கடந்த திங்கள் கிழமை அன்று மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை - வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலைக்கு அருகே அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகில் கட்டுமான பகுதிக்காக வெட்டப்பட்ட சுமார்
50 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
அப்போது வேளச்சேரியில் உள்ள 5 பர்லாங் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே க்ரீன்டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கட்டுமானத்திற்காக 40 அடி பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதிக மழை பெய்ததால் அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
இதில் அதன் அருகே தொழிலாளர்கள் தங்கியிருந்த கன்டெய்னர், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்தது.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் இரு தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர். இருந்தும் அந்த பள்ளத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் நரேஷ் மற்றும் கட்டுமான பொறியாளர் ஜெயசீலன் ஆகிய இருவர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இருவரின் குடும்பத்தினர் பெட்ரோல் பங்க் அருகே குவிந்தனர்.
இதனிடையே கன மழையால் பள்ளம் நிரம்பியதால், மீட்பு பணி மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டது.
பள்ளத்தில் இருந்த நீரை வெளியேற்றும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் (21) உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து ஜெயசீலன் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். 25 வயதாகிறது. இவருக்கும் மஞ்சு என்பவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள்தான் ஆகிறது. மஞ்சு தற்போது கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-michaung-cyclone-floods-velachery-labor-body-recovered-1944518