12 11 2022
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு ஏதுவாக தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 4 நாட்கள் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் புது வாக்காளராக சேர்க்கப்படுவார்கள். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி குறித்து இங்கு பார்க்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகளின் படி, வருடத்திற்கு நான்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
ஜனவரி மட்டும் என்று இருந்த நிலையில் 2023-ம் ஆண்டில் ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிக்குள் 18 வயதை அடைபவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்கலாம்.
17 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, படிவம்
புதிய வாக்காளராக சேர விரும்புபவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு நீங்கள் மாறினால் அப்போதும் படிவம் 6 தான் பெற வேண்டும். ஏனென்றால் வேறு தொகுதியில் ஏற்கனவே வாக்காளராக இருந்தாலும், இந்தத் தொகுதியில் நீங்கள் ஒரு புதிய வாக்காளராகவே சேர்க்கப்படுவீர்கள்.
உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க படிவம் 7-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
உங்கள் பெயர், வயது, முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை திருத்தம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மட்டும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் படிவம் 8A-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
என்ன ஆவணங்கள் தேவை?
சிறப்பு முகாம்கள் உங்கள் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். அங்கு சென்று உங்களுக்கு தேவையான படிவம் பெற்று, வாக்குச்சாவடி நிலைய அதிகாரியிடம் கொடுத்து விண்ணப்பிக்கலாம். புகைப்படம், ஆதார், வயது சான்று, முகவரி சான்று, ஓட்டுநர் உரிமம், பாஸ்போட் உள்ளிட்டவற்றை கொடுத்து விண்ணப்பிக்கலாம்.
ஆதார் இணைப்பு
மேலும், வாக்குச்சாவடி மையங்களிலேயே உங்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/technology/how-to-enroll-for-new-voter-id-540488/