திங்கள், 11 செப்டம்பர், 2023

சனாதனம் பற்றி 100 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் குரல் கொடுப்போம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

 

சனாதனம் பற்றி 100 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் குரல் கொடுப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நெய்வேலியில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ” எனப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த இந்தப் பேச்சு, நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாஜகவின் மாநிலச் செயலரான ஏ.அஸ்வத்தாமன், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினார்.

டெல்லி காவல்துறையில் வினீத் ஜிண்டால் என்பவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். அயோத்தியைச் சேர்ந்த சாமியாரான பரமஹன்ஸ் ஆச்சார்யா என்பவர், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை இழிவுபடுத்திவிட்டதால், அவருடைய தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார். எனினும், சனாதானம் குறித்த தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். என்ன வழக்குப் போட்டாலும் சந்திப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று நெய்வேலியில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நான் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டேன். மாநாட்டின் பெயர் ‘சனாதன ஒழிப்பு மாநாடு. நான் பேசியது ஒருநாள் செய்தியாக கடந்து போயிருக்கும். அதை எடுத்து நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக திரித்து பொய்ச் செய்தி பரப்பி, இப்போது ஒட்டுமொத்த இந்தியாவே அதைப்பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவும், பிரதமரும் பேசியிருக்கிறார்கள். என் தலைக்கு ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சாமியார், உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி என அறிவித்தார். என் தலையை சீவுவதற்கு ஏன்ப்பா 10 கோடி? 10 ரூபாய் சீப்பு போதும், நானே சீவிக்கிறேன் என்றேன். சாமியாரிடம் எப்படி 10 கோடி இருக்கும் என நான் கேட்டேன். அதை செய்தியாளர் ஒருவர் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 500 கோடியாம். சாமியாரிடம் 500 கோடி இருக்கிறது என்றால் அவர் உண்மையான சாமியாரா?

100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும் நிலை இல்லை, கணவனை இழந்தால் உடன்கட்டை ஏறவேண்டும் என்றார்கள். இதை உடைத்து நொறுக்கியது திமுக. இதை எல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் தான் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின். அவர்கள் பேசாத எதையும் நான் பேசவில்லை.

9 ஆண்டுகாலம் என்ன செய்து கிழித்தீர்கள் என்று கேட்டதற்கு, இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார். சொன்னபடியே மாற்றிவிட்டார். பெயரை மாற்றிவிட்டார். நாம் ‘இந்தியா’ என கூட்டணிக்கு பெயர் வைத்ததுமே நாட்டின் பெயரை பாரத் என மாற்றிவிட்டார். இப்படி ஒரு கேலிக்கூத்தான ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. சனாதனம் பற்றி 100 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் குரல் கொடுப்போம்.

அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி பேசாததை நான் பேசவில்லை. திமுக தொடங்கப்பட்டதே சனாதனத்தை ஒழிக்கத்தான், சமூக நீதியை வளர்க்கத்தான். வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் ஒரே முடிவெடுத்து அதிமுகவை வீட்டுக்கு அனுப்பியது போல, 2024 லோக்சபா தேர்தலில் இந்த அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” எனப் பேசியுள்ளார்.


source https://news7tamil.live/we-have-been-talking-about-sanatanam-for-100-years-we-will-raise-our-voice-for-another-200-years-minister-udayanidhi-stalins-plan.html