சனி, 17 ஜூன், 2023

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது- வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான்!

 16 6 23

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக  வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமிக் பெடரேஷன் சார்பில் வக்பு வாரிய
சொத்துக்கள் குறித்தும் அதனை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிக் பெடரேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் உலமாக்கள், நிர்வாகிகள் என பள்ளிவாசலை நிர்வகிப்பவர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு வக்ஃபு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் ஆக்கிரமிப்பு செய்துள்ள சொத்துக்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை கண்டறிந்து அதனை சட்டப்பூர்வமாக மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அவர்களிடம் இருந்து எந்த பாரபட்சமின்றி அவை மீட்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மத்திய அரசை பொறுத்தவரை சிறுபான்மை மக்களின் நலனுக்காக அளித்து வந்த பல்வேறு நிதிகளை நிறுத்தி வைத்து, சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறிய அவர், சிறுபான்மை பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அளித்து வந்த கல்வி உதவித்தொகையை முழுவதுமாக ரத்து செய்யபட்டுள்ளதை சுட்டி காட்டினார். மேலும் சிறுபான்மை மக்களை தவிர்த்து விட்டு மத்திய அரசு தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாது என்பதை நன்கு நினைவில் நிறுத்து வேண்டும் எனவும் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/we-cant-continue-to-form-a-government-at-the-center-without-excluding-the-minority-people-waqf-board-chairman-abdul-rahman.html