சனி, 23 மே, 2020

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் - UGC ஒப்புதல்

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விரைந்து கிடைக்கும் நோக்கில் ஒரேநேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டத்துக்கு பல்கலைக்கழக மானிய குழு ( University Grants Commission) ஒப்புதல் அளித்துள்ளது

ஒரு கல்லூரி / பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர், அதே கல்லூரியிலோ அல்லது மற்ற கல்வி நிறுவனத்திலோ, தொலைநிலைக்கல்வி / ஆன்லைன் முறையில் மற்றுமொரு பட்டப்படிப்பை இனி படிக்கலாம்.
மாணவர்கள் தங்கள் படிக்கும் படிப்புகளுக்கு ஏற்ற வேலை தற்போது பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் குற்றச்சாட்டுகளாக உள்ளது. படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால், அவர்கள் கிடைக்கும் வேலையிலும் அவர்களால் திறம்பட செயலாற்ற முடிவதில்லை. இதன்காரணமாக, அவர்கள் பல வேலைகளை மாறிக்கொண்டே உள்ளனர். எந்த துறையிலும் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாததால், அவர்கள் மனம் வெதும்புகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு, மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் திட்டத்திற்கு பல்கலைக்கழக மானிய குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு கல்லூரி / பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர், அதே கல்லூரியிலோ அல்லது வேறு எந்தவொரு கல்வி நிறுவனத்திலோ, ஆன்லைன் வழியிலோ அல்லது அஞ்சல் தொலைநிலைக்கல்வி முறையிலோ அவருக்கு பிடித்த ( பொருளாதாரம் / அறிவியல்) என வேறொரு துறையில் மற்றொரு பட்டப்படிப்பை படிக்க இயலும்.
ஒரே நேரத்தில் இரட்டை படிப்பு திட்டத்திற்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், யுஜிசி துணைத்தலைவர் பூஷன் பட்வர்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, இத்திட்டம் குறித்து ஆராய்ந்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும்.
கல்லூரி பட்டப்படிப்பில் தேவையான வருகைப்பதிவேடு இருக்கும் மாணவர்களே, இரண்டாவது பட்டப்படிப்பை ஆன்லைனிலோ அல்லது தொலைநிலைக்கல்வி முறையிலோ தொடர முடியும்.
இந்த இரட்டை பட்டப்படிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.