‘நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்பது ‘பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நேருவின் பாரம்பரியத்தை மாற்றுதல், சிதைத்தல், அவதூறு செய்தல், அழித்தல் என்ற ஒற்றை நோக்கத்துடனேயே பிரதமர் மோடி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தொடர்ந்து தாக்கப்பட்டாலும், நேருவின் பாரம்பரியம் குறித்து உலகம் அறியும் என்றும், அவர் வரும் தலைமுறையினருக்கும் ஊக்கம் அளிப்பவராக இருப்பார் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், “சிறப்பு மிக்க நினைவுச் சின்னமான ஒரு நிறுவனம் இன்று முதல் புதிய பெயரைப் பெறுகிறது. உலகப் புகழ்பெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (NMML) இனி பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) என்று மாற்றப்படுகிறது.
மோடியிடம் மிகப் பெரிய அளவில் பயம், தாழ்வு மனப்பான்மை, பாதுகாப்பின்மை உணர்வுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக நமது முதல் மற்றும் நீண்டகாலம் பிரதமராக இருந்த நேருவின் மீது அதிகமாக உள்ளது. மோடிக்கு நேரு மற்றும் அவரது பாரம்பரியத்தை மாற்றும், சிதைக்கும், அவதூறு செய்யும், அழிக்கும் ஒற்றை குறிக்கோள் மட்டுமே உள்ளது. எனவே அவர் N என்பதை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக P என்று மாற்றியுள்ளார். உண்மையில் P என்பது அற்பத்தனம் மற்றும் கோபத்தையே குறிக்கிறது.
ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் நேருவின் மகத்தான பங்களிப்பையும், ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான, தாராளமயமான அடித்தளத்துடன் கூடிய இந்திய தேசியத்தை கட்டியெழுப்பிய அவரின் சாதனைகளையும் மோடியால் அழிக்க முடியாது. இவை அனைத்தும் இன்று மோடி, அவரது துதி பாடுபவர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது.
தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்ற போதிலும் நேருவின் பாரம்பரியத்தை உலகம் நன்கு அறியும், வரும் தலைமுறையினருக்கும் அவர் தொடர்ந்து ஊக்கம் அளிப்பவராக இருப்பார்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த பெயர் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, நரேந்திர மோடி ஆகியோருக்கு நேருஜி மீதான வெறுப்பு எல்லோரும் அறிந்த ஒன்று. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உருவாக்கினார். முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனால் திறந்து வைத்தார். நரேந்திர மோடி மூடிவிட்டார். நேரு இந்திய மக்களின் இதயங்களில் வாழ்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நேரு நினைவு அருகாங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆகஸ்ட் 14-ம் தேதி அதிகாரபூர்வமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று பெயர் மற்றப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க நிர்வாக குழுவின் துணைத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதே தகவலைத் தெரிவித்திருந்தார். அதில் அவர், “சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பல்வகைப்படுத்துதலுக்கு ஏற்ப, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் 2023 ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என அறியப்படும். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். @narendramodi, @rajnathsingh @MinOfCultureGoI,” என்று தெரிவித்து, தீன் மூர்த்தி பவனின் படத்தினையும் இணைத்திருந்தார்.
தீன் மூர்த்தி பவன் இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் அதிகாரபூர்வ இல்லமாக செயல்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது. ஜூன் மாதம் மத்தியில் நடந்த நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுலக சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் இந்தப் பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
source https://tamil.indianexpress.com/india/congress-slams-modi-for-renamed-of-negru-memorial-museum-jairam-ramesh-manickam-tagore-739660/