செவ்வாய், 30 ஏப்ரல், 2024

மேட்டுப்பாளையம் அருகே 46 குடிசை வீடுகள் தீயில் கருகி சேதம்!

 

மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு
46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர்
பகுதியில் 140 பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் அருகே தரிசு நிலங்கள் அதிகம் உள்ள நிலையில்,  இன்று மதியம் அந்த தரிசு நிலத்தில் திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது.

இந்த தீ காற்றின் வேகம் காரணமாக, அருகில் உள்ள மக்கள் வசித்த குடிசைகளுக்கு பரவியுள்ளது. அருகருகே வீடுகள் இருந்த நிலையில், 46 வீடுகள் பற்றி தீயில் எரிந்து சாம்பலாகின. தீ பற்றியவுடன் வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில், வீட்டில் இருந்த உடைமைகள், சமையல் சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகின.

இதனையடுத்து இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல்
அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் வீடுகள் முழுவதும் எரிந்து சேதமாகின.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.


source https://news7tamil.live/46-cottages-destroyed-by-fire-near-mettupalayam.html#google_vignette