12 6 23

அண்ணாமலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசியது தி.மு.க கட்சிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என புதுச்சேரி அ.தி.மு.க கண்டித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய .தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரியில் அ.தி.மு.க சார்பில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில், மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலையில் உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பு அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர்.
அப்போது, அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய தனது கருத்தை அண்ணாமலை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாநில கழக செயலாளர் அன்பழகன் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தன்னுடைய தகுதி, உயரம் என்னவென்று தெரியாமல் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எங்களது புரட்சி தலைவி அம்மா அவர்களை பற்றி தவறான கருத்தை கூறியுள்ளார். இது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க.,வை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது. அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது. ஆனால் அண்ணாமலைக்கு ஒரு தலைமை பண்பு என்ன என்பது கூட தெரியாமல் கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக இன்று தவறான தகவல்களை கூறி வருவதை புதுச்சேரி மாநில அ.தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருக்கின்ற ஸ்டாலினின் கருத்துக்கு வலு சேர்க்கின்ற விதத்தில் எங்களுடைய கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை எங்களை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேசுவது அரைவேக்காட்டுத்தனமாகும். இதுபோல் அவதூறு பேசி வரும் அண்ணாமலையை பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து பா.ஜ.க தேசிய தலைமை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்காலங்களில் அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.க கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாத முடியாத நிலை ஏற்படும். இவரது பேச்சு திமுகவின் கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும். இதைக் கூட தெரியாமல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அண்ணாமலை இதுபோல் அவதூறாக பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி,குமுதன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில MGR மன்ற செயலாளர் சிவலயா இளங்கோ, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், நகர கழக தலைவர்கள் செல்வகுமார், Dr.கணேஷ், சிவா, தொகுதி கழக செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், துரை, ராஜா, கமல்தாஸ், குணசேகர், கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், ச.செந்தில்முருகன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்கள் ராசு, யோகனந்தசாமி, மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக், தொகுதி கழக தலைவர்கள் காந்தி, சவுரிநாதன், மூர்த்தி, ஆறுமுகம், ராஜேந்திரன், கருணாநிதி, கண்ணன், சுரேஷ்குமார் உட்பட அ.தி.மு.க.,வினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/puducherry-admk-condemns-bjp-leader-annamalai-speech-about-jayalalitha-694353/