14 6 23
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டையடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர் . சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சுவலியில் கதறி அழுததையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததாக தெரிவித்தனர்.
17 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை தலைமை செயலகம் மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. சிகிச்சைக்கு பிறகு அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ” செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டுள்ளார் ; சித்ரவதைப்படுத்தப்பட்டுள்ளார்; இது மனித உரிமை மீறல் ;அது தொடர்பாகவும் நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் .இது முழுக்க முழுக்க திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி நன்றாக இருப்பதாகவும், மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இந்த கைது என்றும் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும்,” பாஜகவுடைய இந்த உருட்டல், மிரட்டலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் அஞ்சாது என்றும், சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்” என்றும் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
”செந்தில் பாலாஜி கைது குறித்த எந்த தகவலையும் எங்களிடம் கூறவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாக திமுக எம்பியும் ,வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ ஓமந்தூரார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
source https://news7tamil.live/minister-senthil-balaji-arrested-retaliatory-action-minister-udayanidhi-interview.html