வெள்ளி, 16 ஜூன், 2023

15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்துள்ளோம்! – முதல்வர் ஸ்டாலின்

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2015-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இதுவரை இரண்டாவது செங்கல்லை கூட எடுத்துவைக்காத நிலையில், 15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்துவைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்  “‘ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு இருந்து கணக்கிட வேண்டும்’ என்று சொன்னவர் கருணாநிது. அந்த வகையில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல நிறைவுற்றதற்குப் பின்னாலும் தமிழ்ச் சமுதாயத்துக்காக பயன்பட்டுக் கொண்டு இருக்கக் கூடிய மாபெரும் தலைவர்தான் தமிழினத் தலைவர் கருணாநிதி எனக் குறிப்பிட்டார்.

இந்த கிண்டி பகுதி சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்டது. சைதாப்பேட்டை என்பது, கலைஞர் நின்று வென்ற தொகுதி ஆகும். சைதாப்பேட்டை வேட்பாளர் – திருவாளர் 11 லட்சம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலின் போது அறிவிப்பு செய்தார்கள். எனவே, இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக – இப்போதும் இருந்து ஒரு மாபெரும் மருத்துவமனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.” என்றார்.

இந்த வளாகத்துக்கு கிங் இன்ஸ்டிடியூட் என்று பெயர். இதுவும் பொருத்தமானதுதான் என்ற முதல்வர் ஸ்டாலின், “கருணாநிதி என்றாலே கிங் தான். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங் மேக்கராக இருந்தவர். அந்த வகையில் கிங் ஆராய்ச்சி வளாகத்தில் திறக்கப்படும் மருத்துவமனைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்பட்டது மிகமிக பொருத்தமானது.” என்றார்.

பதினைந்து மாதத்தில் இந்த மருத்துவமனையைக் கட்டி இருக்கிறோம் என பலமுறை கூறிய முதல்வர் ஸ்டாலின், இது மிக முக்கியமான சாதனை என குறிப்பிட்டார். அத்துடன், “2015 ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு – 2023 ஆம் ஆண்டு வரை இரண்டாவது செங்கலைக் கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலையில், அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் இந்த மாபெரும் மருத்துவமனையை நாம் கட்டி எழுப்பி இருக்கிறோம்.” என்று மத்திய அரசை விமர்சித்தார்.


source https://news7tamil.live/in-15-months-we-have-completed-the-construction-of-kalainar-centenary-pannoku-hospital-prime-minister-stalin.html