8 1 2023
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதற்கான விதிமுறைகளை உருவாக்க 7வது முறையாக கால அவகாசம் வேண்டும் என பாராளுமன்ற குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கேட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு டிசம்பர்-10ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தின்படி, “கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன், மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.”
மேலும் இந்த சட்ட திருத்தத்தின் படி இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியும்.
குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தவும், அமலாக்கம் செய்யவும் தேவையான விதிமுறைகள் இதுநாள் வரை வகுக்கப்படவில்லை.
இந்த சட்டம் அமலாக்கப்பட்டது முதலே அதற்கான விதிகளை உருவாக்க கால அவகாசம் வேண்டுமென உள்துறை அமைச்சகத்தால் அனுமதி கேட்கப்பட்டது. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கால நீட்டிப்பிற்கு அனுமதி அளித்தால் மட்டுமே உள்துறை அமைச்சகத்தால் கால நீட்டிப்பை பெற முடியும். ஒரு சட்டத்தை இயற்றிய பிறகு அதற்கான விதிமுறைகளை உருவாக்க 6மாதஙள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும்.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஏற்கனவே 6 முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் ஏழாவது முறையாக கால நீட்டிப்பு கேட்டுள்ளதாகவும், அதற்கு மக்களவை ஒப்புதல் அளித்த நிலையில் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source https://news7tamil.live/home-ministry-seeks-time-for-7th-time-to-frame-caa-regulations.html