கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த மாதம் 23-ம் தேதி அதிகாலை ஓடும் காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். ஜமேஷா முபீனின் வீட்டில் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, தமிழக அரசு வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைத்தது.
தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவை குனியமுத்தூரில் நேற்று (நவம்பர் 2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஏற்கனவே என்.ஐ.ஏ விசாரனை வளையத்தில் இருந்த ஜமேஷா முபீன் கோவை சிலிண்டர் வெடி விபத்தில் தொடர்பானது எப்படி? இதில் பல ஐயங்கள், கேள்விகள் உள்ளன.
மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தல்கா என்கின்ற நபர், உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு கார் விற்பனை மட்டுமே செய்துள்ளார். அதை வைத்துக்கொண்டு அவரை குற்றவாளியாக கருதுவது சரி இல்லை. இளைஞர் தல்காவின் குடும்பத்தினர் கனவில் கூட இத்தகைய அசம்பாவிதங்களை செய்ய மாட்டார்கள். எனவே இந்த சம்பவத்தில் என்.ஐ.ஏ மற்றும் காவல்துறையினர் விசாரணையை வேகப்படுத்தி குற்றமற்றவர்களை விடுவிக்க வேண்டும்” என்றார்.
அண்ணாமலைக்கு ஆவணங்கள் கிடைத்தது எப்படி?
தொடர்ந்து பேசிய அவர், “இவ்வழக்கில் என்.ஐ.ஏ. விசாரனை நடைபெற்று வரும் நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு வெடி விபத்து தொடர்பான ஆவணங்கள் கிடைத்தது எப்படி?
2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற காரணத்தினால் ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது அவதூறு பெயரை ஏற்படுத்தி கோவை ஒட்டுமொத்த மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அரசியல் சூழ்ச்சி செய்கிறது” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-car-cylinder-blast-muslim-organisation-leader-haider-ali-press-meet-535406/