1 12 2022
தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி 6.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை; வேலையில்லா நெருக்கடி நிலவுகிறது என்பதைக் குறிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2022-2023 நிதி ஆண்டில் நடந்து கொன்டிருக்கும் ஜூலை – செப்டம்பர் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதற்காக எதிர்க்கட்சியான காங்கிரஸ் பா.ஜ.க-வை விமர்சித்துள்ளது. ஜி.டி.பி வளர்ச்சி 6.3 சதவீதமாக உள்ளது என்று தற்காலிக மதிப்பீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், ட்விட்டரில் கூறுகையில், அரசாங்கத்தால் எதிர்ப்பார்க்கப்பட்ட, நாட்டின் இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 13.5 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக குறைந்துள்ளது. 3வது காலாண்டில் இது இன்னும் குறைவாக இருக்கலாம் என்று நான் பயப்படுகிறேன். புறக் காரணிகளும் அகக் காரணிகளும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைத்துள்ளன.
அரசாங்கம் அகக் காரணிகள் இருப்பதை மறுக்கிறது என்று கூறியுள்ள ப. சிதம்பரம், “முதலீட்டிற்கான சூழல் சீர்குலைந்துள்ளது. முதலீட்டுக்கான விருப்பம் மோசமாக உள்ளது. அனேகமாக, மூலதன அதிகரிப்பு – வெளியீட்டு விகிதம் (ஐ.சி.ஓ.ஆர்) மோசமடைந்துள்ளது. இந்தக் காரணிகளின் அடிப்படையில், வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்தி பதிவில் கூறியிருப்பதாவது: “ஜி.டி.பி-யின் மெதுவான வேகம், நாட்டில் முதலீடு குறைவாக உள்ளது, மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை, வேலை வாய்ப்பு நெருக்கடி உள்ளது என்பதையே குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், இந்த புள்ளிவிவரங்களை சுட்டிகாட்டி, “மோடி ஒரு தீர்வைக் கண்டுபிடியுங்கள்., உண்மையை விட்டுப் போகாதீர்கள்” என்று கூறினார். மேலும், “நாங்கள் எச்சரித்த போது, முதல் காலாண்டிற்குப் பிறகு முதுகில் தட்டிக் கொண்டிருந்த சைகோபான்ட்கள், எங்கே இருக்கிறார்கள். உற்பத்தி குறைகிறது முதலீடு மற்றும் வேலைகள் ஆபத்தில் உள்ளன.” என்று சுப்ரியா ஷ்ரினேட் கூறியுள்ளார்.
“பணவீக்கம், மந்தநிலை மற்றும் உலக முதலீட்டாளர்களின் வெளியேற்றம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது” என்று கூறிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, “பிரதமர் மோடியால் மாநில தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும்போது பொருளாதாரத்தைப் பற்றி கொஞ்சம்குட கவலைப்படவில்லை!” என்று தெரிவித்துள்ளார்.
2வது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் அரசாங்கம் எதிர்பார்த்த 13.5 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
3வது காலாண்டில் இது மேலும் குறைவாக இருக்கலாம் என்று நான் பயப்படுகிறேன்.
வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் புறக் காரணிகள் மற்றும் அகக் காரணிகள் இரண்டும் உள்ளன.
ஜி.டி.பி புள்ளிவிவரம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்தாலும், கோவிட்-19 தொற்றுநோயின் பாதகமான தாக்கத்திற்குப் பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதாகக் கூறுகிறது. விவசாயம் மற்றும் சேவைத் துறைகள் மூன்றாவது காலாண்டில் 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 13.5 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பர் 2021-ல் 8.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டின் ஜி.டி.பி வளர்ச்சியானது ரிசர்வ் வங்கி 6.1 சதவிகிதம் முதல் 6.3 சதவிகிதம் வரை இருக்கும் என்று இந்த மாத தொடக்கத்தில் அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்தது. அது கிட்டத்தட்ட சமமாக உள்ளது.
source https://tamil.indianexpress.com/india/congress-p-chidambaram-gdp-growth-employment-bjp-551523/