சனி, 9 டிசம்பர், 2023

ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: இ.பி.எஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி

 sada

ரூ. 4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவிற்கு

 

முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான இ.பி.எஸ்-க்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரா இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க  வேண்டும் என ஆர். எஸ்.பாரதி வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த முறைகேடு புகார் குறித்து  சி.பி.ஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு மனுதாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி மீண்டும் நடைபெற்ற வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்தார். முடிவில், லஞ்ச ஒழிப்புத் துறை 2018ல் நடத்தப்பட்ட தொடக்க விசாரணையில் குறைகள் இல்லை. புதிய விசாரணைக்கு நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆட்சி மாற்றம் ஒன்றையே காரணமாக  காட்டி புதிய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது என கூறி ஆர். எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக உச்சநிதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா  ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/rs-four-thousand-thunderd-crores-eps-case-dismissed-1965187

Related Posts: