வெள்ளி, 2 டிசம்பர், 2022

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுனர் கூறியது என்ன? அமைச்சர் ரகுபதி விளக்கம்

 1 12 2022

ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும், இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுனர் உறுதி அளித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் பங்கேற்று பலர் பணத்தை இழந்துள்ள நிலையில், இந்த விளையாட்டு தொடர்பான தற்கொலைககள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்யும் நோக்கில் அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் 1-ந் தேதி நடைபெற்ற சட்டபை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை தொடர்பான அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த சட்டம் தொடர்பாக ஆளுனர் மௌனம் காத்து வந்த நிலையில், இநத சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருந்தனர். இதனிடையே ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தண்டனை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதாக? என்று கேட்க ஆளுனர் இதற்கு முன்பு கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பான தமிழக அரசு விளக்கம் அளித்திருந்த நிலையிலும், இதுவரை ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுனர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி தடை சட்டம் காலாவதியாகிவிட்டதாக தகவல் வெளியானது. இதனிடையே இந்த அவசர சட்டம் தொடர்பான சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுனர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுனருக்கு நேரில் விளக்கம் அளித்தோம். இது குறித்து ஆளுனர் கேட்ட சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தோம். அதன்பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இன்னும் பிரிசீலனையில் உள்ளது என்றும் இது குறித்து விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுனர் உறுதி அளித்துள்ளார். தற்போதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிர்ணையம் கிடையாது. குறிப்பிட்ட காலத்தை நிர்ணையிக்கும்படி நாம் கேட்கவும் முடியாது என்று கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-low-minister-meet-tn-governor-about-online-rummy-ban-bill-551449/