திங்கள், 14 ஆகஸ்ட், 2023

சட்டமன்றத்தில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்ததா?

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மறைந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டதான சம்பவத்தைக் குறிப்பிட்டு, “இது அவரே நடத்திய நாடகம் என்று சட்டமன்றத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும்” என்று கூறி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்பி கனிமொழி பேசியதைத் தொடர்ந்து, 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவத்தை நினைவூட்ட முயன்றார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் புடவை இழுக்கப்பட்டத குறித்து நினைவூட்ட முயன்றார்.

“அது மிகவும் புனிதமான சபை, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் புடவை இழுக்கப்பட்டது. அவரது சேலையை இழுத்ததால், அங்கு அமர்ந்திருந்த தி.மு.க-வினர் அவரைப் பார்த்து சிரித்தனர், கேலி செய்தனர்.” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

“இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றார். அப்போது ஆட்சியில் இருந்த கட்சி சட்டசபையில் அமர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் புடவை இழுத்துவிட்டு இன்று திரௌபதியைப் பற்றி பேசுகிறார்” என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், மறைந்த ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு, “இது அவரே நடத்திய நாடகம் என்று சட்டமன்றத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

“வாட்ஸ்அப் வரலாற்றின் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் ஏதாவது சொல்வார்” என்று ஸ்டாலின் கூறியத்கைக் குறிப்பிட்டு தி.மு.க செய்தி வெளியிட்டுள்ளது.

“ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. சட்டசபையில் இருந்த அனைவருக்கும் தெரியும், இது அவரே நடத்திய நாடகம்” என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனின் கருத்துகள் வருந்தத்தக்கவை என்று கூறியுள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் தலைவரும் தற்போது காங்கிரஸ் கட்சி எம்.பி-யாக உள்ள சு. திருநாவுக்கரசர் மாநில சட்டமன்றத்தில் இதற்கு ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்று கூறியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள எடப்பாடி பழனிசாமி, பிரச்னைக்குரிய நிகழ்வுகள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலினின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி முன்னிலையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது, தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக அந்த அவையில் இருந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

“அம்மா (ஜெயலலிதா) அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது நான் எடப்பாடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவருடன் எம்.எல்.ஏ.வாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் சபையில் இருந்தேன். அந்த சம்பவத்தைப் பார்த்த ஒருவராக நான் இதைச் சொல்கிறேன். அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும், அவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.” என்று கூறியுள்ளார்.

1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்து மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறினார்.

“இது கருணாநிதி முன்னிலையில் நடந்தது. திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அம்மாவை மோசமாக தாக்கினர். தற்போது மூத்த அமைச்சராக உள்ள ஒருவர் அம்மாவின் சேலையை இழுத்தார். மற்றொரு (அப்போதைய) அமைச்சர் முடியை இழுத்தார். அது ஒரு கருப்பு தினம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

“இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. நான் சபையில் இருந்தேன். இது போன்ற நிகழ்வுகள் சபை வரலாற்றில் இல்லாதது; சட்டசபை வரலாற்றில் மிகவும் மோசமான நாள் அது. எந்த ஒரு பெண் உறுப்பினரும் அல்லது எதிர்க்கட்சித் தலைவரும் அதுபோன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை. ஆனால், இன்றைய முதல்வர் அதை தரம் தாழ்த்தி வருகிறார். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வந்துள்ளன” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது ஜெயலலிதா மக்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவேன் என்று சபதம் எடுத்ததாகவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மகத்தான வெற்றியைப் பெற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalithaa-assault-at-state-assembly-in-1989-nirmala-sitharaman-remarks-stalin-palaniswami-clash-738619/