செவ்வாய், 30 ஏப்ரல், 2024

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இனி இபாஸ் கட்டாயம் – மே 7ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு  மே 7ம் தேதி முதல்  இபாஸ் முறையை  அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது.  மேலும் வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமான நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாரும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமான ஈரோட்டில் வெயில் 107டிகிரியை கடந்து வருவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோடை வெயிலின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளவு சிறிய அளவில் குறைந்துள்ளது.

வெயிலில் இருந்து விடுபட்டு விடுமுறை தினத்தை கழிக்க சுற்றுத்தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.  இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என வன சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த இபாஸ் நடைமுறையை மே 7 ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் இ பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தமிழ்நாடுஅரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இ பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும் எனவும் உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இ பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் நீதிபதிகள் அறிவிறுத்தியுள்ளனர்.

ஊட்டி பகுதிக்கு மட்டும் 20 ஆயிரம் வாகனங்கள் தினந்தோறும் வருவதாக தகவல் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில் ஒரேநாளில் இத்தனை வாகனங்கள் வந்தால் எப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கும் அரசு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.


source https://news7tamil.live/ipass-is-mandatory-for-tourist-vehicles-going-to-ooty-and-kodaikanal-madras-high-court-orders-to-implement-it-from-7th-may.html

மேட்டுப்பாளையம் அருகே 46 குடிசை வீடுகள் தீயில் கருகி சேதம்!

 

மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு
46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர்
பகுதியில் 140 பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் அருகே தரிசு நிலங்கள் அதிகம் உள்ள நிலையில்,  இன்று மதியம் அந்த தரிசு நிலத்தில் திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது.

இந்த தீ காற்றின் வேகம் காரணமாக, அருகில் உள்ள மக்கள் வசித்த குடிசைகளுக்கு பரவியுள்ளது. அருகருகே வீடுகள் இருந்த நிலையில், 46 வீடுகள் பற்றி தீயில் எரிந்து சாம்பலாகின. தீ பற்றியவுடன் வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில், வீட்டில் இருந்த உடைமைகள், சமையல் சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகின.

இதனையடுத்து இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல்
அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் வீடுகள் முழுவதும் எரிந்து சேதமாகின.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.


source https://news7tamil.live/46-cottages-destroyed-by-fire-near-mettupalayam.html#google_vignette

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்களை தாக்கிக் கொள்ளை!

 

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர்கள் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிளான பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், கோடியக்கரை நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி மீனவர்களின் படகுகளில் ஏறினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு ஆயுதங்களாலும் கட்டைகளாலும் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் தமிழ்நாடு மீனவர்களின் வலை, ஜிபிஎஸ் கருவி, செல்ஃபோன், டார்ச் லைட் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கை கடற்கொள்ளையர்கள்  கொள்ளை அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கின்றனர்.

இதையடுத்து, இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு ஆயுதங்களாலும் கட்டைகளாலும் கடுமையாக தாக்கியதில் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில், அந்த மீனவரின் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், நாகை அடுத்த ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை மற்றும் கையில்  17 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


source https://news7tamil.live/sri-lankan-pirates-serial-atrocities-attack-on-tamilnadu-fishermen.html

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!

 

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தேர்தல் மே.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 2ம் கட்ட தேர்தல் மே மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே கர்நாடகாவின் ஹசன் தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனான இவர் போட்டியிடும் தொகுதிக்கு கடந்த 26-ஆம் தேதி (26.03.2024) அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் கூறப்பட்டதோடு, அது தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இது தொடர்பாக மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து இந்த விவகாரத்தில் பிரஜ்வல் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெங்களூருவில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அக்கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரியங்கா காந்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரியங்கா காந்தி பதிவிட்டிருப்பதாவது :

“பிரஜ்வல் ரேவண்ணா செய்த கொடூரமான குற்றங்களைப் பற்றி கேள்விப்பட்டதும் நெஞ்சம் பதறுகிறது. நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். பிரதமருடன் தோளோடு தோள் நின்று பரப்புரையில் ஈடுபட்ட பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி பதில் ஏதும் கூறாமல் பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன்”

இவ்வாறு பிரியங்கா காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/why-is-modi-silent-on-prajwal-revanna-issue-priyanka-gandhi-question.html

திங்கள், 29 ஏப்ரல், 2024

தமிழ்நாட்டில் மே 1 வரை வெப்ப அலை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

 29 4 2-24 

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தமிழகம்,  மேற்குவங்கம்,  பீகார்,  ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும்,  மிக மோசமான வெப்ப அளவே நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான வெப்ப நிலை நீடிக்கும்.

மேற்கு வங்கம்,  ஒடிசா,  பீகார்,  ஜார்க்கண்டில் ஒரு சில பகுதிகளில் மே 1ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும்,  அதன்பிறகு, மே 2ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மோசமானது முதல் மிக மோசமான வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகம்,  புதுசசேரி,  உள் கர்நாடகம்,  கோவா, ராயலசீமா,  ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  தெலங்கானாவில் இன்று முதல் மே 1ஆம் தேதி வரையும், கேரளத்தின் கொங்கன் பகுதிகளில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/heat-wave-to-continue-in-tamil-nadu-till-may-1-meteorological-department-warns.html

“இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்”

 

இட ஒதுக்கீடு குறித்து அமித்ஷா பேசியதற்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்து வீடியோ ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா அவரது பேச்சு உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு
ஆதரவாளர்கள் என்று அமித்ஷா பேசி இருப்பது பொய்யான தகவல். சில உண்மைகள்
இந்தியாவுடைய பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக இந்தியாவுடைய ஏர்போர்ட், ஏர்
இந்தியா, இந்தியாவுடைய கப்பல் துறைமுகங்கள், இவை அனைத்திலும் ஓ பி சி, எஸ்சி
எஸ்டி பிரிவினர் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்த பிரிவினரின் பணிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எப்பொழுது பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு தாரை வார்த்தார்களோ அப்போதே அங்கு ஓபிசி எஸ்சி எஸ்டி பிரிவு மக்களின் வேலைவாய்ப்பு இழந்து விட்டார்கள். இது நேரடியாக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்காக பார்க்க வேண்டும்.

இந்தக் கொடுமையை ஆர் எஸ் எஸ் செய்ய நினைக்கிறது. அந்தக் கொடுமையை பாஜகவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமித்ஷா உடைய பொய்கள் தோற்கடிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. ஜூன் 4 பிரதமர் மோடிக்கு ஓய்வு கொடுக்கும் நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/its-a-surgical-strike-against-reservation-video-posted-by-manikam-tagore.html

தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு!

 

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்துள்ளதால்,  தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது.  கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது.  கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் பல மளிகை பொருள்களின் விலை ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயா்ந்துள்ளது.

இதனிடையே தமிழ்நாடு மற்றும் பிற மாநிவங்களில் கனமழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  மளிகை பொருள்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்துள்ளது.

இந்த நிலையில்,  கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது கிலோ ரூ. 160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ. 222-க்கும்,  ரூ.122-க்கு விற்கப்பட்ட உளுத்தம் பருப்பு ரூ.145-க்கும், ரூ.155-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.172-க்கும்,  ரூ.160- க்கு விற்கப்பட்ட கொண்டை கடலை ரூ.180-க்கும்,  ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேநேரத்தில் சீரகம்,  சோம்பு,  மிளகாய் தூள்,  மல்லித் தூள் ஆகிய பொருள்களின் விலை சற்று குறைந்துள்ளது.  சமையல் எண்ணெய் விலையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.  இனி வரும் நாட்களில் பருப்புகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



source https://news7tamil.live/the-price-of-groceries-in-tamil-nadu-has-increased-sharply.html

நெருங்கும் நீட் தேர்வு; இந்த டாபிக்ஸ் முக்கியம்!

 கட்டுரையாளர்: நபின் கார்க்கி

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2024) மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு முதல் 100 பட்டியலில் இடம் பெற மாணவர்களுக்கு சரியான உத்தி தேவை.

