சனி, 31 டிசம்பர், 2022

சிலிண்டர் வெடிப்பு; ஆளுநர் கருத்து அவசியமற்றது- முதலமைச்சர்

 

31 12 2022

கோவை சிலிண்டர் வெடிப்பில் ஆளுநர் ரவி கூறிய கருத்து அவசியமற்றது; அவசரமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், நமது அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக உணர்கிறோம். நமது மூத்த தேச நிறுவனத் தந்தைகள் எங்களிடம் ஒப்படைத்த அடிப்படை மதிப்புகள் மற்றும் கொள்கைகளில் எந்த ஆபத்தும் இருக்கக்கூடாது.

நமது அரசியலமைப்பு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்பும் நாங்கள், இந்திய தேசிய காங்கிரசை உள்ளடக்கிய ஒரு தேசிய கூட்டணியை முன்மொழிகிறோம். தமிழகத்தில் தி.மு.க., ஏற்கனவே அப்படி ஒரு கூட்டணியை அமைத்து, அதை மற்ற இடங்களில் செயல்படுத்தும் வெற்றிகரமான மாதிரியாக மாற்றியுள்ளது.

தமிழ்நாடு அமைதியான மாநிலம் ஆகும். இந்தியாவே எரிந்த காலத்திலும் இது அமைதியாகவே இருக்கும். அரசியல் வேறு, மதம் வேறு என்ற அரசியல் அறிவும் பகுத்தறிவும் நிறைந்த மக்கள், தமிழ் மக்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று சிலர் ஏமாந்து போய் கிடக்கிறார்கள். அவர்கள் தான் வன்முறை நிகழ்ந்து விடாதா என ஏக்கமாக அலைகிறார்கள்.

கோவை சிலிண்டர் வெடிப்பில் ஆளுநர் ரவி கூறிய கருத்து அவசியமற்றது, அவசரமானது. அந்த வழக்கை மூன்றே நாளில் என்.ஐ.ஏ.வின் விசாரணைக்கு நாங்கள் ஒப்படைத்தோம். கர்நாடக பா.ஜ.க. அரசு இதே போன்ற சம்பவத்தை ஆறு நாள் கழித்து தான் ஒப்படைத்தது. பதினைந்து நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் விதி ஆகும். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு வந்தவர் இப்படி அவசரப்பட்டு கருத்து கூறுகிறாரே என்று ஆச்சர்யப்பட்டேன், ஆதங்கப்பட்டேன்.

ஆனால் அவரது உள்நோக்கத்தை ஜனநாயக ரீதியில் தங்கள் வாக்குகள் மூலம் மாநில நிர்வாகப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த மக்களிடம் விட்டு விட்டு நான் மக்களுக்கான பணிகளில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறேன். அரசியல் சட் டத்தைப் படித்துப் பார்க்கும் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணக்கமாகவே இருக்க விரும்புவார்கள். ஆனால் நியமன ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அடக்கி ஆள நினைப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக் கூத்தாக்குவது ஆகும். கோடிக்கணக்கான மக்களின் ஜனநாயக உரிமையை அவமானப்படுத்துவது ஆகும்.

குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி மற்ற மாநிலங்களின் பார்வையில் தமிழகத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியாகும். மக்கள் பிரதிநிதிகள் நிரம்பிய சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டமும், தீர்மானமும் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படுமானால், அரசியல் சட்டத்தை செயலிழக்க வைக்கிறார்கள் என அர்த்தமாகிறது. இது பிரிட்டிஷ் ஆட்சியைவிட மோசமான பாணியாகும்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. பிரதான எதிர்க்கட்சி அல்ல! 2001 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நான்கு சட்டமன்ற உறுப்பி னர்களைப் பெற்றது. இருபது ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க. தோளில் ஏறி பா.ஜ.க. 4 தொகுதிகளைப் பெற்றுள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பலம். சொந்தக் காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. மத்திய அளவில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு அவர்களுக்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர, தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல.

