16 6 23
அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பல்வேறு கட்சியினர் அமலாக்கத்துறையின் நடவடிக்கையையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை காவலில் உள்ள நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் சில நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் கோவை சிவானந்தா காலணி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து ,திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கண்டன பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் முத்தரசன், மார்க்சிஸ் ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலை தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த அமைச்சரை முடக்கிவிட்டால் தாமரை மலர்ந்துவிடும் என கருதுகிறீர்களா? எனபாஜகவை நோக்கி கேள்வி எழுப்பினார். இவரை தொடர்ந்து பேசிய வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மாநில சுய ஆட்சியில் கைவைப்பதை கடுமையாக எதிர்ப்பதாக கூறி பாஜகவையும், அக்கட்சியின் தலைவர்களையும் சாடினார். இவரை தொடர்ந்து பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது எனக்குற்றம் சாட்டினார்.
மோடி ஆட்சி கீழே விழும் வரை எங்களுடைய பணி தொடரும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். இவரை தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் ஆளுநரின் செயல்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டனின் செயல்போன்று உள்ளதாக விமர்சித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசிய போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் அம்புகள் என்றும், ஏவியது மோடியும், அமித்ஷாவும் தான் என்றும் கூறினார். இவரை தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமலாக்கத்துறை அடவாடிகள் நாடு முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அரசியல் பழிவாங்கும் செயலாக பாஜக இதை கையாண்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசிய போது செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பது, முதல்வர் மு.க.ஸ்டாலினை முடக்க எடுக்கப்படும் முயற்சி என குற்றம் சாட்டினார்.
இறுதியாக பேசிய டி.ஆர்.பாலு 11 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வருவதற்கு தகுதியும் திறைமையும் உள்ளவர் செந்தில்பாலாஜி எனவும், மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபடியாத மாநிலம் தமிழ்நாடு எனவும் கூறினார்.
source https://news7tamil.live/a-huge-public-meeting-in-coimbatore-condemning-the-arrest-of-minister-senthilbalaji.html