செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பட்டியலின நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு விளக்கம்

 31 7 23

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடி நிதி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும்.
இந்தத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் மட்டுமே பயன்பெறத்தக்க திட்டங்களும், பொதுத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் பயன்பெறும் திட்டங்களும் உள்ளன.

இத்தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை அப்பிரிவு மக்களக்கு மட்டுமே செலவிட இயலும். இந்தத் தனி ஒதுக்கீடு முறையை தான் ஒன்றிய அரசும், பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன.
தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கும் இதே முறையில் தான் பட்டியலினத்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதே போல் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவர்க்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 1,540 கோடி ரூபாயை பட்டியலினத்தவருக்கு மட்டும் தான் செலவிட இயலும். கடந்த 2020-21 ஆம் ஆண்டு 13,680 கோடி ரூபாயாக இருந்த பட்டியலின மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆதி திராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு, 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 17,076 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-explanation-regarding-rs-1000-womens-financial-assistance-scheme-732907/