வியாழன், 15 ஜூன், 2023

செந்தில்பாலாஜி கைது : தமிழ்நாட்டின் இறையாண்மையை நசுக்கும் செயல் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

 14 6 23

அமைச்சர்  செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது, தமிழ்நாட்டின் இறையாண்மையை நசுக்கும் வகையில் இருப்பதாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சென்னை மண்ணடியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக் ” அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததும், தலைமை செயலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததும் தமிழகத்தின் இறையாண்மையை நசுக்கும் வகையில் உள்ளது. இதனை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.“ என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நெல்லை முபாரக் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.  மேலும் தமிழக அரசு வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, விலைவாசி உயர்வை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் என்பதால், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனை அடுத்து தமிழக ஆளுமைகளில் சிறந்து விளங்கிய டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் வெற்றிமாறன் உள்ளிட்ட 9 பேருக்கு இம்மாதம் 24 ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் நெல்லை முபாரக் தெரிவித்தார்.


source https://news7tamil.live/arrest-of-senthilbalaji-suppression-of-tamil-nadus-sovereignty-stbi-condemns.html