14 6 23
மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் உள்ள கங்கா ஜமுனா மேல்நிலைப் பள்ளிக்கு அருகே புல்டோசர் நிறுத்தப்பட்டுள்ளன, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவை செவ்வாய்க்கிழமை, அங்கீகாரமற்றதாகக் கருதும் பள்ளியின் சில பகுதிகளை இடிப்பதாக முனிசிபல் கார்ப்ரேசன் அச்சுறுத்தியதற்குப் பிறகு நடந்த காட்சிகள்.
பள்ளியின் முதல்வர் அஃப்ஷா ஷேக், கணித ஆசிரியர் அனஸ் அதாஹர் மற்றும் பாதுகாவலர் ருஸ்தம் அலி ஆகியோர் மாணவிகளை ஹிஜாப் அணிய வற்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
“நாங்கள் இங்கே தான் படிப்போம்,” என்று தடுப்புகள் அருகே நின்று அழுகையுடன் சிறுமி அல்ஃபியா (10) கூறினார்.
அல்ஃபியாவின் தாய் பிரசவத்தின் போது இறந்துவிட்டார், மேலும் அவர் தனது அத்தை முபாரிகா பேகத்தால் வளர்க்கப்பட்டார். “நீங்கள் அவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறீர்கள். எங்கள் குழந்தைகள் 12 ஆண்டுகளாக இங்கு படிக்கின்றனர். இது மிகப் பெரிய பிரச்னையாக மாறிவிட்டது,” என போலீசாரிடம் முபாரிகா பேகம் கூறினார். பள்ளியை மூடுவதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதில் இவர்களின் குடும்பமும் கலந்துக் கொண்டது, இந்த மாத தொடக்கத்தில் உள்துறை அமைச்சரும் முதலமைச்சரும் பள்ளிக்கு எதிராக பேசியதையடுத்து பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த மாத இறுதியில் 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில், முஸ்லீம் அல்லாத மாணவர்களும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருந்ததால் பள்ளிக்கு பிரச்சனைகள் தொடங்கின.
உண்மையில், சுவரொட்டியில் இருந்த மாணவர்களில் ஒருவர் பள்ளியின் முதல்வர் அஃப்ஷா ஷேக்கின் மகள். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அஃப்ஷா ஷேக், தாமோவில் உள்ள கல்லூரியில் பி.எட் படிப்பை முடித்த பிறகு ஆங்கில ஆசிரியராக வேலை செய்யத் தொடங்கினார். அவரது இரண்டு குழந்தைகள் 8 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள், அவரது மூத்த மகள் கல்லூரி மாணவி.
செவ்வாயன்று, அஃப்ஷா ஷேக்க்கின் கணவர் ஷேக் இக்பால், அவரது மனைவியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, தாமோவில் உள்ள நீதிமன்ற அறைக்கு வெளியே உடைந்து, ஆறுதலடைய முடியாமல் தவித்தார். “அரசியல் என் குடும்பத்தை அழித்துவிட்டது” என்று அவர் கூறினார்.
ஷேக் இக்பால் தனது மனைவியை எவ்வாறு ஜாமீனில் வெளியே எடுப்பது என்பதைக் கண்டுபிடிக்க முயன்றார், அதே நேரத்தில் சாத்தியமான பள்ளி கட்டிட இடிப்பு விவகாரத்தைத் தடுக்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். “எனது மகளும் இடம்பெற்று இருந்து போஸ்டரை நாங்கள் ஒட்டினோம். இது கொண்டாட்டத்திற்கு காரணமாக இருந்தது. அவள் பள்ளியை எதிர்நோக்குவதற்குப் பதிலாக, கம்பிகளுக்குப் பின்னால் தன் தாயைப் பார்க்கிறாள். என் குழந்தைகள் திகைத்து, பயப்படுகிறார்கள். இப்போதைக்கு அவர்களை அனுப்பிவிட்டேன்,” என்று அவர் கூறினார்.