அ.தி.மு.க.வை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய பா.ஜ.க. நினைக்கிறது. மற்றபடி தமிழ்நாட்டில் அவர்கள் வளரவில்லை. பா.ஜ.க. வளராமல் பா.ஜ.க.வினரே பார்த்துக் கொள்வார்கள். பா.ஜ.க. பற்றித் தான் உங்கள் கேள்வி கூட இருக்கிறது. தேவையற்ற ஊடக வெளிச்சம் அவர்கள் மேல் பாய்ச்சப்பட்டும் பா.ஜ.க.வின் தவறுகள் மறைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் மக்களிடையே மாய பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

source https://news7tamil.live/coimbatore-cylinder-blast-governors-opinion-unnecessary-chief-minister.html

தங்கம் விலை 31 12 2022

 டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,050 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.40,400 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,508 என்று, சவரனுக்கு ரூ.44,064 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,493 ஆகவும் சவரனுக்கு ரூ. 43,944 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,493 என்றும் சவரனுக்கு ரூ. 43,944 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,040 என்றும் சவரனுக்கு ரூ.40,320 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,498 என்றும் சவரனுக்கு ரூ.43,984 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 74,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,493 என்றும் சவரனுக்கு ரூ. 43,944 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 74,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,114 ஆகவும், சவரனுக்கு ரூ.40,912க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,579 என சவரனுக்கு ரூ. 44,632 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.74,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

source https://tamil.indianexpress.com/business/gold-silver-price-in-metropolitan-cities-31st-december-2022-568130/

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; லட்சத்தீவு 17 தீவுகளுக்குள் நுழைய தடை

 30 12 2022

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; லட்சத்தீவு 17 தீவுகளுக்குள் நுழைய தடை

தேங்காய்களை அறுவடை செய்வதற்காக தொழிலாளர்கள் தங்குவதற்கு தற்காலிக கட்டமைப்புகளைக் கொண்ட, மக்கள் வசிக்காத தீவுகளில் இருந்து பயங்கரவாதம் அல்லது கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க லட்சத்தீவு நிர்வாகத்தால் டிசம்பர் 28-ம் தேதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவு நிர்வாகம், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கவலைகளைக் காரணம் காட்டி, மொத்தமுள்ள 36 தீவுகளில் 17 தீவுகளுக்குள் நுழைவதைத் தடை செய்துள்ளது. இந்த 17 தீவுகள் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் மக்கள் வசிக்காத தீவுகள் ஆகும். இந்த தீவுகளில் நுழைய துணை மாஜிஸ்திரேட்டின் அனுமதி தேவை.

இது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி) பிரிவு 144-ன் கீழ் லட்சத்தீவு மாவட்ட நீதிபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேங்காய் அறுவடை செய்யும் தொழிலாளர்களின் வீடுகளாக தற்காலிக கட்டமைப்புகளைக் கொண்ட மக்கள் வசிக்காத தீவுகளில் பயங்கரவாத அல்லது கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் புதன்கிழமை இந்த அறிவிப்பின் மீது முடிவு எடுக்கப்பட்டது.

அவர்களில் சட்டவிரோத, சமூக விரோத மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களும் இருக்கலாம். எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லட்சத்தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“மக்கள் வசிக்காத சில தீவுகளில் தேங்காய்களை அறுவடை செய்வதற்காக தொழிலாளர்கள் தங்குவதற்கு தற்காலிக கட்டமைப்புகள் இருப்பதால், இந்த தொழிலாளர்களுடன் சட்டவிரோத, சமூக விரோத மற்றும் கடத்தல் போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களும் உள்ளனர் என்பதை நிராகரிக்க முடியாது. ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்களை மறைத்து வைப்பதற்காக தங்குமிடம் அல்லது மறைவிடத்தை நாடுகின்றனர்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத குழுக்கள் அல்லது அமைப்புகள் நாட்டின் முக்கியமான இடங்களையும் முக்கிய நிறுவனங்களையும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களையும் தாக்கி சேதப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“பயங்கரவாதத்தால் எழுந்துள்ள மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் தடுக்கவும், வன்முறை மற்றும் தேசவிரோத செயல்கள், கடத்தல், சட்டவிரோத செயல்கள், சமூக விரோத நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் முக்கியமான ராணுவ மற்றும் துணை ராணுவம், தொழில்துறை இடங்கள் மற்றும் மத வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும் பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதற்கான சாத்தியங்களைத் தடுக்கவும் மக்கள் வசிக்காத லட்சத்தீவின் 17 தீவுகளில் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி நுழைவதைத் தடை செய்வது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்” என்று மாவட்ட மேஜிஸ்ட்ரேட் உத்தரவில் கூறியுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் தண்டனையை மீறுபவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/lakshadweep-bars-entry-into-17-isles-citing-threat-to-national-security-568072/

