வெள்ளி, 16 ஜூன், 2023

மருத்துவ துறையில் ஊசியை கண்டுபிடித்தவர்

 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அம்மார் இப்னு அலி அல்-மவ்ஸிலி
- மருத்துவ துறையில் ஊசியை கண்டுபிடித்தவர்
பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபக முஸ்லிம் கண் மருத்துவர்களில் முக்கியமானவர்
அம்மார் இப்னு அலி அல்-மவ்ஸிலி. இராக்கிலுள்ள மோசுல் என்ற நகரில் இவர் பிறந்தார். பின்னர் எகிப்திற்கு புலம் பெயர்ந்தார். ஃபாதிமிட் கலீஃபா அல்- ஹகீம் பி-அம்ர் அல்லாஹ் (Fatimid caliph al-Hakim bi-Amr Allah) என்பவரின் ஆட்சியின் கீழ் வசித்தார். கிதாப் அல் முன்தஹப் ஃபி இல்ம் அல்-அய்ன் (Kitāb al-muntakhab fī ilm al-ayn) என்ற பெயரில் புத்தகத்தை எழுதி அம்மன்னரிடம் சமர்ப்பித்தார். இவரது புத்தகம் கண் மருத்துவத்திலுள்ள (Ophthalmology) பல வழிமுறைகளை விளக்கும் செய்திகளை உள்ளடக்கியது.
தோலுக்கடியில் செலுத்தப்படும் ஊசியை (Hypodermic Syringe) இவர் கண்டுபிடித்தார்.
இன்றைய மருத்துவ உலகில், மருந்துகளை உடம்பில் செலுத்துவதற்கும், இரத்தத்தை உடம்பிலிருந்து உறிஞ்சி எடுப்பதற்கும் ஊசிகள் பயன்படுகின்றன. ஆனால், அம்மார் இப்னு அலி அல்-மவ்ஸிலி அவர்கள் கண்புரை (Cataract) என்று இன்றைய மருத்துவ துறையில் சொல்லப்படும் நோயை குணப்படுத்தவே 'ஊசியை' கண்டுபிடித்தார். கண்புரை என்பது கண் வில்லையில் (Lens) ஒளி ஊடுருவும் தன்மையைக் (Transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். ஒரு வகை பார்வை குறைபாடு நோய் என்று சொல்லலாம். இன்று நவீன அறுவை சிகிச்சை முறை மூலம் இந்நோய்க்கு தீர்வை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அம்மார் இப்னு அலி அல்-மவ்ஸிலி அவர்கள், தான் கண்டுபிடித்த ஊசியை மட்டும் பயன்படுத்தி கண்புரை நோய்க்கு தீர்வு கண்டார்.
அவரது கண்டுபிடிப்பை குறித்து அவர் எழுதிய புத்தகத்தில் விளக்குகிறார்:
நான் ஊசியை கண்டுபிடித்த பிறகு, இஸ்ரேல் நாட்டில் அமைந்துள்ள திபெரேஸ் என்ற நகரத்திற்கு செல்லும் வரை யாரிடத்திலும் அதை பயன்படுத்தவில்லை. அதன் பின், ஒரு மனிதர் என்னிடம் கண்புரை நோயுடன் வந்தார். அவரது கண் புரையை காலியான ஊசியை வைத்து பிடுங்கி எடுத்து மருத்துவம் செய்தேன். பின்னர் ஏழு நாட்களுக்கு மருத்துவம் செய்த பகுதியில் கட்டுகள் போட்டேன். அவர் குணமடைந்தார். இதற்கு முன் யாரும் இது போன்று ஊசியை வைத்து கண்புரை நோயை குணப்படுத்தியதில்லை. அந்த மனிதருக்கு மருத்துவம் செய்த பின் அதே முறையில் எகிப்திலுள்ள பலருக்கும் நான் அறுவைசிகிச்சை செய்துள்ளேன் என்று கூறுகிறார்.
இன்றைய மருத்துவ துறையில் ஊசி என்பது காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரை அனைத்து நோய்களுக்கும் பயன்படுத்தப்படக்கூடிய அதி முக்கிய கருவியாக உள்ளது. இத்தகைய கருவியின் பயன்பாட்டிற்கு அம்மார் இப்னு அலி அல்-மவ்ஸிலி அவர்களின் கண்டுபிடிப்பு சிறந்த மனிதகுல சேவை என்றே சொல்ல வேண்டும்.