10 11 2022
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற 67 மாணவ-மாணவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று துபாய்க்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். தமிழகம் முழுவதிலிருந்தும் போட்டியில் வெற்றி பெற்ற 11-ம் வகுப்பு பயிலும் 33 மாணவிகள், 34 மாணவர்கள் என மொத்தம் 67 பேர் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,” நான் இந்த 67 மாணவ-மாணவிகளுக்கு தாயாகவும், தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருப்பேன். 5 ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை மற்றும் வெளியுறவுத் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் வருகின்றனர். துபாய் செல்வது மாணவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.
மாணவ மாணவிகளின் திறமையை ஊக்குவித்து அரசு சார்பில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சுற்றுலாவிற்கு தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இது சி.எஸ்.ஆர் நடவடிக்கையின் மூலம் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா என்றார்.
மாநில கல்வி கொள்கை
மேலும், 10% இட ஒதுக்கீடு பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் ஒரு குழு அமைத்துள்ளார். புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வந்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது தெரியும்.
முதலமைச்சர் பிரதமரை முதல் முறையாக சந்தித்தபோதே தமிழகத்திற்கு நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை தேவை இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தமிழக மாணவர்களுக்கு எந்த கல்வி முறை வேண்டும் என்பதை ஆணித்தனமாக முதலமைச்சர் பிரதமரிடம் கூறியிருந்தார். இந்த 4 நாட்கள் கல்வி சுற்றுலாவில் நான் தான் இந்த மாணவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க போகிறேன்” என்றார். அரசு அனுமதியுடன் வெளிநாட்டுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்வது தி.மு.க வரலாற்றில் இது முதன்முறை ஆகும்.
செய்தி: க. சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-school-students-taken-to-educational-trip-to-dubai-with-minister-539287/