பொருள் சார்ந்த உத்திகளை ஆராய்வதற்கு முன், நீட் தேர்வு கட்டமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியமானது. நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720, மற்றும் தேர்வு காலம் 200 நிமிடங்கள். ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: பிரிவு A 35 கேள்விகள் மற்றும் பிரிவு B 15 கேள்விகள், இதில் ஏதேனும் 10 முயற்சிக்க வேண்டும். சரியான விடைகளுக்கு நான்கு மதிப்பெண்கள் கிடைக்கும், தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும் மற்றும் முயற்சி செய்யாத கேள்விகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NEET UG 2024: உயிரியல்

என்.சி.இ.ஆர்.டி (NCERT) புத்தகத்தை நுணுக்கமான வாசிப்பு மற்றும் திருப்புதலுடன் உயிரியல் பாடத்தை படிக்க வேண்டும். மாதிரி தேர்வுகளின் போது 45-50 நிமிடங்களுக்குள் உயிரியலை முடிக்க வேண்டும்.

மனித இனப்பெருக்கம் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற எளிமையான தலைப்புகளில் உள்ள கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள் குழப்பமான கேள்விகளை ஏற்படுத்தக்கூடும். பரம்பரையின் மூலக்கூறு அடிப்படை மற்றும் பரம்பரை மற்றும் மாறுபாட்டின் கோட்பாடுகள் பகுதிகளின் விரிவான புரிதலுக்கு பல திருப்புதல்கள் தேவை.

பயோடெக்னாலஜி: கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள், பரம்பரை மற்றும் மாறுபாட்டின் கோட்பாடுகள், மரபுரிமையின் மூலக்கூறு அடிப்படை, உயிர் மூலக்கூறுகள், மனித இனப்பெருக்கம், செல்: உயிர் அலகு, பூக்கும் தாவரங்களில் பாலியல் இனப்பெருக்கம், பரிணாமம், விலங்கு உலகம், பரிணாமம், பூக்கும் தாவரங்களின் அமைப்பு போன்ற அத்தியாயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

NEET UG: வேதியியல்

என்.சி.இ.ஆர்.டி (NCERT) புத்தகத்தை முழுமையாக படித்துக் கொள்ளுங்கள். கனிம வேதியியல் சூத்திரங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் அடிப்படைகளை கற்றுக் கொள்ளுங்கள்.

வெப்ப இயக்கவியல், பி-பிளாக் கூறுகள், சமநிலை, மின் வேதியியல், ஹைட்ரோகார்பன்கள், வேதிப் பிணைப்பு மற்றும் மூலக்கூறு அமைப்பு, ஆல்கஹால்கள், பீனால்கள் மற்றும் ஈதர்கள், ஒருங்கிணைப்பு கலவைகள், வேதி இயக்கவியல், உயிர் மூலக்கூறுகள், ஆல்டிஹைடுகள், அமிலங்கள், கார்பாக்சைலிக்ஸ் மற்றும் கார்பாக்சைலிக், கரிம வேதியியல்: அடிப்படைக் கொள்கைகள் மற்றும் நுட்பங்கள் போன்ற முக்கிய அத்தியாயங்களில் கவனம் செலுத்துங்கள்.

NEET UG 2024: இயற்பியல்

இயற்பியல் தலைப்புகளை அவற்றின் சிரம நிலைகளின் அடிப்படையில் பட்டியலிட்டு அதற்கேற்ப படிக்கவும். NCERT புத்தகங்கள், முன்மாதிரிகள் மற்றும் H. C. வர்மாவின் 'இயற்பியல் கருத்துக்கள்' (தொகுதி I & II) உள்ளிட்ட பொருத்தமான புத்தகங்களில் படிக்கவும். நம்பகமான ஆதாரங்களை மட்டுமே நம்பி, ஒரே தலைப்புக்கு பல புத்தகங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். சூத்திரங்களை ஆராய்வதற்கு முன் அடிப்படை யோசனைகள் மற்றும் கருத்துகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

