதை தடுப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். சாதி பேதமின்றி ஏழை மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. 5 ஏக்கருக்கு குறைவாக வைத்திருப்பவர்கள் ஏழைகளா? ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்திற்கு மேல் வருமான வரி செலுத்தும் நிலையில், ரூ 8 லட்சம் பெறுபவர்கள் ஏழைகள் என்று ஏற்க முடியுமா? மாதம் ரூ60 ஆயிரம் சம்பாதிப்பவாகள் ஏழைகளா? பொருளாதார இடஒதுக்கீடு என்பது சமூக நீதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-all-party-meeting-in-chennai-cm-stalin-speech-about-10-percent-reservation-540508/