2 4 23
முஸ்லிம்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் பிறை பார்க்கப்பட்டு சில நோன்புகளை கடந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவான நோன்பு கஞ்சியின் வரலாறு என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு
இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது நோன்பு மாதமான ரமலான் மாதம். இஸ்லாமிய காலண்டரின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தின் பிறை பார்க்கப்பட்டு அதனை தொடர்ந்து ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பை கடைபிடிப்பர். அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பு சஹர் எனப்படும் அந்த நேரத்திற்கான உணவுகளை உட்கொண்டு நோன்பினை தொடங்குவார்கள். மாலை சூரியன் மறைந்ததும் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரித்தம் பழத்தை முதல் உணவாக எடுத்துக் கொண்டு நோன்பினை முடித்துக் கொள்வார்கள். இந்த சுழற்சி முறையை முஸ்லிம்கள் ஏறத்தாழ ஒரு மாத காலம் கடைபிடிப்பர்.
29 நாட்கள் நோன்பின் முடிவில் மீண்டும் அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தின் பிறையை வானில் தேடத் தொடங்குவார்கள். பிறை தென்படவில்லை எனில் ரமலான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 30நோன்புகளை கடைபிடிப்பார்கள். ஒருவேளை பிறை தென்பட்டால் அடுத்த நாள் ரம்ஜான் பெருநாளை கொண்டாடுவார்கள்.
முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு பிரதான பண்டிகைகள் உண்டு. ஒன்று ரமலான் மாதத்தை தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதம் பிறை 1ல் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை. இதனை ஈதுல் ஃபித்ர் என அரபியில் அழைப்பார்கள். 30 நாட்கள் நோன்பு கடைபிடித்ததற்கான கொண்டாட்டமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்ததாக இஸ்லாமிய காலண்டரின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது பிறையில் “குர்பானி” எனும் சிறப்பு வழிபாடுகளுடன் பக்ரீத் என அழைக்கப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் உலகம் முழுவதிலுமிருந்து “புனித பயணமாக” முஸ்லிம்கள் மக்காவிற்கு செல்வதுண்டு.
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் போது நீண்ட நேரம் பசித்திருப்பதால் அதற்கென பிரத்யேக உணவினை ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றவாறு தயாரித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவுகளும், பானங்களும் தயாரித்தாலும் எல்லா இடங்களிலும் பேரித்தம் பழம் இல்லாமல் நோன்பினை முடித்துக் கொள்வது அரிதான ஒன்று.
நோன்பு கஞ்சி
ரமலான மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள எந்த பள்ளிவாசலுக்கு சென்றாலும் தவறாமல் விலையில்லாமல் கிடைக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள் நோன்பு கஞ்சி. கிட்டத்தட்ட 12மணி நேரத்திற்கு மேல் உண்ணாமல், பருகாமல் நோன்பினை கடைபிடிப்பதால் உடலுக்கு எனர்ஜி தரக்கூடிய விதத்திலும், எளிதில் செரிமானம் ஆகும் விதத்திலும் இந்த கஞ்சி தயாரிக்கப்படுகிறது.
அரிசி, பருப்பு, தேங்காய் பால், வெந்தயம், காய்கறிகள் அல்லது இறைச்சி துண்டுகள் உள்ளிட்ட பொருட்களுடன் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு சரியாக மாலை 4மணிக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. நோன்பு கஞ்சி தமிழ்நாட்டுக்கு எப்படி வந்தது..? இது எப்படி நோன்பு கஞ்சியானது..? என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
நோன்பு கஞ்சி தமிழ் நாட்டிற்கு வந்த கதை..!
இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழர்கள் உலகம் முழுக்க பரவி வாழ்ந்து வந்தனர். சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி அரேபியர்களுடனான வணிக தொடர்பு வரை தமிழர் பாரம்பரியம் பரந்து விரிந்துள்ளது. அதேபோல அன்றைய பர்மா என அழைக்கப்படும் மியான்மரிலும் தமிழர்கள் தொழில் , வியாபரம், கூலி பணி நிமித்தமான பெருமளவில் இடம் பெயர்ந்தனர். இன்றும் தமிழர்கள் மியான்மரில் வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சார்ந்த முகமது அலி எனும் இஸ்லாமியர் பர்மாவில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். பரவலாக தமிழர்கள் உண்ணும் சாதாரன கஞ்சியைத் தான் அன்றைய காலகட்டத்தில் நோன்பு நேரத்திலும் உண்டு வந்தனர். அப்போது முகமது அலிக்கு ஒரு யோசனை வந்தது.. கஞ்சியில் ஏன் சிறிது வெங்காயம், பூண்டு போன்றவற்றை சேர்க்க கூடாது என அவற்றை சேர்த்து கஞ்சியை தயார் செய்து உணவகத்தில் வைத்து அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
அக்கம் பக்கத்தினரின் நிறை குறைகளின்படி கஞ்சி நாளுக்கு நாளுக்கு மெறுகேறிக் கொண்டே சென்றது. அதன் பின்னர் முகமது அலி தனது கடையிலேயே தான் தயாரித்த புதிய வகை கஞ்சியினை விற்பனைக்கு வைத்துள்ளார். ஆரம்பத்தில் சற்று சுனக்கம் இருந்தாலும் சிறிது நாட்களில் விற்பனை வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தான் ஜப்பானிய படைகளின் ஆக்கிரமிப்பு துவங்க ஆரம்பித்து. இதில் மியான்மரில் உள்ள தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு போன்ற பகுதிகளுக்கு மீள் குடியேற்றம் அடைந்தனர்.
1948 காலகட்டத்தில் ஜப்பானிய படைகளின் ஆக்கிரமிப்பால் சொந்த ஊரான கடையநல்லூருக்கு திரும்பிய முகமது அலி தனது ஊரிலேயே புதிய உணவகத்தை தொடங்கினார். அப்போது அந்த உணவகத்தில் பர்மாவில் தான் தயாரித்த கஞ்சியில் மேலும் சில மாற்றங்கள் செய்து சுவைகளை அதிகரித்து புதிய கஞ்சியினை அறிமுகம் செய்து விற்பனை செய்தார். பர்மாவைப் போலவே சொந்த ஊரிலும் கஞ்சி விற்பனை வேகமெடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடையில் விற்பனை செய்ய தொடங்கியது முதல் திருநெல்வேலியின் சுற்று வட்டாரங்களான தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமரி என கேரளா வரை இந்த கஞ்சி பரவலாக அறியப்பட்ட உணவாக மாறியது. இந்த காலகட்டத்தில் தான் நோன்பு கஞ்சி தற்போது இருக்கும் வடிவத்தை பெற்றது.
நோன்பு இருப்பவர்கள் விலை கொடுத்து ஒரு உணவை வாங்க முடியாத சூழல் இருந்துள்ளது. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட சில பொருளாதார வசதி படைத்தவர்கள் இதனை பொதுவுடமையாக்கி அனைத்து பள்ளிவாசல்களிலும் காய்ச்சி மக்களுக்கு விநியோகிக்க தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் பெரும் சோற்றுக்கும் நோன்பு கஞ்சிக்கும் என்ன தொடர்பு..?
சங்க இலக்கியத்தில் பெரும் சோறு எனும் ஒரு வழக்கம் உண்டு. போரில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு அல்லது போருக்கு செல்லும் வீரர்களுக்கு பெரிய பாத்திரத்தில் சமைத்த உணவினை மன்னன் தயாரித்து விருந்து படைக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது. இது கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு.
