13 6 23
source https://tamil.indianexpress.com/india/principal-suspended-booked-over-claims-of-college-event-luring-students-towards-islam-694467/
மாலேகானில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் ஒரு சிறிய இஸ்லாமிய பிரார்த்தனையுடன் வேலை வழிகாட்டுதல் கருத்தரங்கு தொடங்கியது. இந்த நிகழ்வு கல்லூரி முதல்வரின் பணி இடைநீக்கத்திற்கு வழிவகுத்தது. மேலும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தக் கல்லூரியை சேனா (UBT) தலைவரும் பா.ஜ.கவின் முன்னாள் எம்.எல்.சியுமான டாக்டர்.அபூர்வா ஹிரே நடத்தி வருகிறார். மாணவர்கள் இஸ்லாம் நோக்கி இழுக்கப்படுவதாகக் கூறி வலதுசாரி உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிராவின் துறைமுக வளர்ச்சி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் தாதா பூஸ் இந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஹிரே குடும்பத்தால் நடத்தப்படும் கல்லூரி, ராணுவத்தின் பாதுகாப்புத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வானது உள்ளூர் அமைப்பான சத்யா மாலிக் லோக் சேவா குழுமத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. புனேவில் உள்ள அனீஸ் டிஃபென்ஸ் தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த அனீஸ் குட்டி விருந்தினராக அழைக்கப்பட்டார்.
தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர் டாக்டர்.சுபாஷ் நிகம் கூறுகையில், “ஒரு சிறிய இஸ்லாமிய பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு விருந்தினர் மாணவர்களிடையே கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியின் முடிவில், ஏராளமானோர் அரங்கிற்குள் நுழைந்து இந்த நிகழ்ச்சி இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் முயற்சி என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்” என்றார்.
மேலும் கூறிய அவர், இந்த நிகழ்வு சிறிய அரேபிய உச்சரிப்புடன் தொடங்கியது என்றும் கூறினார். ஏனினும் இந்த அமைப்பு தனது பெரும்பாலான நிகழ்வுகளை இவ்வாறே தொடங்குகிறது என்றார்.