பள்ளிகளுக்கு இணையம் வழியே அங்கீகாரம்: முதல்வர் அறிமுகம்

 

30 12 2022

பள்ளிகளுக்கு இணையம் வழியே அங்கீகாரம்: முதல்வர் அறிமுகம்

தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளை பெரும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்தனர்.

தலைமை செயலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர்கள் கூறியதாவது:

“பள்ளிக்கல்வித் துறையின் https://tnschools.gov.in என்ற வலைத்தளத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான இணைய முகப்பு வாயிலாக https://tnschools.gov.in/dms/?lang=en சுயநிதிப் பள்ளிகள் தொடங்க அனுமதி, ஆரம்ப அங்கீகாரம், தொடர் அங்கீகாரம், கூடுதல் வகுப்பு தொடங்க அனுமதி, கூடுதல் பிரிவுகள்/ மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவுகள் பள்ளி நிருவாக மாற்றத்திற்கான அனுமதி போன்ற பல்வேறு சேவைகளையும் இணையம் வழியாக மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, பள்ளிகள் அரசின் உரிய அனுமதியை ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படையாகவும் விரைவாகவும் பெற இயலும். இதனால் சுமார் 15,000 சுயநிதிப் பள்ளிகள் பயன்பெறும்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை ஆணையர் திரு. க.நந்தகுமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-chief-minister-m-k-stalin-launched-a-plan-for-private-schools-568088/

மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை: போலீஸ் கட்டுப்பாடு முழு விவரம்

 31 12 2022

மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை: போலீஸ் கட்டுப்பாடு முழு விவரம்
சென்னை கடற்கரைகளில் இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்று (டிசம்பர் 31ஆம் தேதி) இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், இன்று மாலை 6 மணிக்கு மேல் கும்பலாக பொதுமக்கள் வாகனங்களில் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டின் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க பொதுமக்கள் அதற்கு முதல் நாளில் இருந்தே ஆர்வமாக தயாராவது வழக்கமான ஒன்று. அந்த நிலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தமிழக காவல்துறை இன்று முதல் (டிசம்பர் 31ஆம் தேதி) ஒருசில கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று (டிசம்பர் 31ஆம் தேதி) இரவு 8 மணி முதல் மெரினா காமராஜர் சாலை, எலியட்ஸ் கடற்கரையில் (பெசன்ட் நகர்) போக்குவரத்திற்கு காவல்துறை தடை விடுத்துள்ளனர்.

மேலும், டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து ஜனவரி 1 வரை (புத்தாண்டு தினம்) சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1ஆம் தேதியான புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் மக்கள் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நட்சத்திர விடுதிகளில் 80% நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, நட்சத்திர விடுதிகளில் நீச்சல் குலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் வருகைத்தரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/new-year-celebration-restrictions-by-chennai-police-31st-december-2022-568147/

வெள்ளி, 30 டிசம்பர், 2022

சென்னை வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு

 29 12 2022

சென்னை வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் இந்த சமயத்தில், புது விதமான வேரியண்ட் சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதிலும் தீவிரமாக இருக்கின்றனர்.

மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் இதே முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்றிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக விமான நிலையங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.

சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளில் அல்லது வேறு நாடுகளில் இருந்து வந்தாலும், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பயணிகளின் விவரங்கள் சேகரித்து தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துபாய், கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த வாலிபருக்கும், பல்லாவரத்தை சேர்ந்த வாலிபருக்கும் நடத்திய சோதனையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த இரண்டு நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலங்குடியை சேர்ந்தவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர வாலிபர் குறித்து ஆந்திர மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் இவர்கள் நான்கு பேருக்கும் எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை அறிந்து கொள்ள நான்கு பேரின் ரத்த மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு இவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

விமானத்தில் இவர்கள் நான்கு பேருடன் அமர்ந்து வந்த பயணிகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/passengers-from-cambodia-dubai-infected-with-covid-567209/

ஆளுநர் மாளிகையை முற்றுகை இடச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்: டி.ராஜா ஆவேச பேச்சு

 29 12 2022

ஆளுநர் மாளிகையை முற்றுகை இடச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்: டி.ராஜா ஆவேச பேச்சு
Communist Party of India supporters detained for blocking Tamilnadu Governor RN RAVI’s House: D. Raja's furious speech Tamil News

தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட டி.ராஜா தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்றுள்ளனர். இந்தப் பேரணியை நல்லகண்ணு தொடங்கி வைக்க பேரணியில் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சைதாப்பேட்டை குயவர் வீதியில் தொடங்கிய பேரணி ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்த இப்பேரணி சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே சென்றபோது, பேரணியில் கலந்துக்கொண்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது காவல்துறைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் டி. ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்புராயன், செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தளி ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்

இந்த பேரணிக்கு முன்னதாக மேடையில் பேசிய டி.ராஜா, “பல மொழிகள், கலாச்சாரம் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியா, கூட்டாட்சி அடிப்படையில் செயல்படுகிறது. ஒற்றை பரிணாம ஆட்சியாக இது இருக்க வேண்டும் என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. பன்முகத் தன்மைக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் சனாதன நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் சில செயல்களை செய்ய விரும்புகின்றனர். தமிழக ஆளுநர் சனாதன நடவடிக்கை குறித்து பேசுகிறார். இந்தியாவில் அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும். ஆளுநர் பதவி தேவையற்றது என வலியுறுத்துகிறோம்.

அதனால் தான் தமிழக முதல்வர் பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பேசி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவாக பாஜக செயல்படுகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக்கு எந்த வெற்றியும் கிடைக்காது. தமிழக மக்களை காக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் போராட்டம் அவசியம். அத்தகைய போராடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்கு வகிக்கும்” என்று கூறினார்.

இந்த பேரணிக்கு பல்வேறு மாவட்டத்தில் வந்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை காவல்துறை கைது செய்தனர். பேரணி காரணமாக சைதாப்பேட்டை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-supporters-detained-for-blocking-tn-governors-house-d-rajas-furious-speech-tamil-news-567322/

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடிய போட்டோஷாப் கட்சித் தலைவர்’: ஸ்கூப் நியூஸ் சொல்லும் செந்தில் பாலாஜி

 

30 12 2022

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சியினர் மீது ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும், ட்விட்டரில் நேரடியாகவும், கலாய் செய்யும் வகையிலும் இவர் முன்வைத்து வரும் விமர்சனங்கள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருவதுடன், மீம் கிரியேட்டர்களும் செந்தில் பாலாஜியின் கருத்துக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்கூப் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் சமீபத்திய ட்விட்டர் பதிவில், கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார்.