நோன்பு கஞ்சியும் கிட்டத்தட்ட பெரும் சோற்றுக்கு நிகரானதுதான். ஏனெனில் நோன்பு கஞ்சி இஸ்லாமிய மார்க்கத்தின் அடையாளமாக இருந்திருந்தால் உலகம் முழுக்க அவை ஒன்று போல் ஒற்றை உணவாக இருந்திருக்க வேண்டும் அல்லது உலகம் முழுக்க இப்படியொரு உணவை பள்ளிவாசல்கள் தோறும் காய்ச்சியிருக்க வேண்டும்.
ஆனால் தமிழர்கள் எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்களோ அங்கு மட்டுமே நோன்பு கஞ்சி காய்ச்சி பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக தென் இந்திய மாநிலங்கள் மற்றும் ஆசியா கண்டத்திலுள்ள மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளிலும் தமிழர்கள் பரந்து வாழும் குறிப்பிட்ட சில அரபு நாடுகளில் மட்டுமே நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு விலையில்லாமல் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதனையும் படியுங்கள்: ரமலான் நோன்பும் இந்திய பாரம்பரிய உணவுகளும் – ஓர் பார்வை
பண்டைய கூழும் – நோன்பு கஞ்சியும் ஒன்றா..?
தமிழ் கலாச்சாரத்தில் உள்ள சிறு தெய்வ வழிபாடு முறைகளில் தாங்கள் வணங்கும் சாமிகளுக்கு கூழ் காய்ச்சி அதனை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வழக்கம் உண்டு. இது இன்றும் தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட ஒரு உணவாக பார்க்கப்படுகிறது.
அம்மனுக்கு வழிபாடு நடத்தி கூழ் காய்ச்சி அதனை பொது மக்களுக்கு விநியோகிக்கும் வழக்கம் பண்டைய காலத்திலிருந்து உள்ளது. அந்த கூழில் திணையை பயன்படுத்தி காய்ச்சுவார்கள். முஸ்லிம்களின் ரமலான் நோன்பின் இஃப்தார் உணவான நோன்பு கஞ்சியில் அரிசியை பயன்படுத்துகிறார்கள் என தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வியை பேசும் வரலாற்று ஆய்வாளரும் ஆவணப்பட இயக்குனருமான கோம்பை அன்வர் தெரிவித்துள்ளார்.
வரலாறுகளுக்கு அப்பால்… நோன்பு கஞ்சி இஸ் எமோசன்..!
நோன்பு திறக்கும் நேரத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் கூட்டமாக அமர்ந்து ஒரே சீராக இடைவெளி விட்டு வைக்கப்பட்ட கஞ்சிக் கோப்பையின் முன் அமர்வார்கள். சூரியன் உதயமாவது முதல் மறையும் வரை பச்சைத் தண்ணீர் கூட நாவில் படாமல் நேரத்தை எதிர்பார்த்து நோன்பு நோற்றவர்கள் காத்திருப்பார்கள். அந்த நிமிடம்..
கண் முன்னே உணவு.., கடிகார முள்ளின் நகர்வு என ஒரு திக் திக்கான நேரம் தான்.
நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு இரண்டு விதமான சந்தோஷம் உள்ளது. ஒன்று நோன்பு திறக்கும் நேரம் மற்றொன்று நோன்பு கடைபிடித்ததால் மரணத்திற்கு பின்பான மறுமை நாளில் இறைவனை மகிழ்ச்சியோடு சந்திக்கும் நேரம் என முஸ்லிம்களின் வேத நூலாகிய குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஆசியா கண்டம் முழுக்க பரவி வாழ்கிற தமிழர்கள் நோன்பு திறக்கும் நேரத்தில் எத்தனையோ வகை வகையான உணவுகளை உட்கொண்டாலும் நோன்பு கஞ்சிக்கு இணையாகாது என்பதை ஒருமித்த கருத்தோடு ஏற்றுக் கொள்வார்கள்.
ச.அகமது
கட்டுரையாளர்
source https://news7tamil.live/history-of-nonpu-kanji-from-sangam-literature-to-contemporary.html