சனி, 5 நவம்பர், 2022

அறநிலையத் துறையுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்

 

5 11 2022

அறநிலையத் துறையுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்

க.சண்முகவடிவேல்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாக பணிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த கோயிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தலைமையில் நடராஜர் கோயிலிலுள்ள சொத்துகள், நகைகள் மற்றும் கணக்குகளை ஆய்வுசெய்ய தீட்சிதர்களிடம் அனுமதி கேட்டது.

அப்போது, `ஆய்வுசெய்ய அறநிலையத்துறைக்கு அதிகாரமில்லை’ என்று மறுத்த தீட்சிதர்கள், அதன் பிறகு ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறையின் அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு நடராஜர் கோயிலிலுள்ள சொத்து விவரங்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக 1950-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையுள்ள சொத்துகள் மற்றும் ஆபரணங்களைக் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக தீட்சிதர்களுக்குக் கடிதம் அனுப்பியது அறநிலையத்துறை. ஆனால் அதற்கு அனுமதிக்க முடியாது என்று தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன், நடராஜர் கோயில் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், “சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது நீங்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்தக் கோயிலின் நிர்வாகம் செயல் அலுவலரிடம் (அரசிடம்) இருந்தபோது பெறப்பட்ட நன்கொடைகள், காணிக்கைகள் உங்களிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டன. அந்தக் கணக்குகளை ஆய்வுசெய்ய வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லையென்று பதில் அளித்தீர்கள்.

இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி ஆய்வு செய்ய குழுவை அனுப்பியபோது, அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லையென்று தங்களாலும், தங்கள் வழக்கறிஞராலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என்றும், அறநிலையத்துறை சட்டப் பிரிவு 107-ன்படியும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும் உங்கள் உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று நீங்கள் கூறிவருகிறீர்கள்.

அதனால், சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்றும், அதன் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிடக் கூடாது என்றும் நீதிமன்றத்தின் உத்தரவு நகல், அறநிலையத்துறையின் விதிகள் சபாநாயகர் கோயிலுக்குப் பொருந்தாது என்ற நீதிமன்ற உத்தரவின் நகல், இந்தக் கோயில் தீட்சிதர்களால் அவர்களின் சமுதாயத்துக்காகக் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து கோயில் பராமரிக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து தினசரி பூஜைகள்-திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், பொதுமக்களிடம் நன்கொடைகள் பெற்று தினசரி பூஜைகள் நடத்தப்படுவதாக இருந்தால் அந்த வரவு செலவு கணக்குகள், கோயில் அமைந்திருக்கும் நில உரிமை குறித்த வருவாய் ஆவணங்கள், நில உரிமை இறைவன் பெயரில் இருந்தால், அந்ந நிலம் மன்னர்களால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வாங்கப்பட்டதா என்பதற்கான ஆதாரங்கள் போன்றவற்றை 15.11.2022-க்குள் அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அப்படித் தவறினால் அடிப்படை ஆதாரங்களின்றி ஊடகங்களில் தங்களால் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு வருவதாக முடிவு செய்யப்பட்டு, அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அறநிலையத்துறையின் அந்தக் கடிதத்துக்கு பதிலளித்திருக்கும் நடராஜர்கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர், ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26 மற்றும் 29(1) விதிகளையும், இந்து அறநிலையத்துறை சட்டம் 107-வது பிரிவையும் முற்றிலும் மீறி, சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை சட்ட விரோதமாக எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என அறநிலையத்துறை முடிவெடுத்திருக்கிறது. இது இந்து சமய அறநிலைய அறக்கட்டளைச் சட்டம் 1959, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச  நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் உத்தரவுகளை அவமதிக்கும் வகையில் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வழங்கிய  தீர்ப்பின்படி, இந்து அறநிலையத்துறையோ, அதன் ஆணையரோ ஒரு சமயக் கோயிலின் கணக்குகளைக் கேட்க முடியாது. டிவிஷன் பெஞ்ச் தெளிவுபடுத்திய இந்தச் சட்ட நிலைப்பாட்டை எங்கள் பதில்களில் நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தும், அதை ஏற்பதைத் தவிர்த்திருக்கிறீர்கள். பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை என்று நீங்கள் மீண்டும் மீண்டும் கூறிய குற்றச்சாட்டில் எந்தத் தகுதியும் இல்லை.  

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் குலத்துக்குச் சொந்தமான சொத்து என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.  மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செய்த மேல்முறையீடு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. 1953-ன் சிவில் மேல்முறையீட்டு எண் 15-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலைமைப்பு பெஞ்சில்,  சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்களின் சொத்து என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தீட்சிதர்கள், கோயில் நிர்வாகத்தில்,  வழிபாட்டில், கடவுளுக்குச் செய்யும் சேவைகளில் பங்கேற்க உரிமை உண்டு. இது அவர்களின் பிரத்யேக மற்றும் சிறப்புரிமை.

மேலும், ஸ்ரீசபாநாயகர் கோயில் பொது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்றும், அரசியல் சாசன பிரிவு 26-ன் கீழ் பொது தீட்சிதர்கள் பாதுகாப்பு பெற்ற தனி சமயப் பிரிவினர் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தேவையற்ற வகையில் கோயிலின் வரவு செலவு விவரத்தையும், உங்கள் துறைக்கு உரிமை இல்லாத தனி சமயப் பிரிவு நிர்வாகத்திலுள்ள கோயிலில் திரும்பத் திரும்ப ஆய்வு செய்யப்போகிறோம் என்று குறிப்பிட்டு தொடர்ந்து விளக்கம் கேட்டு வருகிறீர்கள். அரசாணை 845/76-ன்படி ஸ்ரீ சபாநாயகர் கோயிலின் 3,500 ஏக்கர் நிலங்கள், அரசு தனி வட்டாட்சியர் பொறுப்பில் இருக்கிறது. அதற்கான வருவாய் விவரம் இதுவரை பொது தீட்சிதர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த கடிதத்துக்குப் பிறகு எந்தவித பதில் கடிதமோ அல்லது எந்தவித தொடர்போ அறநிலையத்துறையுடன் எங்களுக்கு இருக்காது. தங்களது துறை மூலம் ஸ்ரீ சபாநாயகர் கோயில் நிர்வாகத்தில் சட்ட விரோதமாக எடுக்கும் நடவடிக்கை மற்றும் உத்தரவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், அவை நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் உரிய சட்ட ஆலோசனை பெற்று நீதிமன்ற அவமதிப்பு உட்பட அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவிருக்கிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்திய பிறகு தற்போது தீட்சிதர் ஒருவர் அறநிலையத்துறை எங்களை கட்டுப்படுத்தவே முடியாது என கூறியிருப்பது  தமிழக அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே ஆன மோதல் உச்சத்தை தொட்டிருக்கிறது. இதனை அடுத்து மீண்டும் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் அதிரடி சரவெடிகளாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது எனலாம்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-chidambaram-nadatraja-temple-dikshitar-letter-to-department-of-hindu-charities-536400/