2010 இல் கங்கா ஜமுனா நலச் சங்கத்தால் இந்த பள்ளி நிறுவப்பட்டது, இது நகரத்தின் ஃபுடெரா வார்டில் உள்ள ஒரே ஆங்கில வழிப் பள்ளியாகும், இது உழைக்கும் வர்க்க குடும்பங்களில் இருந்து வரும் 1,200 மாணவர்களுக்க கல்வி கற்பித்து வருகிறது, இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் விவசாயம், பீடி செய்வோர் மற்றும் கூலித் தொழிலாளிகளாகவும் பணிபுரிகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை, தலைமை நகராட்சி அதிகாரி பள்ளி அதிகாரிகளிடம், சர்வேயர் கிளை நடத்திய ஆய்வில், “நகராட்சியின் அனுமதியின்றி நீங்கள் கட்டிடக் கட்டுமானப் பணிகளைச் செய்வது கண்டறியப்பட்டது” என்று தெரிவித்தார். தலைமை நகராட்சி அதிகாரி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க மூன்று நாட்கள் அவகாசம் அளித்தார், தவறினால் “கட்டடம் அகற்றப்படும்/ மாற்றப்படும்/ இடிக்கப்படும்… மேலும் அதன் செலவுகள் மற்றும் அபராதத் தொகை ஆகியவை முனிசிபல் சட்டம், 1961ன் கீழ் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்” என்றும் தலைமை நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
செவ்வாய்க் கிழமை காலை, முனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஒரு குழு புல்டோசருடன் தாங்கள் “சுகாதார இயக்கத்தில்” இருப்பதாகக் கூறி வந்தனர். இதற்கு உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது, அவர்கள் இன்னும் போதுமான அவகாசம் இருப்பதாக நோட்டீஸின் நகல்களை சமர்ப்பித்தனர்.
நகராட்சி குழு இறுதியில் பின்வாங்கியது, ஆனால் மாலையில் பலத்த போலீஸ் படையுடன் திரும்பி வந்தது. அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து இரும்புக் கற்றைகளை அகற்றத் தொடங்கினர், அங்கு பள்ளி நிர்வாகம் தனது முதல் ஸ்மார்ட் வகுப்பறைகளில் மூத்த மாணவர்களுக்கு கற்பிக்கத் தயாராகி வந்தது.
தலைமை நகராட்சி அதிகாரி பி.எல் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “பள்ளியின் பிரதான கட்டிடத்தை ஒட்டிய புதிய கட்டிடத்திற்கான ஆவணங்களை வழங்குமாறு பள்ளி அதிகாரிகளிடம் கேட்டிருந்தோம். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறினர். எனவே முதல் தளத்தில் உள்ள விதிமீறல் கட்டுமானங்களை அகற்றி வருகிறோம். பள்ளி வளாகத்தின் மற்ற பகுதிகளை மதிப்பிடுவதற்கான கூடுதல் ஆவணங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். காலையில், துப்புரவுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு புல்டோசருடன் அந்தப் பகுதியின் கால்வாய்களை சுத்தம் செய்ய சென்றது, நாங்கள் பள்ளியை இடிக்க வந்தோம் என்று உள்ளூர்வாசிகள் நினைத்தார்கள். அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு ஆதரவான போலீஸ் படையுடன் நாங்கள் திரும்பி வந்தோம்,” என்று தெரிவித்தார்.
புல்டோசரைப் பார்த்ததும் கோபமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், “எங்கள் பள்ளிப் படிப்பைத் தொடர விடுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பினர். விடுமுறைக்குப் பின் ஜூன் 15 ஆம் தேதி பள்ளி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பள்ளியின் அங்கீகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்.
தற்போது 8 ஆம் வகுப்பு படிக்கும் சல்மான், நர்சரி படிப்பில் இருந்து இங்கு மாணவராக இருந்து வருகிறார். “என் நண்பர்களுக்கு என்ன நடக்கும்? அவர்கள் என் குடும்பம் போல் இருந்தார்கள். நான் என் பள்ளியை நேசிக்கிறேன்…” என்று அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/mp-school-under-demolition-shadow-headscarf-row-696296/