கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி அவர்களை வரவேற்பதாக கூறி உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கிராமப்புற மேம்பாட்டிற்கான அறிவாலயமாக திகழும் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். குஜராத்தில் பிறந்து ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த காந்தியடிகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள உறவு மிக அதிகம் என கூறினார்.
தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வந்த காந்தியடிகள், தமிழை விரும்பி படித்தவர். மோ.க காந்தி என தமிழில் கையெழுத்திட்டவர். மேலும் திருக்குறளை படிக்க தமிழை கற்றவர். உயராடை அணிந்து அரசியலுக்குள் நுழைந்த அவரை, அரையாடை உடுத்த வைத்தது இந்த தமிழ் மண் என முதலமைச்சர் கூறினார். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என சொன்னவர் காந்தியடிகள். கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தினார்.
இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டை சேர்ந்த மாணவர்களும் இங்கு படித்து வருவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. இதனை மேலும் வலுமைபடுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமை பெண் திட்டம், அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு போன்ற திட்டங்களால் அனைவரும் உயர்கல்வியில் பயில அரசு ஆவணம் செய்து வருகிறது.
நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனால் தமிழ்நாடு எல்லையை தாண்டி அனைத்து மாநில அரசுகள் உன்னிப்பாக கவனிக்கும் திட்டமாக உள்ளன. சமூகத்திற்கு சேவை செய்வதே ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியின் சிந்தனையை இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் தெரிவித்தார்.
source https://news7tamil.live/action-should-be-taken-to-bring-education-into-the-state-list.html