சனி, 12 நவம்பர், 2022

கேரளாவில் டிஜிட்டல் ரீ-சர்வே : பறிபோகிறதா தமிழக எல்லையோர நிலங்கள் ?

 

இரு மாநில எல்லைகளை கேரள அரசு தன்னிச்சையாக டிஜிட்டல் ரீ-சர்வே செய்து வருவதால் தமிழகத்துக்குச் சொந்தமான சுமார் ஆயிரத்து 400 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தமிழக நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேரள அரசு, மாநிலம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் மின்னணு மறுஅளவை எனப்படும் டிஜிட்டல் ரீ-சர்வே செய்து வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம், நில வரையறை, இடங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இப்பணிகளை மேற்கொள்வதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இப்பணியை 4 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே மறு அளவீடு செய்ய வேண்டுமானால், முதலில் தமிழக-கேரள எல்லையை அளவீடு செய்வதே சரியாக இருக்கும். அப்போதுதான் மறு அளவீடும் முழுமைபெறும். ஆனால் கேரள அரசு இதைச் செய்யாமல் வருவாய் நிலங்களை மறு அளவீடு செய்வதன் மூலம் தமிழகத்துக்குச் சொந்தமான சுமார் ஆயிரத்து 400 கிலோ மீட்டர் பரப்புள்ள எல்லையோர வனப் பகுதிகள் கேரளாவிடம் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளா உருவானபோது எல்லையை சரியாக வரையறை செய்யாததால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை உள்ளிட்ட பகுதிகளை தமிழகம் ஏற்கனவே இழந்துவிட்டதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. மேலும் பல தமிழக எல்லைப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு கேரளா செய்யும் தந்திரமான முயற்சியே டிஜிட்டல் ரீசர்வே என தமிழ் ஆர்வலர்களும், எல்லை மாவட்ட விவசாயிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே செய்வதற்கு முன்பாக எந்த சட்டப்பூர்வ நடவக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதும் எல்லையோர தமிழக விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. டிஜிட்டல் ரீசர்வே செய்வதற்கு முன்பாக தமிழகத்துக்கு கேரளா நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழகத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் இந்த மறுஅளவீட்டு பணியை அனுமதிக்க கூடாது என்று கூறியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரிய முடிவெடுப்பார் என்று கூறியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக அரசு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கனவே ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது அவற்றை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

– பரசுராமன்.ப  

11 11 2022


source https://news7tamil.live/digital-re-survey-in-kerala-are-tamil-nadus-borderlands-disappearing.html