மின்னியல், செமிகண்டக்டர் எலக்ட்ரானிக்ஸ்: மெட்டீரியல் சாதனங்கள் மற்றும் எளிய சுற்றுகள், கதிர் ஒளியியல் மற்றும் ஒளியியல் கருவிகள் மற்றும் துகள்களின் அமைப்பு மற்றும் சுழற்சி இயக்கம் போன்ற அத்தியாயங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

(நபின் கார்க்கி ஆகாஷ் பைஜுவின் தேசிய கல்வி இயக்குனர் (மருத்துவம்))


source https://tamil.indianexpress.com/education-jobs/neet-ug-2024-check-important-chapters-physics-chemistry-and-biology-4523307

கேரளாவில் தேர்தல் ஆணையம் நடத்திய முதல் இ.வி.எம் சோதனை: உச்ச நீதிமன்றம் தடை விதித்தன் பின்னணி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (EVM) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) தெளிவான ஒப்புதல் முத்திரையைப் போட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் உள்ள பாரூர் சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டபோது, ​​​​நீதிமன்றம் தேர்தலை தள்ளிவைத்து, 85 வாக்குச் சாவடிகளில் 50 இடங்களில் மறுவாக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. 

முதல் பரிசோதனை

ஆகஸ்ட் 1980 இல், எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) அரசியல் கட்சிகளுக்கு ஒரு முன்மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தை வழங்கியது.

1982 ஆம் ஆண்டில், கேரளாவில் அந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது பாரூர் தொகுதியில் உள்ள 84 வாக்குச்சாவடிகளில் 50 வாக்குச்சாவடிகளில் இந்த இயந்திரம் ஒரு முன்னோடி திட்டமாக பயன்படுத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) அறிவித்தது. இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை, ஆனால் தேர்தல்கள் மீதான "கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு" அதிகாரத்தை வழங்கும் பிரிவு 324 இன் கீழ் ECI அதன் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது.

மே 20, 1982 அன்று அறிவிக்கப்பட்ட முடிவுகளில், சிவன் பிள்ளை (சிபிஐ) 123 வாக்குகள் வித்தியாசத்தில் அம்பட் சாக்கோ ஜோஸை (காங்) தோற்கடித்தார். பிள்ளை பெற்ற 30,450 வாக்குகளில் 19,182 வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி வாக்குகள் பதிவாகின.

ஜோஸ் விசாரணை நீதிமன்றத்தில் எந்திரங்கள் மூலம் வாக்களிப்பதன் செல்லுபடியை உறுதிசெய்து, தேர்தலின் முடிவை எதிர்த்துப் போராடினார். ஜோஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அங்கு நீதிபதிகள் முர்தாசா ஃபசல் அலி, அப்பாஜி வரதராஜன் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? 

சட்டப்பிரிவு 324 இன் கீழ் அதன் அதிகாரங்கள் பாராளுமன்றத்தின் எந்தவொரு சட்டத்தையும் முறியடிக்கும் என்றும், சட்டத்திற்கும் ECI இன் அதிகாரங்களுக்கும் இடையில் முரண்பாடு இருந்தால், சட்டம் கமிஷனுக்கு அடிபணியும் என்றும் ECI வாதிட்டது. 


இதற்கு பதிலளிக்கும் விதமாக, நீதியரசர் ஃபசல் அலி எழுதுவார், “இது மிகவும் கவர்ச்சிகரமான வாதம், ஆனால் ஒரு நெருக்கமான ஆய்வு மற்றும் ஆழமான விவாதத்தில்… கலையை படிக்க முடியாது. 324 அத்தகைய ஒரு பரந்த மற்றும் uncanalised சக்தி." வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது என்பது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு சட்டமன்ற அதிகாரம் (பிரிவு 326 மற்றும் 327), ECI அல்ல என்று பெஞ்ச் ஒருமனதாக கூறியது.

ஆட்சியின் பின்விளைவு

மே 22, 1984 அன்று ஒரு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது, அதில் ஜோஸ் வெற்றி பெற்றார். ஆனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றிய எண்ணம் கைவிடப்படாது.

1988 ஆம் ஆண்டில், பிரிவு 61A ஐச் செருகுவதற்காக தேர்தல் சட்டம் திருத்தப்பட்டது, இது வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் தொகுதிகளைக் குறிப்பிடுவதற்கு ECI ஐ அனுமதித்தது.

ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் EVMகள் பயன்படுத்தப்பட்டன. இது 1999 இல் 46 மக்களவைத் தொகுதிகளாக விரிவுபடுத்தப்பட்டது, 2001 இல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தல்கள் முற்றிலும் EVMகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன.

2004 லோக்சபா தேர்தலின்போது, ​​543 இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டன.

source https://tamil.indianexpress.com/explained/sc-junked-the-ec-first-evm-experiment-in-kerala-4523088

நீலகிரி; ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு:

 

 நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதகமண்டலத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சீல் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அங்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காவல்துறை என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி, 173 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமை திடீரென்று வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தன.

இது குறித்து  மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா விளக்கம் அளித்துள்ளார். அதில், “அதிக வெப்பம் மற்றும் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழந்துள்ளன” என்றார்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 200 சதவீதம் பாதுகாப்பாக உள்ளது” என்றார். மேலும் காட்சித் திரையில் மட்டும் பிரச்னை ஏற்பட்டதாகவும், பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அப்படியே உள்ளன என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/district-collectors-explanation-regarding-the-failure-of-cctv-cameras-in-the-nilgiri-voting-machine-room-4523314

முன்னாள் பிரதமர் மகன் மீது பாலியல் வழக்குப் பதிவு; யார் இந்த ஹெச்.டி. ரேவண்ணா?

 முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது பேரனும், ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28,2024) பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களது சமையல்காரர் அளித்த புகாரின் பேரில் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் ஆணையத்தின் தலைவி டாக்டர் நாகலட்சுமி சவுத்ரி அரசுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, பிரஜ்வல் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை கர்நாடக அரசு இன்று அமைத்துள்ளது.

33 வயதான பிரஜ்வல் ஹாசன் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக உள்ளார். இந்த மக்களவை தொகுதியில் ஏப்.26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மதசார்பற்ற ஜனதா தளம் (JD(S) கடந்த ஆண்டு செப்டம்பரில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தது நினைவு கூரத்தக்கது.


source https://tamil.indianexpress.com/india/former-minister-h-d-revanna-booked-in-sexual-harassment-stalking-case-4523350

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

என்னால் மூச்சு விட முடியவில்லை” – கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்:

 

அமெரிக்காவில்,  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டது போல் அமெரிக்காவில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் கடந்த 18 ஆம் தேதி கார் ஒன்று மின்கம்பத்தின் மீது மோதியது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரனையை மேற்கொண்டனர்.  அப்போது விபத்தை ஏற்படுத்தியவர் அருகில் உள்ள உணவகத்திற்கு ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த உணவகத்திற்கு சென்று,  விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான,ஃபிராங்க் டைசன் (53) என்பவரை பிடிக்க முயன்றனர்.  அப்போது காவல்துறையினருக்கும் ஃபிராங்க் டைசனுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : “பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது” – செல்வப்பெருந்தகை அறிக்கை!

தப்பி ஓட முயன்ற ஃபிராங்க் டைசனை கீழே தள்ளி அவரது கைகளை பின்புறமாக வைத்து விலங்கு பூட்ட முயன்றனர்.  அப்போது, ஃபிராங்க் டைசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தனக்கு மூச்சுத் திணறுவதாகவும்,  தன்னால் சுவாசிக்க இயலவில்லை என்றும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.  ஆனால், காவல்துறையினர் அதனை காதில் வாங்காமல் அவரை கைது செய்ய முயற்சி செய்தனர்.

 

இந்நிலையில், சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டது.  பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஃபிராங் டைசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து,   ஃபிராங்க் டைசன்,  காவல்துறையினரிடம் மூச்சுவிட முடியவில்லை என கூறியும்,  விடாமல் அவர் அழுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னதாக,  கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம்,  ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், காவல்துறையினரால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மினியாபோலிஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் வீடியோ இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.  தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


source https://news7tamil.live/death-ohio-man-echoes-george-floydkilling-frank-tyson-african-americam-man-usa-police.html#google_vignette