புதன், 14 ஜூன், 2023

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரசியல் பிரபலங்கள் பட்டியல்…

 14 6 23 அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் குறித்த தொகுப்பை காணலாம்….

காங்கிரஸின் ப.சிதம்பரம் :ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2007-ம் ஆண்டு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றதற்காக ஐஎன்எக்ஸ் குழுமத்திற்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (எஃப்ஐபிபி) அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ 2017 மே மாதம் வழக்குப்பதிவு செய்தது. அப்போது ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இதுதொடர்பாக பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியது. இதனைத்தொர்ந்து முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

சிவசேனாவின் சஞ்சய் ராவத் : மகாராஷ்டிராவில் 2007-ம் ஆண்டில் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் (எம்எச்ஏடிஏ) சார்பில் பத்ரா சால் பகுதியை மேம்படுத்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் சுமார் ரூ.1,034 கோடி ஊழல் நடந்ததாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.

ஆம் ஆத்மியின் சத்தியேந்திர ஜெயின் : டெல்லி சுகாதார துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின் 2022ஆம் ஆண்டு மே மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகவும், ரூ.16.4 கோடி அளவுக்குப் பண மோசடி செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.


தேசியவாத காங்கிரஸின் அனில் தேஷ்முக் :மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனை ஆதாரமாக வைத்து அமலாக்கப்பிரிவினர் மும்பை, நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் தொடர்புடை இடங்களில் ரெய்டு நடத்தினர். அவர் பதவியில் இருந்த போது ரூ.4.18 கோடி பணத்தை போலியான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறையினர், ரூ.4.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அவரை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர்.

காங்கிரஸின் டி.கே.சிவக்குமார் ;கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டு அமைச்சராக இருந் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லி மற்றும் கர்நாடகாவில் உள்ள வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.8.50 கோடி கைப்பற்றப்பட்டது. அந்த பணம் ஹாவாலா பணம் என கூறி அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அவர் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

காஷ்மீரின் ஷபீர் ஷா : இதேபோல் 2017 ஆம் ஆண்டில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா தீவிரவாத கும்பலுக்கு நிதியுதவி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

source https://news7tamil.live/list-of-key-leaders-arrested-by-the-enforcement-directorate.html

Related Posts: