வியாழன், 25 பிப்ரவரி, 2016

சுன்னத் வாங்கலியோ சுன்னத்..


------------------------------
தவ்ஹீத் ஜமாஅத்காரன் உலக காரியங்களாக எதையாவது செய்தால் கூட, அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு, இப்படி நபி செய்திருக்கிறார்களா, ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்த ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா? இயக்கம் நடத்த ஆதாரம் காட்ட முடியுமா? என்றெல்லாம் அர்த்தமற்ற கேள்வி கேட்போர்,
மஸ்ஜிதுன் நபவி வாசல் முன்னால் இப்படி நபி (சல்) அவர்கள் தொப்பி "வியாபாரம்" செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் காட்டுவார்களா?
தோள் புஜங்களை மறைக்க வேண்டும் என்பதைத் தவிர தொழுகைக்கு என்று எந்த பிரத்தியேக ஆடையும் கிடையாது.
வெளியே என்ன ஆடையோ அது தான் தொழுகைக்கும்.
எனவே, தொப்பியை பள்ளிவாசல் நுழைவில் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் நபி (சல்) அவர்களுக்கு இல்லை.
தொப்பிக்கும் தொழுகைக்கும் எந்த சம்மந்தமுமில்லை, ஒரு முறை தொழும் போது, தான் தலையில் அணிந்திருந்த தலைப்பாகையை கழற்றி அதை சுத்ராவாக‌ (தடுப்பு) பயன்படுத்தியிருக்கிறார்கள் நபி (சல்) அவர்கள்.
அவர்களின் ஆடைகளுல் ஒன்று தலைப்பாகை.
அனைவரும் அணிந்திருந்தனர், எதிரிகளும் அணிந்திருந்தனர்.
விஷயம் இப்படியிருக்க, இந்த புகைப்படத்தை கண்டதும் மனதில் ஓர் மலரும் நினைவு.
சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆரம்ப‌ நாட்கள்..
சுனஜன பள்ளிவாசல்கள் எல்லாம் அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்கப்பெறாத பள்ளிகள் என்கிற அறிவு இல்லாத காலம்..
ஒரு பள்ளிக்கு தொழ சென்றிருந்தேன். வாசலில் இது போல் அட்டைப்பெட்டி ஒன்று வைத்து தொப்பி விநியோகம் செய்து வந்தார்கள்.
வேண்டாம், என்று மறுத்து விட்டு, உள்ளே தொழ சென்றேன்.
தொழுது கொண்டிருந்த எனது தலையில் தொப்பியை வைத்து செல்கிறார் ஒருவர்.
கோபத்தில் அதை தட்டி விட, எதிரே அமர்ந்திருந்தவர் மேல் அது விழ.. அவரோ அந்த பள்ளி மோதினார் போலும்.
நான் எப்போது தொழுது முடிப்பேன் என்று என்னையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.
தொழுது முடித்ததும், "ரசூல் (சல்) அவங்களோட இஸத்தை இப்படி உதாசீனப்படுத்தி விட்டு தொழுதா உன்னோட தொழுகைய அல்லாஹ் கபூல் செய்ய மாட்டான்" என்றார்.
ரசூலின் இஸ‌த் என்று எங்கே உள்ளது,? இது எப்படி சுன்னத் ஆகும்? என்றெல்லாம் நானும் கேட்க, சண்டை வலுக்கவே, ஆலிம்சாவிடம் போலாம் வா.. என்று என்னை ஆலிம்சாவிடம் அழைத்து சென்றார்.
ஆலிம்சாவிடம் நம்மை போட்டுக் கொடுக்க, அவரோ, தம்பி நீங்க என்ன பிஜெ குரூப்பா? என்றாரே பார்க்கலாம்..
அப்போது நமக்கிருந்த சிறு மார்க்க அறிவைக் கொண்டு அவருடனும் தொடர்ந்து தர்க்கம் செய்ய, சின்ன கூட்டமே கூடி விட்டது.
தம்பி, நாளை முதல் நீ இங்க வரக்கூடாது என்றார்கள்.
நான் வரத் தான் செய்வேன், பள்ளிவாசல் அல்லாஹ்வுக்குரியது,
நான் ஒன்றும் உங்களை தொந்தரவு செய்யவில்லையே, நீங்கள் மட்டும் ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்? என்று கேட்டு விட்டு, வீம்புக்காகவே அடுத்தடுத்து சில நாட்கள் சென்றிருக்கிறேன்.
முறைத்துப் பார்ப்பார்கள், முணுமுணுப்பார்கள், ஒன்றுமே பேச வர மாட்டார்கள்.
நாளடைவில், அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்.
(அந்த பள்ளி அல்லாஹ்வுக்குரியதில்லை என்று பிற்காலத்தில் உணர்ந்து கொண்டது தனி விஷயம்.)
இன்றளவும் இந்த வியாபாரம், எல்லா சுனஜன பள்ளிவாயில்களிலும் நடைபெற்று வருகின்றது என்றால், மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு வந்தபாடில்லை.
என்ன ஒன்று.. அந்த காலத்தில் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியின் அளவு பெரிதாக இருந்தது.. இப்போது அப்படியில்லை.
தொப்பி வியாபாரம் படுத்து விட்டது மனதிற்கு மகிழ்ச்சி !
- நாஷித் அஹ்மத்