ஆனால், அவரது பதிவில் “இவர்கள் தான் அஅவர்கள்” என்று குறிப்பிடாமல் சூசகமாக ‘போட்டோஷாப் கட்சித் தலைவர்’, ‘இளைஞரணியின் தேசியத் தலைவர்’ என்று பதிவிட்டுள்ளார். எனினும், அவர் குறிப்பிட்ட அந்த தலைவர்களை இணையவாசிகள் கண்டுபிடித்து விட்டதாகவும், அவர்கள் யார் என்றும் அடையாளம் காட்டி, அந்த பதிவின் கீழ் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-ministr-senthil-balaji-recent-tweet-on-photoshop-party-leader-apology-letter-in-flight-567347/

ரிமோட் வாக்குப்பதிவு; தேர்தல் முறையின் மீது முதலில் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்- காங்கிரஸ்

 

30 12 2022

ரிமோட் வாக்குப்பதிவு; தேர்தல் முறையின் மீது முதலில் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்- காங்கிரஸ்
Congress wary of remote voting, tells EC need to restore trust in electoral system first

தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு கடுமையாக பதிலளித்த காங்கிரஸ், மின்னணு இயந்திரங்களை (EVM) தவறாகப் பயன்படுத்துமோ என்ற அச்சத்தை முறைப்படி நிவர்த்தி செய்யாமல் அதை வெளியிடுவது, அமைப்பின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என்று கூறியது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பிக்கையானது, தேர்தல் ஆணையத்தின் மீது மத்திய அரசால் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக மீண்டும் மீண்டும் மீறப்பட்டுள்ளது.

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன, துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் தவறான பயன்பாடு குறித்த அச்சங்கள் முறையாக கவனிக்கப்படவில்லை. வாக்காளர்களும் கட்சிகளும் தேர்தல் முறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.

இந்த சந்தேகத்திற்கிடமான முறையை, பல தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மற்ற இடங்களுக்கு நீட்டிக்க முடியுமா என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள். இது அமைப்பின் மீதான நம்பிக்கையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல தொகுதிகளின் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை நிரூபிக்க, ஜனவரி 16 அன்று, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அவர்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்களைக் கேட்டுள்ளதாகவும் வியாழனன்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முன்மொழியப்பட்ட திட்டம் உள்நாட்டில் இடம்பெயர்வு காரணமாக வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதைத் தவறவிடாமல் தடுக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் யுகத்தில் இடம்பெயர்வு காரணமாக உரிமையை மறுப்பது ஒரு விருப்பமல்ல என்று அது கூறியது.

இதனிடையே தேர்தல் ஆணையத்தை விமர்சித்த காங்கிரஸ், சமீபத்திய குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை மேற்கோள் காட்டியது. மேலும் பிரதமர் மோடிக்கு தனது சொந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவதற்காக தேர்தல் அட்டவணையை அறிவிப்பதில் தாமதம் செய்ததாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பை குற்றம் சாட்டியது.

பிரச்சினைக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குஜராத்தில், இந்த முறை, சந்தேகத்திற்கிடமான வாக்கு எண்ணிக்கையை நாங்கள் பார்த்தோம், இது கடைசி நேரத்தில் 10-12% வாக்காளர்கள் வாக்களித்ததைக் காட்டுகிறது என்று அக்கட்சி கூறியது.

இது ஒவ்வொரு வாக்கையும் அளிக்க 25-30 வினாடிகள் எடுத்துக் கொள்ளப்பட்டதை காட்டுகிறது, ஆனால் உண்மையில் இப்படி நடப்பது சாத்தியமற்றது.

இந்த சந்தேகத்திற்கிடமான வடிவங்களை பல தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மற்ற இடங்களுக்கு நீட்டிக்க முடியுமா என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள். இது அமைப்பின் மீதான நம்பிக்கையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று ரமேஷ் கூறினார்.

தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளின் கவலைகளை நேர்மையாக பரிசீலிப்பது, தேர்தல் முறையில் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என்று காங்கிரஸ் மேலும் கூறியது


source https://tamil.indianexpress.com/india/remote-voting-election-commission-of-india-congress-evms-567530/

‘எல்லாக் கட்சியும் இருக்கட்டும்; அந்த கட்சி கொடிக் கம்பம் மட்டும் வேணாம்’: குமுறும் கோவை கிராமம்

 29 12 2022

‘எல்லாக் கட்சியும் இருக்கட்டும்; பா.ஜ.க கொடிக் கம்பம் மட்டும் வேணாம்’: குமுறும் கோவை கிராமம்

