சென்னை பல்கலைக்கழகம், ஏழை மாணவர்களும் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறும் வகையில் ‘சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம்' ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-11 கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வரும் (2024-25) கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இலவச கல்வி திட்டம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் விவரம் சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பம், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/madras-university-free-education-scheme-welcomes-application-from-class-12-students-4506687