வியாழன், 15 ஜூன், 2023

ஒன்றிய அரசின் கொங்கு கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

 14 6 23

பாஜகவின் கொங்கு கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி என மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை குறித்த்து தமிழ்நாடு மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்..

 நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவை களங்கப்படுத்தும் பாஜகவின் திட்டத்தை அமலாக்கத்துறை செய்துள்ளது. எந்தவிதமான விதிமுறைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் பின்பற்றப்படவில்லை. சிபிஐ, ஐடி, ஈடி போன்றவை பாஜகவின் கிளை அமைப்புகளை போலவே செயல்பட்டு வருகிறது.

விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை துன்புறுத்தியுள்ளது. அதிமுகவையும் மிரட்ட பாஜக  இந்த சோதனையை பயன்படுத்தி வருகிறது. கூட்டணிக்காக அதிமுகவையும் மிரட்டியுள்ளது. மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை திரட்டும் முயற்சியை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

–  கொங்கு மண்டலத்தில் பாஜக வாக்கு வாங்கலாம் என்ற நம்பிக்கையை சிதைத்தவர் செந்தில் பாலாஜி.  2024ல் செந்தில் பாலாஜி பணியாற்றினால் நோட்டாவை விட நிலைமை மோசமாகிவிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோல்விக்காக பழிவாங்க சுற்றிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. பழிவாங்கும் வேட்கை அதிகமாகியுள்ளது. செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் என அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

– 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட மூல வழக்கில் அமலாக்கத்துறை எப்படி உள்ளே வந்தது?  9 ஆண்டுகளில் 3,000 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் 30 நபர்களுக்கும் குறைவாகவே நடவடிக்கை என்பது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. முதுகெலும்பின்றி புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Image

– எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாக உளறியிருக்கிறார். அவருக்கு  பேச  முதலில் அருகதை உள்ளதா..? நிலைக்கண்ணாடி முன்பு நின்று பேசியிருக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற சோதனையின் போதும் பாஜகவின் நடவடிக்கையை எதிர்த்தார் மு.க.ஸ்டாலின்.

-அதிமுக அடிமைகள் போல பதுங்கிக்கொள்ளாமல், இதனை கண்டித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.  மத்திய பாஜகவை கண்டிக்க துப்பில்லாத எடப்பாடி பழனிசாமி  எப்படி மாநில உரிமையை காப்பார்? கற்பனையிலும் எண்ணிப் பார்க்காத அளவிற்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்துள்ளனர் அப்போதைய அமைச்சர்கள். மோடி, அமித்ஷா காலில் விழுந்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார் பழனிசாமி.

– அதிகாலையில் செந்தில் பாலாஜியை பார்த்தபோது துடிதுடித்துக்கொண்டிருந்தார். அவரை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமலாக்கத்துறையினர் இருந்தனர் . அறுவை சிகிச்சைக்கு முன்வராமல் கைது செய்வதற்காகவே அமலாக்கத்துறை செயல்பட்டது. மாற்றுக் கருத்தை பெறுவதற்காகவே இஎஸ்ஐ மருத்துவர்களை வரவைத்தது.

– இஎஸ்ஐ மருத்துவர்களும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த சான்றிதழையே ஏற்றுக் கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லையென்றால் செந்தில் பாலாஜி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

– காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி இன்றே அழைத்துச்செல்லப்படுவார் மனிதாபிமானமற்ற முறையில் 18 மணி நேரம் உணவு கொடுக்காமல், கீழே தள்ளி, அவரை டார்ச்சர் செய்துள்ளனர்.“ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/senthil-balaji-who-destroyed-bjps-kongu-dream-minister-m-subramanian-interview.html