கோவை அருகே அசோகபுரம் ஊராட்சியில் பா.ஜ.க கொடி கம்பம் நட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க கொடிகம்பம் கூட வேண்டாம், அது தீண்டாமையை உருவாக்கும் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்

கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சி பகுதியில் காந்தி காலனி உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தீண்டாமை பிரச்சனையால், பா.ஜ.க கட்சிக்கு அனுமதியில்லை என்ற ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது.  விநாயகர் சதுர்த்தி விழாவும் கொண்டாடப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

காந்தி காலனி மக்கள் ஏன் பா.ஜ.க.,வை வெறுக்கிறார்கள்

பா.ஜ.க கொடிக்கம்பம் குறித்த சர்ச்சை தொடர்பாக காந்தி காலனி பகுதிவாசி லெனின் கூறியதாவது,

லெனின், அசோகபுரம் ஊராட்சி காந்தி காலனி பகுதிவாசி

30 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க கட்சியினரால், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து இப்பகுதியில் பா.ஜ.க கட்சி வேண்டாம் என ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது. இப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா இதுவரை கொண்டாடப்பட்டதில்லை. பா.ஜ.க வந்தால் தீண்டாமை பிரச்சனை தலைதூக்கும் என்பதால், மக்கள் அறவே புறக்கணித்துள்ளனர். ஆதிக்க சாதியினர் கோவிலுக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. அதனால் நாங்களும் போகவில்லை என்றார்.

அண்மையில் காந்தி காலனியை சேர்ந்த சின்ராசு மற்றும் அவரது மகன் சேகர் ஆகிய இருவரும் பா.ஜ.க கட்சியில் இணைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அப்பகுதியில் பா.ஜ.க கொடி கம்பம் நட முயன்றுள்ளனர். ஆனால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பிரச்சனை வெடித்துள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையிடம் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், தங்கள் பகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் கொடி கம்பம் ஏற்கனவே இருக்கிறது. அதனருகில் பா.ஜ.க கொடியை நட கடந்த 23 ஆம் தேதி குழி தோண்டியுள்ளனர். 24 ஆம் தேதி புதிதாக கொடி கம்பம் நட இருந்தபோது, அப்பகுதி மக்கள் இதை கண்டித்துள்ளோம். இக்கட்சி வந்தால், ஊரில் தீண்டாமை பிரச்சனை ஏற்பட்டு விடும் என்பதால் மறுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

கொடி கம்பம் நட்டே தீருவேன் என சின்ராசு மற்றும் சேகர், கனகராஜ் உடன் அருகிலிருந்த ஊர்களில் இருந்து வந்த பா.ஜ.க.,வினர் , அங்கிருந்த மக்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காந்தி காலனி மக்கள் வருவாய் ஆய்வாளர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளரிடம் இது குறித்து புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சின்ராசு, சேகர், கனகராஜ் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக பா.ஜ.க கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தகவலாக தெரிவிக்கையில் அனைத்து கட்சி கொடி கம்பம் இருக்கும்போது, அப்பகுதி மக்கள் தங்கள் கட்சியின் கொடி கம்பத்தை வேண்டாம் என்று புகார் கொடுத்துள்ளனர். ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், கொடி கம்பம் நடுவதற்குரிய வழிகளை பார்ப்போம் என்றார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க கட்சியினரால் பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முன்பும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இளைஞர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்தனர். இதனால் பா.ஜ.க வேண்டாம் என முடிவெடுத்தோம். நமது இளைஞர்களுக்குள் இக்கட்சி வந்தால், பிரச்சனை ஏற்படும் என்பதால், கொடி கம்பம் வேண்டாம் என ஊர் மக்கள் சேர்ந்து புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர் அசோகபுரம் ஊராட்சியில் உள்ள காந்தி காலனி பகுதிவாசிகள்.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் கட்சியாக பா.ஜ.க.,வினர் தங்களை முன்னிலைப்படுத்தினாலும் பல இடங்களில் மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை


source https://tamil.indianexpress.com/tamilnadu/kovai-people-complaint-against-to-set-bjp-flag-pole-567345/